Monday, June 28, 2021

குஞ்சியப்பு-பொன்.காந்தன்

ரொம்பக்காலமாக எனக்கு அவரின் பெயர் தெரியாது. எனக்கு தெரிந்த அவரின் பெயர் கார்குஞ்சியப்பு. அவருடைய அப்பா அம்மா அவருக்கு கார்க்குஞ்சியப்பு என்றுதான் பெயரிட்டார்களென சின்ன வயதில் என் அனுமானமாக இருந்தது அந்த வயதில் அதை ஆராயவேண்டும் போல தோன்றவில்லை.கிளிநொச்சியில் இருந்து கரவெட்டிக்கு போய்வரும்தெல்லாம் கன காலமாக எனக்கு கார்க் குஞ்சியப்புவாகவே இருந்தார்.அவரைவிடவும் குஞ்சியம்மா குஞ்சியப்புவும் இருந்தனர்.ஆனால் குஞ்சியப்பு ஒரு நல்ல உறவு முறைச்சொல் அந்த வார்த்தையில் அந்நியோன்யம் அதிகம்.அதில் பாசம் திரண்டிருப்பதுபோல ஒரு தோற்றம் இருக்கும்.பிறகு கொஞ்சம் நான் வளர்ந்த பின்பு ஏதோ ஒன்றிரண்டு சந்தர்ப்பங்களில் அவருடைய பெயர் கிட்டிணர் என்பது தெரியவந்தது.ஆனாலும் கிட்டிணர் என்பதை விட அவர் உயிரோடு இருக்கும் நாளிலும் இறந்த பின்பும் கார்குஞ்சியப்புவாகவே உறவினர்களுக்கு இடையில் எப்போதும் இருந்தார்.

கார்குஞ்சியப்பு இளையபிள்ளையின் கணவர்.அண்மையில்தான் இளையபிள்ளை ஆச்சி இறந்திருந்தார்.குஞ்சியப்பு இரண்டாம் உலகப் போர்க்காலத்தில் றோயல் பிரிவில் சிங்கப்பூரில் கார் ஓட்டுனராக இருந்தார்.அந்தகார்தான் அவர் பின்னாளில் வடமாராட்சி வாழ்வியலில் இருந்து வன்னி மட்டக்களப்பு என விரிந்த வாழ்க்கை பயணத்தில் நீண்டு வாழ்வு முடியும்வரை பிரிந்துவிடாது ஒட்டிக்கொண்ட பெயராக இருந்தது.கார்க்குஞ்சியப்புவை போலவே நெருங்கிய உறவினர்கள் பலருக்கும் கார்களோடு பிணைப்பு தொடர்ந்தது.என்னுடைய பெரியப்பா குணமும் முதலில் கார் ஓட்டினார் பின்னாளில் சிரிபி குணமாக கிளிநொச்சியில் அறியப்பட்டார்.என்னுடைய தந்தையாரும் போக்குவரத்து சபை நடத்துனராக இருந்தார்.மாமா முறை உறவினர்களும் சாரதிகளாக மாறினர் .ஏன் சின்ன வயதில் பால்வாங்கபோனது றைவர் தங்கராசா வீடு .சக தோழி கெளசலாவின் தந்தை முத்துக்குமாரு கொண்டக்ரர் நோர்வேயில் இருக்கும் நம் ஊர்க்கார தம்பி பிரதீபனின் அப்பா கந்தப்பு பஸ் றைவர்.ஏதோ ஈர்ப்பில் இவை நிகழ்ந்தனபோலும்.
குஞ்சியப்பு தன் இளம்பருவத்தில் ஓட்டிய காரில் இருந்து அவருடைய வாழ்வு முடியும்வரையும் இரண்டு மூன்று தலைமுறை கார்கள் விதம்விதமாய் வந்துவிட்டன.இப்போது நான் என் சின்ன வயதில் பார்த்த கார்களை இன்று தெருவில் பார்ப்பது அரிதிலும் அரிது.சிலர் அந்த கார்களை பத்திரமாக தங்கள் வீடுகளில் ஒரு நூதன காட்சிப்பொருளாக வைத்திருக்கினர்.காரணம் காரின் மீதுள்ள தீராக்காதல்.கிளிநொச்சியில் என் சின்ன வயதுப்பருவத்தில் விரல் விட்டு எண்ணக்கூடிய கார்கள் ஓடித்திருந்தன.அதுவும் எப்போதாவதுதான் காணமுடியும்.கார்கள் தெருவில் போவதும் கந்தசாமிகோவில் திருவிழா கொடியேறுவதும் இரண்டும் எங்களுக்கு சின்ன வயதில் ஒன்றுதான்.இன்றைக்கு சிக்னலுக்காக காத்திருக்கும் ஊர்திகளில் அதிகமானவை கார்கள்தான்.அதில் அழகு என்று தனித்து ஒன்றை என்னால் வர்ணனை செய்ய முடியிவில்லை.மாரியில் புறப்படும் ஊருபட்ட அட்டைகளைபோல அவை விளைந்துவிட்டன.இன்றைய கார்களுக்குள் கதைகள் தேடினால் பெரும்பாலும் ஒரே மாதிரிக்கதைகளாகத்தான் இருக்கும்.ஆனால் அன்று எங்கள் புளுதிவீதிக்கிராமத்தில் பள்ளம் திட்டிகளில் மெதுவாக கண்டிவீதியில் ஏறி பெற்றோல் நறுமணத்துடன் போகும் கார்களை கண்வெட்டாமல் பார்த்துக்கொண்டு நின்றிருக்கிறேன்.ஏனெனில் கார் புறப்பட்டு போகின்றதென்றால் அங்கே அழகிய கதையிருக்கும்.
சம்மந்தம் பார்க்கப் போவதற்கு அன்று வாடகைக்கு அமர்த்திய காரிடம் கதை கேட்டால் ரொம்ப சுவாரஸ்யமாக இருக்கும்.எத்தணை பவுண் காணி வீடு வளவு வயல் காணி பெட்டையின் அடக்கம் ஒடுக்கம் குலம் கோத்திரத்தில் இருந்து கார் அறிந்த கதைகள் ஏராளம்.புது மாப்பிள்ளை பொம்பிளைக்கு முதல் பயணம் அந்தக்காரில்தான் அது ஒரு அலாதியான அனுபவம். இன்றும் கார்களில்தான் புது மணத்தம்பதிகளின் பயணம் எனினும் அன்றைய காட்சி அற்புதம். ஏனெனில் அன்றைக்கு கைத்தொலைபேசி இல்லை.பத்திரமாய் வந்து சேர்ந்தோம் என்றும் அறிவிக்கவும் எப்போது மறுபடி திரும்பி வருவோம் என்று பதிலுரைக்கவும். ஆகவேதான் காரில் ஏறும்போது வழியனுப்புதல் ஒரு வாழ்க்கையின் நினைவழியா நெஞ்சக்கதையாக இருக்கும். அதில் கார் தேராகவும் சாரதி தேரோட்டியாகவும் இருப்பார்.இருவீட்டார் ஒப்புதலுடன் ஈடேறும் கலியாணங்களுக்காய் ஓடும் கார் ஒரு வீட்டோ இரு வீட்டோ மறுப்பால் கைகோர்க்கத் துடிக்கும் காதலர்களை ஆரும் அறியாமல் அர்த்த சாமத்திலும் ஏற்றி எட்டுக்கட்டைக்கு அப்பால் இதயங்களை இணைத்துவைக்கும் காரியங்களையும் செய்தன.அத்தோடு இருவீட்டார் சார்பிலும் சண்டியர்களை ஏற்றியிறக்கும் சமரக்களவேலைகளிலும் ஓழுங்கை மாறி ஒழுங்கை ஓடித்திருந்தன.
கிளிநொச்சியின் பழைய நினைவுகளில் ஒரு கார்மீது தீராக்காதல் எனக்கிருந்தது.ஒரு தலைக்காதல்தான்.கார் என்னை காதலித்ததா என்பது இன்றுவரை தெரியாது.முதலாம் இரண்டாம் வகுப்பு கிளிநொச்சி குளத்தடி பள்ளியில் படிக்கும்போது பள்ளிக்கு முன்பு ஒரு விடுதியில் ஒரு கார் நின்றது.என் சகபாடிகள் வைத்த பெயர் ஆமைக்கார்.அது ஆமைபோல இருந்தது.நீல நிறத்தில் இருந்தது.பள்ளிவிட்டு வாசலுக்கு வரும்போது நான் மட்டும்தான் காதலிக்கிறேன் என்று நினைத்தேன் என் சகபாடிகளுக்கும் அதன் மீது கண் இருந்தது.அந்த காருக்கு என்ஜின் பின்னே இருந்தது.பின்னே இன்ஜின் இருக்கும் காரின் பெயர் கூட தெரியாமல் காதலித்தோம்.அந்த தீவிரமான காதலுக்கு காரணம்.பெரும்பாலான சகபாடிகள் ஏழைகளின் பிள்ளைகள் நடந்தே பள்ளிக்கு வருகின்றவர்கள்.நடுத்தர குடும்பங்கள் சைக்கிளில் வருகின்ற சிலர்.பள்ளியில் சோதனைக்கு கைப்பணிக்கு மட்டுமே காட்போட்டில் கார் செய்து எல்லையற்ற மகிழ்ச்சியுடன் ஏந்திவரும் குடிசைக்கொழுந்துகள்.ஆனாலும் அந்த பள்ளிக்கு முன் நின்ற கார் ஒரு கனவை அந்த சின்ன மனங்களில் உருவாக்கியது என்பதுதான் நிஜம். பின்னாளில் நிஜமாக கார்களை ஓட்டிக்கொண்டு கிளிநொச்சி நகரில் போய்க்கொண்டிருந்தார்கள் சகபாடிகள்.
அன்றைய காலங்களில் எங்கள் பட்டணத்திலும் கிராமத்திலுமாக ஓரிருவர் கார் வைத்திருந்தார்கள் சில வைத்தியர்கள்.சில செல்வந்தர்கள்.எங்கள் வீட்டுக்கு முன் திருவையாறில் இருந்து துரையண்ணையின் கார் கடந்து போகும். முத்தையர்வீட்டிலும் கார் நின்றது.ஆயினும் முதன் முதலில் ஏற வாய்ப்புக்கிடைத்தது எங்கள் வீட்டுக்கு அயல் சந்தியில் இருந்த இராசையரின் மூத்த மகன் ராசண்ணன் வைத்திருந்த காரில்தான்.பள்ளிக்குப்போகும்வேளை அந்தக்கார் எங்களை கடக்கும்.அதில் இருந்து அற்புதமான வாசனை திரவியங்கள் மணக்கும்.எப்போதும் கார் பளிச்சிட்டபடி இருக்கும்.மெல்லிய ஒலியுடன் மிதந்தபடிபோகும்.
ராசண்ணன் அந்த காரில் எவ்வளவு காதல் வைத்திருந்தார் என்பது ஒரு நாள் வரும் வழியில் தானாக நின்று எங்களுக்காக கதவு திறந்து ஏற்றியபோதுதான் தெரிந்தது.அது காரே அல்ல கந்தர்வ வாகனம்.அதற்கு மகிழூந்து பெயர் வைத்தவர்கள் காரின் காதலர்கள் அன்றி வேறென்ன சொல்ல.குஞ்சியப்பு மறைந்தாலும் அவரோடு ஒட்டிய மகிழூந்து நினைவின் மகிழ்ச்சி அற்புதம்

No comments:

Post a Comment

பிரசாதமே!!

  கொடிய போர் கண்ட நகரம் போலில்லை காலிழந்தவனுக்கு கால் முளைக்கும் உணர்ச்சியை கண்ணிழந்தவனுக்கு ஒளியூறும்  மனத்தை உண்டாக்கவில்லை யாரேனும் பறக்க...