Tuesday, July 7, 2020

முதலிரவுக்கான பின்னணி இசை-பொன்.காந்தன்,


கடந்த ஆண்டு ஏதோ ஒரு நாளில் ஒரு ஓய்வான இராத்திரியில் தனியே எனது மடிக்கணணியில் இறுவட்டை செருகி அலாடினை பார்த்தேன்.இந்த அலாடின் பேராச்சரியமாய் இருந்தது.எனக்கு முன்னே காலம் கடகடவென மாறிவந்திருப்பதை அலாடினும் கூட எனக்கு நினைவுபடுத்துகின்றன.அலாடினை திரையில் பிரம்மயை ஊட்டும்வகையில் அனிமேசன் தொழில்நுட்பம் அது இன்றைய காலத்தின் ஒரு தனிக்காட்டு இராஜா.அரபுக்கதைகளில் அலாடினை அறிந்திருந்தாலும் அலாடின் அவ்வப்போது ஒவ்வொருவரின் எண்ணத்தில் தோன்றியிருக்கிறது.அதை பார்க்கும் ஒவ்வொரு தருணத்திலும் அலாடின் ஆச்சரியமாய் இருந்தது பார்த்தவர்களுக்கு.இங்கே அலாடினைப் பற்றி நான் ஒரு பேருரையாற்றப்போவதில்லை.ஏனெனில் அலாடினை அறியாதவர்கள் கிடையாது.ஆனால் எனது காலத்தின் ஒரு கதை சொல்லிக்கு இந்த அலாடின் தேவைப்படுகின்றது.உண்மையில் சொல்லப்போனால் ஒரு அற்புதவிளக்கு என்னிடம் இருந்தால் நன்றென தோன்றுகின்றது.இருள் மண்டிய இராச்சியம்.ஏதேதோ பறிபோக.அமானுஸ்ய தேவதைகளையும் இப்படி அற்பு விளக்குகளையும் மனம் அங்கலாய்க்கின்றது.
அலாடினை அலாவுதீனும் அற்பு விளக்குமாய் பார்க்கும்போது எனக்கு ஆறேழு வயதிருக்கும். சிடி லப்ரொப் என்ற வார்த்தைகளை எங்கள் தெருக்களில் கனவிலும் இல்லை.ஏன் ரிவியைக்கூட எங்களுக்கு ரூபவாகினியாய்த்தான் தெரியுமே தவிர.அது ஒரு அலைவரிசை என்ற அறிவு கூட தோன்றுவதில்லை.ரூபாவாகினி என்றால் ஒரு தொலைக்காட்சிப் பெட்டி மனதில் தோன்றிய காலமது.எங்களுரில் கிராமங்களில் இருந்து தொலைவில் நகரத்தில் மூன்று திரையரங்குகள் இருந்தது.அவைக்கு ஈசுவரன் பராசக்தி சண்முகா என்ற பெயர்கள்.எனக்கு இப்போதுதான் அவை பற்றிய ஒரு ஆச்சரியமான புதினம் தோன்றுகின்றது.திருவாளர் சிவபெருமான் குடும்பம் எங்களுரில் மூன்று படமாளிகைளுக்கு பந்தமாய் இருந்திருக்கிறார்கள்.ஈசுவரனும் பராசக்தியும் பட்டணத்தில் அடுத்த ஒழுங்கையில் இருந்தன.சொல்லப்போனால் சிவனும் பார்வதியும் அருகருகேதான் இருந்தார்கள்.அந்தோ சண்முகா எட்டத்தான் இருந்தது.மாம்பழ விவகாரம் தியேட்டர் கட்டுவது வரை தொடர்ந்திருக்கிறது பாருங்கள்.போர்கள் உக்கிரம் பெறுவதற்கு முன்னான நாட்களில் ஈசுவரனில் பைலட் பிரேம் நாத்தும் பராசக்தியில் சுவரில்லா சித்திரமும் பார்த்தேன்.ஈசுவரனையும் பராசக்தியையும் படமாளிகைகள் என்று அழைத்தால் நான் சண்முகாவை படக்கொட்டகை என்றுதான் அழைப்பேன்.சொல்லப்போனால் மாம்பழப் பிரச்சனையில் பழனி ஆண்டியான கதைபோலவே சண்முகா படக்கொட்டகையின் கதையும்.ஈசுவரனும் பராசக்தியும் நல்ல குளிர்ந்த சிற்றாறோடும் வயல்களுக்கு அருகிலும் ஒரு சில்லென்ற லொக்கேசனில் இருந்தன.அந்தோ சண்முகா இரயில் தண்டவாளத்தின் ஓரமாய் இருந்தது.அதுவும் அதன் சுவர்களுக்கு பதிலாய் மரப்பலகைகளால் அமைக்கப்பட்டிருந்தது.பூகம்பம் அடிக்கடி வரும் நாட்டு வீடுகளை போல.ஆனால் சண்முகாவுக்கென்றொரு அடியார் கூட்டம் இருக்கத்தான் செய்தது.ஓடைகள் இரயில் தண்டவாள ஓரங்கள் ஒளிவு மறைவுகள் இருந்ததால் ஒரு கால் பாதியை விட்டுவிட்டு சண்முகாவுக்குள் நுழைந்து குந்தி திரையில் எழுத்துக்கள் தோன்றும்போது விசிலடிக்க சண்முகாவுக்குள் ஒரு சுதந்திரம் இருந்தது.
பகலும் இரவுமாய் யாழ்ப்பாணத்துக்கும் கொழும்புக்குமாய் யாழ் தேவியும் சரக்கு அஞ்சல் இரயில்களும் மாறி போய்வர அநேகமாய் எம்எஸ்வியோ இளையராஜாவோ இரசித்து சுவைத்து பின்னணி இசை வழங்கியிருந்தாலும் .பலவேளைகளில் இரவு காட்சியில் முதலிரவுக்கும் பகல் காட்சியில் தாலிகட்டும் வேளைக்கும் பிஜிஎம் கொழும்புக்கும் யாழ்ப்பாணத்துக்கான இரயில் ஓசைதான் சண்முகா படக்கொட்டகையில்.அந்தோ அந்த சண்முகாவில்தான் அலாடினை நான் முதன் முதலில் ஆறேழு வயதில் அலாவுதீனும் அற்புத விளக்காய் பார்த்தேன்.அலாவுதீனும் அற்புத விளக்கை பார்க்கப்போன கதையோ பெரிய கதைதான் அதுவும் ஒரு மெல்லிய இனிய படத்திற்கு கதைதான்.அப்போது குளத்தடிப்பள்ளியில் படித்துக்கொண்டிருந்தேன்.அந்த நாட்களில் எங்கள் பள்ளியில் ஒரு பழக்கம் இருந்தது.காலைப்பிராத்தனையின்போது தேவாரங்கள் செபங்களோடு முடிவதில்லை.அந்தக் காலை வேளையை சில வேளைகளில் யாரோ வெளியில் இருந்துவரும் மாயவித்தைகாரரால் அழகு படுத்துவார்கள்.அவர் கைக்குட்டையில் இருந்து புறாக்களை பறக்கவிடுவார்.சில வேளைகளில் ஒருவர் எக்கோடியனோடு வந்து சில மணித்துளிகள் மயக்கிவிட்டுப்போய்விடுவார்.சில வேளை குழுக்களாயும் வருவார்கள் கிற்றார் டிரம்ஸ் என்று செவிகளில் சிட்டுக்களுக்கு தேனை தந்துபோவார்கள்.அசத்தப்போவது யாரு மிமிக்ரி எல்லாம் எங்கள் பள்ளி பெரிய பலாமர நிழலின் காலைவேளையில் என்றோ நடந்து முடிந்து வயிறு குலுங்கச்சிரித்தோம் இப்போதும் என் உதட்டில் எஞ்சியிருக்கும் புன்னகையில் கொஞ்சம் அங்கிருந்துதான் முளைத்தவை.
இப்படி எங்கள் பள்ளியில் பட்டணத்திரையரங்குகளில் ஏதாவது பள்ளிப்பிள்ளைகள் பார்க்கத்தக்க படங்கள் ஓடினால் வருடத்தில் ஓர் நாள் அழைத்துச்செல்லும் வழக்கமுமிருந்தது.
அந்த நாள் இனிமையானது.அதிலும் கிராமத்து பிள்ளைகளுக்கு ஒரு திருவிழா நாள்தான்.ஏழைப்பிள்ளைகள் குடும்பத்துடன் பட்டணத்து பட மாளிகைளுக்கு போகும் அளவுக்கு சம்பாத்தியம் இருப்பதில்லை.ஆனால் இந்த ஒரு நாளுக்காக ஏதோ தங்கள் பிள்ளைகளுக்காக அன்றாடக்கூலிகள் சேமித்து ஒரு சிறு தொகைகளை கொடுத்தனுப்பி இந்த நாளில் படம் பார்க்காமலே அலாவுதீனின் அற்புத விளக்கின் பிரகாசத்தை ஆச்சரியத்தை அந்த நாளில் தங்கள் பிள்ளைகளில் கண்டு மகிழ்வார்கள்.புத்தகம் கொண்டு போகாமல் கை வீசிக்கொண்டு எங்களை மறந்து பள்ளிக்குப்போன அரிதான நாட்களில் இந்த திரையரங்குக்கு பள்ளியே போகும் நாள் அற்புதமானது.அந்த நாட்களில் அநேகமாய் ஆசிரியர்களும் பிரம்புகளையும் கண்டிப்புக்களையும் சற்று தள்ளி வைத்துவிடுவார்கள்.அவர்களும் எங்களோடு மகிழ்வார்கள்.சிறிய செம்மண் தெருக்களின் வழியே இருவர் இருவராக கைகோர்த்தபடி சண்முகாவுக்குப் போவோம்.போகும் வழிகளில் கட்டிடங்கள் மரங்கள் வாகனங்கள் இப்படி இரசித்தபடி எங்கள் நீண்ட வெள்ளை வரிசை செல்லும்.சண்முகாவில் அலாவுதீனும் அற்புத விளக்கை பார்த்தோம்.அப்படத்துக்கும் ஆச்சரியம் தோன்றும் காட்சியில் பின்னணி இசை யாழ்தேவிதான்.
இப்போது எல்லாவற்றையும் நினைத்துப்பார்க்கிறேன் ஒரு அற்புத விளக்கு நிஜமாய் கையில் இருந்தால் நல்லதுதான்.அடுத்த கவளத்தை உண்ண அடம்பிடிக்கும் போதும் கூப்பிடவா என்று அம்மா சொன்ன பூதமும் நிஜமாய் இருந்தால் நல்லதுதான்.அரிவரி படிக்கும் அஆ முழுதும் எழுதாவிட்டால் படிக்கப்போன வீட்டில் வளர்த்த மைனா கொத்தும் என்று சொன்னார் வாத்தியார் .மைனாவுக்காக தமிழின் உயிரெழுத்துக்களை படித்தேன்.சொல்லப்போனால் அந்த மைனாவும் இருந்தால் நல்லதுதான்.இதுவரை நீங்கள் வாசித்ததும் மைனாவின் தமிழ்தான்.

No comments:

Post a Comment

பிரசாதமே!!

  கொடிய போர் கண்ட நகரம் போலில்லை காலிழந்தவனுக்கு கால் முளைக்கும் உணர்ச்சியை கண்ணிழந்தவனுக்கு ஒளியூறும்  மனத்தை உண்டாக்கவில்லை யாரேனும் பறக்க...