மூற்றேக்கர் வளவு
முழுதும் வாழைத்தோட்டம்
சீனி கதலி செவ்வாழை
கப்பல் மொந்தன் இரதை
கன வகையறா நீளம்
காணி நடுவில் கிணறு
கப்பிளீன் சாவி
கறுத்தப்பைப்புக்கள்
அப்புறம் பெற்றோல் சூப்பி
பெரிய வாட்டர் பம்
எட்டு முழத்தண்ணிக்குள்
இறக்கிய பைப்பு
கட்டியொரு கயிறும்
கட்டையுடன் இறுக்கியேற்பாடு
மொட்டந்தலைக்கு மேல்
துவாய் சுத்தி
தோட்ட மம்பட்டியோடு நின்று
கட்டியிருந்த கயிறவிழ்த்து
கால் போத்தல் மூடியில்
காப்றேற்றருக்கு விட்டொத்த
விட்டுவிட்டுத் தொடங்கி
விக்கி தண்ணியுமிழந்து
கொட்டத்தொடங்கும் பம்
குதித்தோடும் வாய்க்காலில்
கட்டிப்பாத்தி நிரம்பி
களிப்புற்று வாழைகள் சிரிக்க
குட்டிகள் குலைகள்
குருவிக்கூடுகளும்
பொத்திகள் பூக்கள்
முற்றிய பாரத்தில் சரிந்த
முகிழ்வெடித்த கப்பல்கள்
வெட்ட வேண்டிய சரைகள்
எப்படியோ சில குருமன்
எட்டடிக்கு மேலும் சில
ஒட்ட கிணறு வற்றும்வரை
ஒன்றிரண்டு மணிநேரம்
விட்டுவிடாத இறைப்பு
முட்டிக்கடைசிப் பாத்தி
முக்குளிக்க காற்றில்
நிப்பாட்டென்று குரல் கேட்கும்
எட்டி நின்றபடி
இழுப்பாள் பிளக் வயரை
பட்டென்று நின்றுவிடும்
இதற்கிடையில்
பக்கத்து வீட்டில் சண்டை
பரபரத்தொரு முட்டையிட்டு
கொக்கரித்த பேட்டின் சத்தம்
கட்டையில் சுழலும்
குட்டிநாயின் குரைப்பு
குலுக்கி மணியடித்துப்போன
குச்சி ஐஸ்பழப்பெட்டி
குசினுக்குள் நடந்த
இரும்புச்சட்டி வறுவல் துருவல்
தேங்காயுடைப்பு
மாந்தோப்பில் நின்றிருந்தேன்
மாம்பழம் வேண்டுமென்றாரென்ற
மனதுக்கினிய றேடியோ பாட்டு
காற்றுத்தட்டி விழுத்திய
பானைப்பந்தல் சருவம்
குக்குறுப்பான் கொண்டைக்கிளாத்தி
மீன்பெட்டி கட்டிப்போன
வண்டியும் கூட உள்ளடக்கம்
எட்டு முழத்து தண்ணீர்
இழுத்தெடுத்து
புட்பாயில் தெரியும் கிணற்றில்
பிள்ளைப்பூச்சிகள் சுற்றும்
கிட்டி அடிக்கும் போது
விழுந்த புள்
விடியவிடிய தேடியும்
காணாமல் பொன
வெள்ளை தேத்தத்தண்ணி பேணி
பேனா மூடி
புளியம்பொக்கணையில் வாங்கிய
பொம்மையின் கை
எல்லாம் தெரியும்
எகிறும் பல ஊற்றுக்கள்
உள்ளத்திலொரு சேற்றுமணம்
ஒரு நினைவாய் படியும்
நல்லபிள்ளையாய் ஒன்று
கண்வெட்டாமல்
இரசிக்கும் கிணற்றை
நல்ல இறைப்புத்தோட்டத்தில்
வண்ணத்துப்பூச்சிகள் பறக்கும்
சின்னப்பாதங்கள்
பாத்திகளிலெல்லாம் சிரிக்கும்

No comments:
Post a Comment