அவனுக்கு இப்போது
மனதுக்கு
ஒரு பெரிய கவசம் தேவைப்பட்டது
இந்நாட்களில்
ஏகப்பட்ட கேள்விகள்
துளைக்க ஆரம்பித்துவிட்டன
எவரையோ நோக்கி
போகவேண்டிய கேள்விகள்
அவனை நோக்கி பாய்ந்தன
பதிலுக்காய்
இராப்பகலாய்
எங்கோ குடைய வேண்டியவை
இவனைக் குடைந்தன
முகத்துக்கு
கவசம் போட்ட நாளில்
மனதில்
முதலாவது தொற்றியது கேள்வி
இருந்தும்
பதிலற்றவர்களோடு
கூட்டத்தோடு கூட்டமாயிருந்தான்
சொர்க்கம் நரகத்திலிருந்து
தொலைவிலிருந்தது
அவன் வீடு
பட்டணத்து பேருந்திலிறங்கி
பற்றைகள் அடர்ந்த
பாதையிலிறங்கி
மணல் வெளி கடந்து
இரண்டு சிற்றாற்றில்
கட்டுமரம் வலித்து
குளத்து அணையில் ஏறி
குச்சொழுங்கைகளில் நடந்து
ஒற்றையடி வழியில் போய்
ஒரு வேம்பு நிழல் விழும்
கடப்பை அவிழ்த்து
அவன் குடிசைக்குள் வாழ்பவன்
திருவிழாக் கோவில்
அடுத்த ஊரில் இருந்தது
குளத்தடி வைரவரில்
எவரும் அதிகம் கூடுவதில்லை
உல்லாசப் பயணிகள்
ஊர் சுற்றிகளும் வருவதில்லை
மக்கள் முண்டியடிக்கும்
மலிவுக்கடையும் அருகில் இல்லை
மனதுக்கு
ஒரு கவசம் தேடுவதற்கு
எல்லா நியாயமும் இருந்தது
கைத்தொலை பேசிக்கு
கவரேஜ் இல்லை
குளத்துக்கு இடதுகரை ஏற்றத்தில்
சிலவேளை பேசுவான்
இரவின் அமைதியில்
ஊருக்கே கேட்கும் இரகசியங்கள்
சந்தைகளில் கொரானோவாம்
மீனை கைவிட்டுவிட்டான்
பேக்கரியிலும் தொற்றான்
பாணை வாங்காமல் விட்டான்
பேருந்தில் போனவர்களுக்கும்
பிடித்துவிட்டதாம் கிருமி
எப்போதாவது போகும்
பட்டணம் பயணமும்
நிறுத்திப் பல காலம்
கள்ளுக்கடையிலும்
ஒருவருக்கு இனங்காணப்பட்டதாம்
ஒரு மாலைநேர
பேரின்பத்தையும் இழந்தான்
புடைவைக் கடையிலும்
பிசிஆர் எடுத்ததில் பொசிற்றிவ்
நல்லவேளை
அவன் அணிவதற்கு
ஐந்தாறு துணிமணிகளுண்டு
அடங்கிக்கிடந்தான்
படலைக்கும்
வளவுப் பின் வேலிக்குமிடையில்
சுற்றிச் சுழன்றான்
பறவைகளோடு சேர்ந்து பாடினான்
மலர்களை
ஒவ்வொரு இதழ்களாய் இரசித்தான்
அயல்வீட்டுக்காரியின்
காதில் வேப்பம் குச்சி கண்டு
தங்க நிறத்தில்
ஒரு காம்பு துளிர்க்க
கனவு கண்டான் இரவு
கிளிகளை கூண்டிலடைக்காதவன்
மீன்களை
தொட்டியில் சிறைப்படுத்தாதவன்
பாம்புகளை துரத்திவிடுபவன்
எறும்புகளுக்கும் குருவிகளுக்கும்
மிச்சம் வைத்து சாப்பிடுகிறவன்
நிலவை ஆராயாதவன்
அதற்காய்
முருக்கை உச்சியிலும் ஏறாதவன்
ஏன் பூக்கின்றன
ஏன் கூவுகின்றன
ஏன் பெய்கிறது
ஏன் பாய்கிறது
ஏன் குளிர்கிறது
ஏன் கிளிகள் பச்சை
கொக்குகள் வெள்ளை
காகம் கறுப்பு
வானம் நீலம்
எந்த சந்தேகமும்
கேள்விளுமின்றி
கரைந்திருப்பவனுக்குள்
இந்த நாட்களின் கேள்விகள்
பெரிய கிருமிகள்தான்
அவனுக்கு முகவரியுமில்லை
மேற்பார்த்து
அடுத்த தெருக்கடைக்கு
கடிதங்கள் வரும் என்றேனும்
மலேரியா வந்தது
அவனுக்கு வரவில்லை
குளிசைகளின் பெயர்கள் தெரியும்
அம்மை வந்தது
அதுவும் அப்படித்தான்
அவனை அண்டவில்லை
கடிசொறி சிரங்குக்கும்
அவனை தெரியாமலிருந்தது
அறியாப்பருவத்தில்
போலியோவுக்கு
ஊசி போட்டிருக்கிறார்கள்
அவன் கைமூட்டில் தழும்பிருந்தது
கைதியாகவோ
குற்றவாளியாகவோ
இருக்க விரும்பாதவன்
அடுத்தவனை நிழலாலும்
ஆக்கிரமிக்க ஆசைப்படாதவன்
இப்போது
முடக்கப்பட்டிருக்கிறான்
அவனை மீறும்
கேள்விகளில் இருந்து
தப்பிக்க முயல்கிறான்
எவரையோ நோக்கி
ஒரு கேள்வியை
கேட்க வேண்டும் போலிருக்கிறது
அறிவிக்கப்படுகிறது
தொலைவில்
அதை தடுக்க
ஊசி ஏற்றிக்கொள்ளும்படி
யாருடைய நோய்க்கு
எனக்கு ஊசி
அடியும் நுனியுமற்ற
மரத்தில் ஏறுவது போலவும்
இருளும் ஒளியுமற்ற
பாதையில் புறப்படுவது போலவும்
பதிலற்ற கூட்டங்களில்
ஒருவனாய்
பலகேள்விகள் துளைக்கும்
நோயாளியாய் அவன்
No comments:
Post a Comment