Sunday, July 18, 2021

ஒரு நாள்-பொன்.காந்தன்



எதேச்சையாக

தெருவோரம் திரும்பும்போது
எருக்கலை மூக்குத்திகள்
குறும்புச் சிறுமிகளின்
புன்னகையாய் தோன்றின
இக்கணத்தின் யாவையும்
எறிந்து விட்டு உட்காரும்போது
கொண்டல்கள்
திருநாளொன்றை தர
இப்போதும் தயாராயிருந்தன
தவறவிட்ட
அழைப்புக்களின் மேல்
தோட்டத்து பட்டாம் பூச்சியமர்ந்தது
எந்த பொய்களுமற்ற
தூய வண்ணத்தில்
வாழ்க்கை ஒரு கணம் சிறகடித்தது
இதயத்திலிருந்து
ஏதேதோ நழுவுகையில்
அந்திவானத்தின்
தேவதை ஏறியமர்கிறாள்
மந்தை மேய்ப்பவன்
சொர்க்கத்தை நோக்கி சாய்க்கிறான்
மலைப்பாறைகளில் பட்டு
திரும்பிட
நல்ல வார்த்தைகள் கிடைத்தன
கடலோர மணலில் வரைய
ஒரு அழகிய முகம் தோன்றியது
சுண்டல்காரனின்
புன்னகையோடு வீடு திரும்ப
இனிய மனம் வாய்த்தது
நாளை
சொல்லிக்கொள்ள மீண்டும்
ஒரு நாளை சேகரித்தேன்

No comments:

Post a Comment

பிரசாதமே!!

  கொடிய போர் கண்ட நகரம் போலில்லை காலிழந்தவனுக்கு கால் முளைக்கும் உணர்ச்சியை கண்ணிழந்தவனுக்கு ஒளியூறும்  மனத்தை உண்டாக்கவில்லை யாரேனும் பறக்க...