Tuesday, July 7, 2020

முனி அடிக்கும்-பொன்.காந்தன்,


கோடி ஆண்டுகள் வாழ்கவென்று வாழ்த்த நினைத்தால் என் நகரத்தின் புளியமரத்தையும் சுமங்கலியை வாழ்த்துவது போல வாழ்த்துவேன்.முனி அடிக்கும் என்ற கதையிலிருந்த புளியமரம் எனது பருவங்களில் தேவதையாக மாறிற்று.எங்கள் மண்வீட்டு அடுப்பில் கறி சமைக்கும் போது குழம்புக்கு பழப்புளியை சிரட்டையில் கரைத்துவிட்டு சக்கையை அப்படியே தடி வரிச்சலால் கோடிக்குள் அம்மா அடிக்கடி எறிவார்.சில வேளைகளில் கோடிக்குள் சிறுவயதில் எந்த அங்கவஸ்த்திரமும் இன்றி ஓடிப்போய் பெய்யும்போது முளைத்து நிற்கும் புளியின் அழகிய பசுந்தளிர்களில் மழைத்துளிபோல் விழுவதை பார்த்து இரசித்ததுண்டு.ஆனாலும் புளி பற்றிய பழமொழிகளால் எங்கள் கோடிக்குள் ஒரு புளிகூட வளர்ந்து உயர்ந்து பெருத்து சடைத்து விரிந்து புளியங்காய் காய்த்ததில்லை.கோடிக்குள் ஒரு புளி நின்றிருந்தால் பின்னாளில் புளிப்பு என்பதும் எனக்கு இனிப்பாய் இருந்திருக்குமோ என்னவோ.ஆனாலும் சிறுவயதில் குளத்தடி பள்ளிக்கு போகும் வழியில் குளம் வான் பாயும் ஐந்தடி வான் மண் புட்டியில் ஒரு பெரும் புளியமரத்தை தினமும் கடந்த சென்றேன்.அந்த புளி காய்த்துக் கொட்டியிருக்கும் புளியங்காய்களை கடித்தபடி வாய்கூசியபடி வீடுவந்த ஏராளம் நாட்களுண்டு. எங்கள் கல்லெறிகளையும் தடியடிகளையும் தாங்கிய பெருந்தாய் போல அந்தப்புளியின் காலத்தை கடந்தேன்.
பள்ளிப்பருவங்கள் முடிந்து பரீட்சை முடிவுகளும் வந்து சில வேளை நொந்து இனி அடுத்து என்று பயணிக்க ஆரம்பிக்கும் பருவத்தில் அநேகமானவர்களின் வாழ்க்கையில் ஒரு புத்தகம் வானொலிப்பெட்டியின் பாடல்கள் ஒரு நூலகம் வாசிகசாலை நாற்சந்தி ஒரு பெட்டிக்கடை நகரத்தின் மத்தியிலோ ஓரத்திலோ நிற்கும் ஒரு பெரிய நிழல்மரம் பூங்கா கடற்கரை இப்படி ஏதேனும் மறக்கமுடியாதபடி நிச்சயமாக இருக்கும்.எனக்கும் முனிக்கும் பூர்வஜென்ம பிணைப்போ என்னவோ தெரியவில்லை.பள்ளிக்காலங்களின் பிறகு ஒரு புளியமரத்தின் கீழ் கொட்டிலில் நான்கு பேருக்கு பாடங் கற்பித்தேன்.பிறகு முள்ளியவளை தண்ணீரூற்று சந்தியில் நிற்கும் பெரிய புளிய மரத்தடியில் மாலை வேளைகளில் காற்று வாங்கிக்கொண்டு உலவிக்கொண்டிருந்தேன்.பிறகு மீண்டும் கிளிநொச்சி நகரத்துக்கு அங்கும் ஒரு புளிய மரம்தான் எனது மற்றும் எனது சகபாடிகள் பலரின் காலை மாலை இரவுவென எப்பொழுது என்று சொல்லமுடியாதபடி முப்பொழுதும் ஒட்டிக்கொண்டது.
அது நகரத்து மத்தியில் சாலை ஓரத்தில் நின்ற புளியமரம்.அந்த புளியமரத்தின் கதையை வெறும் வார்த்தைகளால் மென்றுவிட முடியாது.எரிக்சொல்கெய்ம் கிளிநொச்சிக்கு முதன் முதலில் வரும்போது என்ன நிற சேர்ட் அணிந்திருந்தார் என்பது அந்தப்புளிய மரத்துக்கு தெரியும்.ஜோன் வெஸ்பேர்க் வந்த உலங்கு வானூர்த்தி எப்போது எத்தனை மணிக்கு முற்றவெளியில் இறங்கியது அந்த புளியை கேட்டால் சொல்லும்.யசூசி அகாசியின் கண்ணாடி பார்வையை அந்தப்புளி கவிதையாகவும் எழுதும்.விடார் எல்கிசனை இந்த வீதிப்புளி மறக்காது .பாலா அண்ணையை பார்க்கும் போதெல்லாம் கிளைகள் சிலிர்த்து நின்ற புளி அது.தளபதிகளையும் போராளிகளையும் போகவும் வரவும் பார்த்து பூரித்துக்கொண்ட புளி.அந்தப்புளியின் கிளைகளை உலுப்பினால் ஓராயிரம் உணர்ச்சி மிக்க அழிக்கப்பட்ட இராச்சியத்தின் கதையை கொட்டும்.கூப்பிடு தூரத்தில் காவியத்தலைவனை கண்ணெதிரே பார்த்து பரவசமான ஒரு பரணிக்குரிய புளியமரம் அது.இன்னும் வஞ்சகத்தோடும் தன் கண்ணெதிரே வானூர்தியில் வந்திறங்கி பரவிப்பாஞ்சானுக்கும் ராங் வியூ ஹோட்டலில் விருந்துக்குமாய் வந்து போனாரை சபிக்கும் அந்த புளி.
ஒரு குறுநில ஆட்சி நடந்துகொண்டிருந்த தமிழ் நிலமாயிருந்த கிளிநொச்சி நகரத்தில் நின்ற மேன்மைக்குரிய புளிய மரத்தடியில் காவாலிகளாகவும் பலர் பரிகசித்துப்போன நானும் என் சகபாடிகளும் முப்பொழுதும் நின்று மகிழவும் அதை பின் எழுதவும் வாய்ப்பும் ஒரு வசந்தமும் கிடைத்தது.ஒரு பொழுதில் சுதந்திரத்தின் வாசம் எனக்கு ஒரு புளியம்பூவிலிருந்தும் வந்தது.யாரும் எவரும் ஏன் என்று எப்பொழுதும் என்னை கேட்டதில்லை.அப்புளியடியில் விழுந்து புரண்டு உருண்டாலும் எவரும் கேட்கார் என்னும் துணிச்சலும் நகரத்தின் ஒவ்வொரு பிடி மண்ணிலும் உரிமையும் உவகையுமிருந்தது.என் உதட்டின் நிறத்தை அதிகம் இரசித்தது காதலியை விட புளியங்கிளைகள்தான்.சிலவேளைகளில் புளியங்கிளைகள் வரவர உன் உதடுகள் கறுக்கின்றது என்று கடிந்துகொண்டதும் உண்டு.தள்ளாடிய சிலவேளைகளில் நீ திருந்த மாட்டாய் என்று திட்டியதும் உண்டு.சில வேளைகளில் நீலங்கலந்த ஒரு சீருடை அணிந்து காவற்றுறையாகி ஒரு பார்வை பார்க்கும்.ஆனாலும் எங்கள் புன்னகையிலும் நிலத்தை பாடும் இனிமையிலும் மயங்கிப்போகும்.மின் விளக்குகள் இல்லாத சாலையில் வடை வண்டில் காரனின் விளக்கொளியில் இரவு அழகாய் விரியும் பொழுதில் புளிய மரம் ஒரு இராச்சியத்தின் கனவை சுமந்த அந்த நகரத்தை இரசித்துக்கொண்டிருந்தது.வானமெங்கும் பறந்துகொண்டிருந்த புலிக்கொடிகளை தன் உச்சிக்கிளைகளால் தரிசித்து தன்னுள் நிமிர்ந்தது அந்தப்புளி.
அந்தப்புளியடியில் நின்று நெடுநேரமாய் பேசுவோம்.சாமங்கள் கடந்த உரையாடல்கள் பல.சில வேளை கொத்துரொட்டி சாப்பிட ஆசைவரும் ஒவ்வொருவரும் சட்டைப்பையில் இருந்ததை எடுத்துச் சேர்த்து சேரனுக்கு புறப்படுவோம்.புளியமரம் வழியனுப்பும்.சேரன் சுவையூற்றில் ஆவி பறக்க பெரிய தட்டில் வரும் கொத்துரொட்டியின் வாசம் இன்னமும் நாசியில் .அது போல ஒரு சுவையான திருப்தியான பொழுதை இதுவரை பிறகு அனுபவிக்க முடியவில்லை.சில வேளைகளில் குளிராக ஏதேனும் குடிக்கவேண்டும்போல இருக்கும் பாண்டியனுக்குப் போவோம்.எங்கள் சக பாடிகளில் சிலர் பாண்டியனுக்கு போக முந்துவதற்கு சுவையான குளிர்களியை விட அதை பரிமாறும் அழகிகளோடு ஓரிரண்டு வார்த்தை பேசி அடுத்த வாரம் அதையே கனவாய்க்காண.சில வேளைகளில் இளந்தென்றலுக்கும் இன்னொரு வன் நைன் ஓய்வு விடுதிக்கும் போவோம் அங்கு குடித்த முட்டை சூப்பைபோல உணவுகளை போல இப்போதெல்லாம் கிடைப்பது அரிதிலும் அரிது.ஏனெனில் அந்த நகரம் அப்பொழுதில் உலகம் பார்க்கின்ற தமிழர்களின் தலைநகரமாயிருந்தது.அத்தலைநகரத்தில் ஒரு புளியடி மைந்தர்களாய் நாமிருந்தோம்.
ஒரு தமிழர் இராச்சியக்கனவு அடை வைக்கப்பட்டிருந்த ஒரு அழகிய மெய்சிலிர்க்கவைக்கும் பரணிகளால் ஆன நகரம் பேரிருள் சூழ்கின்ற கடைசி நாட்களின் ஆரம்பித்ததிலிருந்து அந்த புளியடியில் நின்று எல்லாவற்றையும் ஏக்கத்தோடு பார்த்துக்கொண்டிருந்தோம்.முன்பொரு முறை அந்த நகரம் வீழ்ந்தது அன்னியர்களிடம் மீண்டும் எழுந்தது.பல முறை வெறிச்சோடியது மீண்டும் செழித்தது.வீழ்ச்சியிலும் எழுச்சியிலும் கலந்திருந்தோம்.இறுதி நாட்களில் இராச்சியத்தின் நகர மாடங்கள் ஒவ்வொன்றாய் விமானங்கள் குண்டு வீச தகர்ந்துகொண்டிருந்தது.ஆழப்பரந்த புளியின் வேரைப்போல எமக்கு நம்பிக்கையுமிருந்தது.ஆனாலும் ஒரு இராச்சியத்தின் கனவு கண் முன்னே இடிந்து கொட்டிக்கொண்டிருந்தது.புளியின் அருகிலும் குண்டுகள் சரமாரியாய் வீழ்ந்தன.தேவதையாய் இருந்த புளியில் பழைய கதையில் வருவதுபோல முனிகள் இனி தொற்றிக்கொள்ளுமோ என ஐயுற்றோம்.விடைபெற்றோம்.அப்புளியமரம் கோடி ஆண்டுகள் வாழ்க. வஞ்சகத்தால் ஒரு நிலம் வீழ்த்தப்பட்ட கதையை சொல்லவேண்டும்.ஆனால் இப்போது புளிடியில் முனி அடிக்கும் அதனால் நான் போவதில்லை

No comments:

Post a Comment

பிரசாதமே!!

  கொடிய போர் கண்ட நகரம் போலில்லை காலிழந்தவனுக்கு கால் முளைக்கும் உணர்ச்சியை கண்ணிழந்தவனுக்கு ஒளியூறும்  மனத்தை உண்டாக்கவில்லை யாரேனும் பறக்க...