படலை திறந்து
பக்கமிரண்டையும் பார்க்கிறேன்
வெக்கத்தில் நெளியும்
விடலை கட்டுடலாய் வீதியழகு
நெட்டி முறித்துப் படுத்திருப்பதாய்
நிம்மதியாய் இருக்கிறது தெரு
நெடுமூச்செறிந்து நித்திரையும்
கலைபடும் பேரூந்துக்கிடையில்
நெரிபடும் நெஞ்சுக்கு
ஒத்தடமாயும் லாக்டவுண்.
உச்சா போகிறவரிடமிருந்து
தப்பித்துக் கிடக்கிறது தார்ச்சாலை.
கொப்புநிழல்களும்
குறுக்குத் தெருகளும்
கட்டிப்பிடித்து கலக்கின்றன.
எவருமில்லாச்சாலையும்
இலவச வைத்தியம் இதயத்துக்கு.
கண்டி யாழ் நெடுஞ்சாலை
கள்ளமண் பட்டியல் தருகிறேன்
கவிதையாக்கு என்கின்றது.
கஞ்சா அடித்தவரின் கால்படுகையில்
கவலையில் கிடந்ததாம் வீதி
கண்ணால் மயக்கித் திரும்பும்
காதலர்களை இழந்ததாம் முடக்குகள்.
தன்னால் மறக்க முடியாமல் இருப்பது
தறுதலைகளின் ஓட்டமும்
தடம்புரண்டு முடிந்த ஆட்டமுமாம்.
பின்னால் வருகின்றவன்
முந்தக் கூடாதென்று
முறுக்கிறதை சபிக்கிறது தெரு.
கொடி காமத் தட்டிவானின்
குலுக்கலில்லாமல்
வரணித்தெருவுக்கு வாழ்வு கசக்குதாம்.
எருமண வண்டிலை தொலைத்து
ஏதோ செய்கிறதாம் மனசு.
திருமணத்துக்கு பிடிக்கும்
ஏபோட்டியின் உரசல் இதமாமன்று.
கடத்தலுக்கு வாழ்க்கைப்பட்டதாய்
இன்று கண்ணீர்விடுகிறது சாலை.
குடத்தனை மண்ணை
குழறகுழற கொண்டு போனாராம்.
கொக்காவிலிலும்
குடைந்தெடுத்து பறக்க
அங்கங்கு தப்பி
சிலது அழுது கொண்டும் நின்றதாம்.
கௌதாரி முனையான்போல்
கந்தர்வ வெள்ளை தெரியாமல்
கடத்தினவாம் மூடி கழுசறைகள்.
பென்னாம்பெரிய கதையோடு
பேச்சுவராமல் தவிக்கிறது தெரு.
காடழிப்பவன் போகிறான்
காலிடற வைக்க கனவு காண்கிறது.
கள்ளமண்காரரே
கல்குற்றி காற்றுப் போக கடவாயாம்.
ஓரங்களில் மரங்கள் நடும்
உள்ளங்கள் சில
பட்டுக்கம்பளமாய் மாறி
பாதங்களை வருட வரவாம் தெரு.
பாலைப் பழச் சிறுவனுக்காய்
பஞ்சணையாய் மாறுமாம்
நாவல் மரத்தடியில்
காவல் இருக்குமாம் கலகலப்புக்கு.
ஆவல் மேலிட சாலை
ஆம்புலன்சுகளின்
அலறலின்றி
அமைதி தேவதையின் பாடலோடு
நீண்டு விரிந்திருக்க தவம்.
காற்றுக்கும் ஓரத்தில்
கடைதிறக்கும் நாளின்றி
வீட்டுக்கு வீடிருந்து
நல்ல சுகம் நாமென்று
தீட்டும் தேவ மடலே வரமாம்.
செண்டுகளாய் சரிந்த கிளைகள்
செங்கனி விருந்தோடு
எங்ஙணும் காணத் தெருவுக்கு அவா.
எப்போது நிலவிரவில் நடந்து
நெடுவழியில் மகிழ்வாய்!
No comments:
Post a Comment