Monday, June 28, 2021

ஒரு சுண்டுக் குரலும் உறங்காத பாலைகளும்-பொன்.காந்தன்

 


பேயனாராக
பாட்டுடைப்பொருள் வாய்த்தது
செம்புலமென சிலிர்த்த பாட்டன்
மாயோன் மேய
காடுறை உலகத்து கருவறையில்
மேயத்தொடங்கியது கனவு
ஆய்ச்சியரின் செய்யுளை எழுதுமினின்று
காட்டை சுற்றும் கருடனின் கண்ணில்
நேற்றைய காலங்கள் விரியும்
இடைச்சியர் தமிழில்
இலைகள் குளிர்ந்தனவாம்
இளவஞ்சியின் பார்வையில்
முல்லையின் பூக்கள் முகிழ்த்தனவாம்
கார்காலத்தில் பொங்கியது வனம்
காட்டாறாகியது பெருங்காலப்பாடல்
நெடும்பாலை நினைவில்
நேற்றைய பெடியனும் பெடிச்சியும்
நெடுங்காலக்கதை புதைத்து
பழைய முறிகண்டி பாண்டியன்குளம் பாலையடி
கோட்டைகட்டி தென்னியங்குளம்
வடகாட்டின் வழியெங்கும் வரிகளாய் கிளை
முறிகண்டியின் திருவீதியில்
ஒரு சுண்டுப்பேணியுடன் ஏங்கும் விழிகளுக்கு
இம்முறையும் முல்லைபொழுதின்
சித்திரை வைகாசி
சிலிர்த்துக் கொட்டியது பாலைப்பழமாய்
பட்டிணியறிந்த பாலைகள்
பருவம் தப்புதில்லை
காதில் வேப்பங்குச்சியுடன்
கானகத்தில் நுழைந்த காரிகைக்காக
பாலை
ஒரு கடகம் பழுக்காமல் விட்டதில்லை
பட்டாளமாய் பசங்களுக்காய்
கையெட்டும் கிளையில் கனிந்தன மஞ்சள்
கையிலொட்ட வாயிலொட்ட
பையில் நிரப்பி சிரிக்கும் பருவத்தில்
வல்ல பாலைகள்
வனங்களில் மகிழ்ந்தன
குமுழமுனைவரை கூட்டம் கூட்டமாய்
கொழுத்திருந்த குண்டு பழங்கள்
காட்டுத்தெருவின் விருந்தோம்பலுக்கு
கைநீட்டிக் காத்திருந்தன எப்போதும்
பாட்டை முணுமுணுத்தபடி
பாவாடைக்காரி
சேட்டைக்காரரை நோட்டம் விட்டு
நொடியில் எறுவாள் உச்சிக்கிளை
அவள் சேட்டத்தில் சிலிர்க்கும் பாலை
பாட்டத்தில்
பழுக்காமல் ஏமாற்றா கந்தவர்வம்
காத்திருந்திருந்தது
இப்பருவம் நெடுநாளாய்
காற்றடித்து கனிகள் கொட்ட
கண்ணீர் விட்டது
உச்சிக்கிளைவிழியால்
பனிக்கம் குளம்வரை பார்த்தது
பக்கக் கொப்புகள் நீட்டி
பரவியது விழிகளை புதுமுறிப்பு
கொக்காவில் முறிகண்டிவரை
ஆனையிறவேகும் பறவைகளிடம்
போனமுறை
பூநகரியில் பாலைப்பழம்விற்ற
அந்த பையனுக்கு தூதுதனுப்பியது
பருவம் தப்பாது வந்துபோகும்
பரம ஏழைகளின் முகங்களை
கண்டீராவென காகங்களிடம் கேட்டது
கருடன் வந்து சொன்னது
உருவங்கள் சிலதை கண்டேன்
உருக்குலைகின்றன
ஒரு உள்ளிருத்தல் பருவத்தால்
முல்லைத்திணையில்
பாலைகளின் கண்ணீர்
பாலைபழம் விற்று பசியாறும்
வயிற்றினை நினைத்து ஆற்றாமை
அகன்று பருத்த அசையாத பாலை
நெடும்பாலை
முதன் முறையாய் துவழ்கிறது காட்டில்
ஓராயிரம் சுண்டு பழுத்த கிளைகள்
முற்றம் வரை நீளாதா
ஆய்ச்சியர்களுக்கு ஆதாரமாய் இன்று

No comments:

Post a Comment

பிரசாதமே!!

  கொடிய போர் கண்ட நகரம் போலில்லை காலிழந்தவனுக்கு கால் முளைக்கும் உணர்ச்சியை கண்ணிழந்தவனுக்கு ஒளியூறும்  மனத்தை உண்டாக்கவில்லை யாரேனும் பறக்க...