Wednesday, November 27, 2019

ஆயுத பூசையும் அழகிகளும்-பொன்.காந்தன்


நேற்றுத்தான் ஆயுத பூசை
என் மடிக்கணனியையும்
ஏதோ நெடுநாளாய் இழுபடும் கைபேசியையும்
பட அறையில் வைத்து பத்திக்குச்சியை கொழுத்தினேன்
இறுவட்டை செருகி
சகலகலா வல்லிமாலையை இயக்கினேன்
ஒருவரும் இல்லை
நானும் அந்த அழகிகள் மூன்று பேரும்தான்
எதை வேண்டுவது
மறுபடியும் மறுபடியும்
என் தாய் மண்ணை பாடும் வரத்தை கேட்டேன்
மறுக்கப்பட்டதா ஏற்கப்பட்டதா
இதுவரை எந்தத் தகவலும் இல்லை
தேவிகளின் மௌனத்தை சாதகமென நினைக்கிறேன்
பாடுவதற்கு முதற்பொருளாய்
மாலதிதான் வாசலில் தோன்றுகிறாள்
காலவெளி பெரிதாகிற்று
அந்தக் கந்தர்வ தேவதையை கோப்பாய் வெளி தழுவி
நீள்விழியில் நெருப்பு சுமந்தவள்
காலவெளியில் இன்றிருந்தால்
அந்தக் கணக்கு எப்பிடி இருந்திருக்கும்
தாலி கட்டிய கழுத்தோடு
வேலிக்குள் இருந்து புறப்பட்டு
வெங்காயமும் பச்சை மிளகாயும் வாங்கி
ஒரு வரலாறு
இரவோடு முடிந்திருக்குமா
வட்ஸப் குழுக்களில்
மாலதி வெறும் வாயை சப்பி இருப்பாளா
அப்படி இருந்திருக்க மாட்டாள்
இப்போதும்
இருளுக்குள் ஒளிதேடும் பறவையாய்
சத்தியமாய் இருந்திருப்பாள் என்கிறது ஆட்காட்டி வெளி
கருவிலையே திருவுடையாள் என்கிறது காலமும்
அது எக்காலத்தில் வாழ்ந்தாலும்
தன் இயல்பை காட்டும் என்கிறது ஒரு அசரீரி
என்ன நம்பிக்கையில்
தன்னைக் கொடுத்தாள் மண்ணுக்கு மாலதி
கண்ணை கசக்கிப் பார்கின்றேன்
ஒரு கறுமாந்திரமும் இல்லை
ஒன்றையேனும் காட்டுவதற்கு அந்த உத்தமிக்காய்
பழையபடி மாலதிகள் படைத்த பிரபஞ்சம்
கைக்குட்டையாகி கசங்கிக்கிடக்கிறது
எங்கேனும் சில விழிகளுக்குள்
எட்டிப்பார்கிறாள் மாலதி
ஒரு பொழுதில்
அவள் தோளில் சாய்ந்து பெருமூச்சுவிட்டது
ஈழ சாம்ராஜ்ஜியம்
அந்தக் காதலில் புல்லரித்திருந்தது நிலம்
எங்கு தொட்டாலும் புதுமைப்பெண்
எவள் மனதில் இருந்தும் ஒரு தீராநதி
சமர்க்களங்களில இருந்தும் ஈழ மாதை
சந்தணமாய் ஏந்தி வந்தோம்
தீயின் விழிகளுக்குள்தான் ஒரு திளைப்பும் இருந்தது
இரங்குதல் இருக்கவில்லை
அவளே இறங்கினாள் கடலில்
அலையும் நுரையும் அவளே ஆனாள்
வரைய முடியாது பெண்ணை
வானத்துக்கு அப்பாலும் இருக்கிறாள்
தேடிக்கொண்டிருக்கிறேன்
அந்தத் திகைப்பையும் தித்திப்பையும்
மாலதிகளின் குரலின் திசையில்
ஒரு மரகதத் தேர் இழுத்துச்செல்கிறது என்னை
வாழும் வரை பாடுவதற்கு
மண்மீதான பெண்களின் இரகசியம் தேடி

No comments:

Post a Comment

பிரசாதமே!!

  கொடிய போர் கண்ட நகரம் போலில்லை காலிழந்தவனுக்கு கால் முளைக்கும் உணர்ச்சியை கண்ணிழந்தவனுக்கு ஒளியூறும்  மனத்தை உண்டாக்கவில்லை யாரேனும் பறக்க...