சின்ன வயதில்
பால் வாங்க வந்தேன்
இரண்டு ஒழுங்கை கடந்து
உன் வீட்டிற்கு
அம்மம்மா பால் கறப்பாள்
நீ மாட்டை தடவியபடி நிற்பாய்
சில வேளை
நீயும் பனியகலா காலைகளில்
எங்கள் வீட்டிற்கு வந்தாய்
பால் போத்திலோடு
நீ ஒரு கட்டைச்சி
கறுப்பி
கறுப்பியென்றால்
கறுப்பிற்கே நீதான் இலக்கணம்
வாயாடி
வாயாடியென்றால்
முற்றுப்புள்ளியற்ற
வசனங்களுக்கு சொந்தக்காரி
அப்போது உனக்கு
ஏழெட்டு வயதிருக்கும்
மாடு பட்டி அம்மம்மா
பள்ளி கோயிலென்று
உன் பாதங்கள் நடந்தன
பிறகொரு நாள்
சாமத்தியப்பட்டு விட்டதாய்
வீட்டில் பேசிக்கொண்டார்கள்
என் அம்மா
முட்டைகளும் நல்லெண்ணையும்
மாட்டுத்தாள் பையிலிட்டு
உங்கள் வீட்டிற்கு வந்தாள்
பிறகு பால் வாங்க வந்தேன்
உன்னை
மாட்டருகில் காணவில்லை
பிறகு
சாமத்திய வீட்டுக்கு வந்தேன்
நீ பன்னீர் செம்பை
கையிலேந்தியபடி நின்றாய்
ஆலாத்தி தட்டில்
என் அம்மாவும்
ஒரு பக்கம் பிடித்தார்
வெற்றிலையில் வைத்து
ஒரு நூறு ரூபாய்
நான் தந்தேன்
காற்சட்டை பையனாய்
உன்னை பற்றிய
எந்தவித எதிர்பார்ப்புக்களையும்
மலர வைப்பவளாக
நீ இருக்கவில்லை
குமரிகளான பின்
ஒரு புதிய கதை ஆரம்பிக்கலாம்
ஒழுங்கைகளில்
பள்ளிகளில் என்று
அது பூத்திருப்பதும் இயல்பு
மாட்டுப்பட்டி பால்
பள்ளிக்கூடம்
அந்த கிராமத்து ஒழுங்கை
பிறகு......
பிறகு எங்களூரில்
வெடிச்சத்தங்கள் நெருங்க
அந்த முதல் இடப்பெயர்விலும்
அடுத்து ஊரில்
சில நாளிருக்க ஓடியபோதும்
அதில் நீயும் கூடவந்தாய்
திரும்பியபோதும்
எங்கள் இரு வீடும்
ஒன்றாய்த் திரும்பினோம்
எங்கள் வீட்டின்
எல்லா புதினங்களும்
உங்கள் வீட்டின் புதினங்களும்
இருவீடும் எப்போதுமறிந்தன
தவணைப் பரீட்சையில்
உனக்கு என்ன புள்ளிகள்
நான் எத்தினையாம் பிள்ளை
ஒரு மணல் கும்பியில்
உங்கள் வீட்டில் அம்பலமாகும்
பிறகு
நீ என்ன செய்கிறாய்
நான் என்ன செய்கிறேன்
நீ எங்கிருக்கிறாய்
நான் எங்கிருக்கிருக்கிறேன்
அறிய முடியாத காலமும்
இடப்பெயர்வுகளில் ஆயிற்று
உன்னை எப்போதாவது
நினைத்தேனா இல்லை
உனது எல்லைகள் எதுவாயிருக்கும்
அதையும்
நான் நினைத்ததில்லை
நீ எந்தவிதத்திலும்
எதிர்பார்ப்பை உருவாக்கியதில்லை
பிறகு ஒரு நாள்
இன்னொரு ஊரில்
வேலியோர நிழலொன்றில்
பத்திரிகை புரட்டிக்கொண்டிருந்தேன்
அதில்
உனது புகைப்படமும் வரலாறும்
ஒரு கட்டைச்சியின் உயரம்
வானமளவு இருந்தது
ஒரு கறுப்பியின் வர்ணம்
இலைகளில் மலர்களில்
முகில்களில் தெரிந்தது
பன்னீர் செம்பை ஏந்திய
புகைப்படத்தை
மீண்டும் பார்க்க நினைத்தேன்
அந்த புன்னகைதான்
என் முன்னே நிலமுடுத்திருந்தது
பால்கார வீட்டுப் பெட்டையை
கொண்டாடுவது எப்படி!
No comments:
Post a Comment