Friday, December 6, 2019

குங்கும பூவின் வர்ணத்தில் ஒரு மின்னல்!-பொன்.காந்தன்



இன்று சற்று பெரிய குவளை
ஆவிபறக்கிறது மேசையில் தேனீர்
இன்று மின்னலின் நிறம்
எனக்கு பிடித்தமான ரோஜாப்பூ நிறமென்று
மழை பொய் சொல்லி
என்னை வெளியே அழைக்கப்பார்க்கிறது
ஈசல்களும் நுழையாமல்
அடித்துக் கதவை சாத்திவிட்டு
ஒரு பெரிய கம்பளிப்போர்வைக்குள்
எவளோ ஒருத்தியை
கனவு காணப்போவதாக
மழைக்கு என் மீது கோபம்
சின்ன வயதில்
அம்மணமாய் ஓடிவந்து
இப்படி ஓர் இரவுப்பொழுதில்
வாசல் படியில் நின்றபடி
தாழ்வாரத்தில் பெய்து விட்டு
ஓடியதை
எல்லோருக்கும் சொல்லப்போவதாக
மழை வெளியே
வெகுநேரமாய் மிரட்டிப்பார்க்கிறது
அயல்வீட்டு மொட்டை மாடியில் காயும்
பட்டுத் தாவணி நனையாமல்
கொட்டித்தீர்க்கும்
மாஜிக்கை பார்க்கும்படியும்
அழைப்பு விடுகிறது மழை
எப்படியோ
புதிய இரகசியங்களும் சில
மழைக்குத் தெரிந்திருக்கிறது
தேனீர்க் குவளையை பார்க்கிறேன்
அடியில் கொஞ்சம்
அந்தரங்கம் பதுக்கப்படுவதாக உணர்வு
பின்னொரு மழை நாளில்
மழையும் தேனீர் குவளையும்
பெரிய கம்பளிப்போர்வையும் ஒன்றாகி
சிலுமிசங்களை வைத்து
கவிதைகளை கப்பமாக கேட்கக்கூடுமோ
வெட்கத்தையும்
பிடிவாதத்தையும் விட்டுவிட்டு கேட்டேன்
குங்குமப்பூவின் வர்ணத்தில் மின்னலோடு
குழிவிழுந்த கன்னப் புன்னகையாய்
உன்னால் பெய்ய முடியுமா மழையே!

No comments:

Post a Comment

பிரசாதமே!!

  கொடிய போர் கண்ட நகரம் போலில்லை காலிழந்தவனுக்கு கால் முளைக்கும் உணர்ச்சியை கண்ணிழந்தவனுக்கு ஒளியூறும்  மனத்தை உண்டாக்கவில்லை யாரேனும் பறக்க...