ஒரு நாள்
என் படபடப்பில்
திணறிய காற்று
ஓய்வாய்
பூவரசுகளில்
இன்று பார்த்தேன்
தப்பியவனின்
புன்னகையொன்றை
அதன் மீதுதிர்ந்தேன்
குழந்தைகளில் வாழ
ஆசைப்பட்ட காற்றை
இதயமற்றவர்கள்
துரத்தியபோது
பொம்மை விழிகளின்
பிசுபிசுப்போடு
தாழைப்பூக்களோடு
துயர் பகிர்ந்தது
நந்திகடலிலும் ஓர் நாள்
மாந்தைக் குமரிகளின்
கூந்தல் கலைத்து
மென் விரலிடையில்
ஊர்ந்தபடி
மறுபடியும்
பாலியாற்றங்கரைக்கு வர
கனவிலிருந்த காற்று
வளையல் சிதறிய
ஓசையேந்தி
ஒற்றை பனையில்
ஓலமாயானது ஓர் நாள்
ஓர் காதலனின்
வார்த்தைகளோடு
அலைபேசிக்கிடையில்
ஆனந்த நடனமாடி
குச்சவெளிக்கும்
நிலாவரைக்குமாய்
சாமம் கடந்தும்
முணுமுணுத்திருக்க
காத்திருந்த காற்றின்முன்
வார்த்தைகள் இழந்தபடி
ஒருத்தியின்
மூச்சின் முடிவில்
வீழும் மெல்லிய இலையை
ஏந்த திராணியற்று
பெருவிருட்சத்தின் அடியில்
தோற்றது ஓர் நாள்
காற்று இறுமாப்பெய்த
இப்போது
ஓர் குகையில்லை
வெண்கலக்குரலாய்
ஏந்திச்செல்ல
ஒரு வீரப்பிரசங்கமில்லை
வீரர்களின் காலிலெழும்
புளுதியும் வாசமுமில்லை
எந்தக்கட்டளைகளுமில்லை
மாடங்களுமில்லை
காற்றசைக்க கொடியுமில்லை
என்னிடம்
தப்பியவனின் புன்னகை
காற்றுக்குத் தெரிந்த
அந்த படபடப்பு
ஏதோ
சொல்ல நினைக்கிறேன்
இந்த காற்றுக்கு
என் அழைப்பை ஏந்திச்செல்
எங்கிருந்தாலும்
வரச் சொல்
காத்திருக்கிறேன்
No comments:
Post a Comment