பதினெட்டாம் போர் நிறுத்தம்
முரட்டு தேகத்தின் இன்பவதையாய்
முகிழ்க்கும் பாலைக்கிளைகள்.
கிழக்கும் மேற்குமாய் விரிந்த காடு.
கூடை நிறையும் மஞ்சள் தேனாய்
கொழுத்துப் பழுத்துவிழும் பழங்கள்
இனிப்புத் தமிழாய்
எடுத்துண்ண இதழ்களில் ஒட்டும்.
பருவமற்ற பொழுதில்
பாலைக்கிளைகள்
கலவியில் திளைப்பதாய்
காது மடலுரசும் காற்றின் இரகசியம்.
ஆதிக்கதையோடு
அமர்ந்திருக்கும் பிள்ளையார்
அவ்வழி போறவரின் நம்பிக்கை.
காணிக்கையாய் என்றோ
வேரடி வீரர் கூட்டம்
வெற்றியை படைத்தனரவர்க்கு.
இப்போதும்
பேரூந்துச் சாரதியர் நிறுத்தி
அக்கல்லின் துதிக்கையில்
பயணத்தை ஒப்படைப்பர்.
நெடுஞ்சாலைகளற்ற
பெருங்காட்டில் இருளில்
மதங்கொண்ட களிறடக்கி
வேந்தர் சேனைக்கு
அருளாகி
அன்றமர்ந்த பெருமானார்.
இப்போது நிறுத்தத்தில்
கற்பூர ஒளியில் மிதந்தார்
காரிகையொருத்தியும்
பாதிமலரொன்று பக்தியில் பற்றி
நீள் கூந்தலில் பொருந்த
ஏறி அமர்ந்தனள் பேரூந்தில்
என்னருகில்
அவள் தோளுரசியது.
பாணங்களற்றிருந்த
வில்லுக்கு
படைகொண்டு வந்தது
ஒரு பூங்காற்று
தூரப்பயணம்தான்
காட்டின் நடுவிலொரு
வண்டறியாக் கிளையில்
பூத்தவளாய்
புதிதாயிருந்தாள்
புளுதித் தெருவொன்றில்
அவள்
புல்லனைய பாதங்கள்
உலவிப்பின்னேதான்
ஓடி வந்திப்பேரூந்தில் ஏறினள்
சடைத்த பாலையில்
பசிய கிளை நுனியில்
கொளுத்த பழமெனத்
தேன் வழிந்தவள் தேகம்.
மலர் கொத்திப்பறவையின்
கனவென கன்னங்கள்.
கடைக்கண்களுக்கு
ஒரு காட்டு நிலாவின்
நிழல்வரையும் ஓவியமாய்
தோன்றினள் மங்கை.
எப்படியோ
கொக்காவில் கடப்பதற்குள்
மான்கள் மேயும்
மழைத்துளிர்களில்
வனைந்த உதடுகளில்
கொடிகளில் உதிரும் பனியாய்
ஒரு புன்னகை.
காட்டுமலரோடு பேசலானேன்.
அவள் குரல்
கற்பூரப்புல்வெளிவரை
எப்போது யாரோ
கேட்ட குரல் போலவொரு
சங்கீதம் சரசம் சமர்வாசல்.
பழைய முறிகண்டி
பதினெட்டாம் போர்தான்
அவள் முகவரியே.
எங்கிருந்தோ அல்ல
அங்கேயே பிறந்தவளாய்
அக்காட்டின் குளிர்மையில்
கொட்டு மழைக்காலத்தில்
குறுக்கும் மறுக்குமாய் சீறும்
காட்டாற்றில் கால்கள் எற்றி
பருவம் வனைந்த பறவையது.
உடும்பின் பிடியாய்
உள்ளிருக்கும் கதைகளை
மெல்ல விடுவித்து
மின்னும் கண்களில்
என்னை அறிவித்து
வன்னித் தெருவின் பயணத்தில்
சொல்லும் கதைகள் கேட்டேன்.
கனகராயன் ஆற்றினோரம்
புரவிகளோடு
ஒரு வில்லேந்திய படையாகி
அவள் விழிகளில்
நடந்துகொண்டிருந்தேன்.
ஐயங்கன் குளத்தருகே
அமைந்த மாளிகையில்
அவளருகே அமர்ந்திருந்தேன்.
கோட்டைகட்டிய குளத்தில்
தடாகத்தில் நீராடி
தங்கத் தேரென சேடிகளொடு
அங்கம் திரண்டு மயக்க
அந்தப்புரத்துக்கு அவளை விழி
அழைத்துக்கொண்டிருந்தது.
இளவரசியொருத்தி
இளைப்பாறிய வாசத்தை
பெருமரத்து காற்று
சுவாசத்தில் பரவிவிட
அவள் மூச்சு என்னில்
பல்லாயிரமாண்டு வாயிலின்
பெருங்கதவை தட்டியது.
யாரங்கே!
பிறகு நான் மாந்தைவரை
புரவியெடுத்துப் பறந்தேன்.
புத்துவெட்டுவான்வரை
ஆடு சாய்த்துச் செல்வோம்
அக்காட்டினிடையே
நெல் சோழம் கடலையென
நிறைய பசுமைகாண்போம்
பரணறிவேன்
அரணறிவேன்
பறவைகளின் கனவறிவேன்
நதிகளின் கரைகளில்
நானும் தோழிகளும் மகிழ்வோம்
புதூருக்கும்
புளியம்பொக்கணை
நாகதம்பிரானுக்கும்
வண்டி கட்டிபோவது
அப்பப்பா கால வழக்கு
இப்போது
இப்படி பேருந்துகளில் போவோம்.
அடுக்கிக்கொண்டே போனது
அக்காட்டுத் தென்றல்.
ஓ!
நீ ஒரு இளவரசி என்றேன்
மஞ்சள் பூசிய முகத்தில்
ஏதோ சிவந்த கோடுகள்
அதில்
எதை எழுதினாலும்
ஒரு காவியத்தின் பூ மலரும்.
அந்தி சாயும் வேளையில்
சங்குப்பிட்டிப்பாலத்தை
பேரூந்து கடக்கும் போது
பாண்டியனின் மீனாய்
அவள் விழிகள் மின்னி
ஒரு கொடியாய் படபடத்தது
நல்லூரில் போயிறங்கும் போது
ஏதோ ஒரு
நம்பிக்கை படர்ந்தது
அதுவரை அவள் பெயரறியேன்
கேட்டேன்
குவேனி என்றாள்
அடுத்து என்னிடம்
அப்போது என்னிடம்
எந்த வார்த்தைகளுமில்லை
இரவு குவேனிக்கு
அழைப்பெடுத்து பேசினேன்
குவேனி கவனம்!
அலைகரைகள் கவனம்
ஆங்கு வந்தேறிகள் வருவார்கள்
எவரிடமும் பேசாதே
எந்த வார்த்தைக்கும் இணங்காதே
உன்னோடு நானிருக்கிறேன்
பதினெட்டாம் போரிருக்கிறது
நீ ஒரு இளவரசி

No comments:
Post a Comment