முத்துக்குமார் எரிந்திருக்ககூடாது.இரக்கமுள்ள தீவிரமான கொள்கையுடைய ஒரு இனப்பற்றாளன் இருந்திருக்கவேண்டும்.அப்பாவித்தனமான ஆனால் ஆழமாக தன்னினத்தின் மீதுள்ள நம்பிக்கையில் தன்னை தீயில் அணுஅணுவாக கருக்கிக்கொண்ட ஒருவனை போற்றுவதற்கும் அவனது மகத்துவத்தை சொல்வதற்கும் வார்த்தைகளை தேடிக்கொண்டிருக்கின்றேன்.முத்துக்குமார் எரிந்த இந்த ஜனவரியில் 2009ல் முத்துக்குமாரை ஏந்தி நின்று புகழந்தேத்த எனக்கு அவகாசம் இருக்கவில்லை.ஜனவரியில் ஒரு அதிகாலை கிளிநொச்சி பட்டிணத்துக்கு மிக நெருக்கமாக சரமாரியான துப்பாக்கி வேட்டுக்கள் கேட்டுக்கொண்டிருந்தன.சன்னங்களும் என் முற்றத்திற்கு மேல் காற்றை கிழித்து சீறிச்செல்வதை உணர முடிந்தது.முன்னைய இரவில் எறிகணைகள் அதிகமாக பரவலாக கிளிநொச்சி பட்டிணத்தை அண்டி வீழ்ந்து வெடித்துக்கொண்டிருந்தன.அநேகமாக இரவு முழுவதும் பதுங்குகுழியின் வாசலிலேயே குந்தி இருக்க வேண்டியிருந்தது.வேவு விமானங்கள் இடைவிடாது சுற்றிக்கொண்டிருந்தன.குண்டு வீச்சு விமானங்கள் இரணைமடு காட்டுப்பகுதிகளை இலக்கு வைத்து வெளிச்ச குண்டுகளை பாய்ச்சி குண்டுகளை பொழிந்து கொண்டிருந்தன.நாய்கள் அலமந்து குரைத்துக்கொண்டிருந்தன.கிளிநொச்சியில் இருந்தும் மக்கள் வேறு ஊர்களுக்கு போகும் பொழுதுகள் ஆரம்பித்து விட்டதை அந்த இரவுகள் எனக்கு உணர்த்தின.
கிளிநொச்சியை நான் இழந்துவிடுவேன் என நான் கனவிலும் நினைத்தது இல்லை.கிளிநொச்சி கட்டிடங்களால் அல்ல புலிகளின் மக்களின் நம்பிக்கையால் எழும்பியிருந்த வீழ்த்தப்படமுயாதது எனும் பட்டணமாக மாறியிருந்தது.கிளிநொச்சி உலகின் முக்கிய நகரங்களின் ஒன்றாக மாறியிருந்தது.பிரபாகரனின் நிழல் அரசாங்கத்தின் நிர்வாக மையங்கள் திரண்ட பட்டிணமாக இருந்தது.தமிழனுக்கு என்ற ஒரு நாடு இருப்பதுபோலவே எல்லாம் நடந்துகொண்டிருந்தது.நானும் பிரபாகரன் கட்டியெழுப்பிய தமிழீழ அரசாங்கத்தின் ஊடகத்துறையில் பணி செய்து கொண்டிருந்தேன்.எனது தமிழீழ அரசாங்கமே என்பதான நம்பிக்கை என்னையறியாமலே என்னில் ஊறிப்போயிருந்தது.அரசாங்க உத்தியோகம் என்ற ஒன்று பற்றி நான் நினைத்தது இல்லை.இந்த தருணத்தில்தான் முத்துக்குமார் எனது பட்டிணங்களில் நாங்கள் கொல்லப்பட்டிருக்கின்றோம் என துயருற்று தமிழகத்தில் எரிந்துகொண்டிருந்தான்.
சேரன் சோழன் பாண்டியன் மருதம் நெய்தல் இளவேனில் இளந்தென்றல் வன்னியன் சுவையூற்று நடுவப்பணியகம் மடுவம் ஆயம் பணியகம் பணிமனை போக்குவரவு கழகம் காவல்துறை நீதித்துறை எழிலகம் கலையகம் இவ்வாறு பல பொற்காலப்பெயர்களால் நிறைந்திருந்த கிளிநொச்சி பட்டிணத்தை நான் இழந்துகொண்டிருப்பதுபோல உணர்வு தொற்றிக்கொண்டது.பட்டணம் வெறிச்சோட ஆரம்பித்திருந்தது.அந்த பொழுதுகளில் ஒரு மாலையில் ஊடகத்தின் செய்திப்பகுதியில் அன்றைய செய்திகள் செய்தி ஆசிரியர்கள் தொகுப்பாளர்களுடன் பேசிக்கொண்டு பணியில் இருந்தபோது அதிகாலை கேட்ட வெடிச்சத்தங்களுக்கு காரணம் அறிவியல் நகருக்குள் ஏறிய படையினருடன் புலிகளுக்கு வெடித்த கடும் சமர் என்பதை அறிய முடிந்தது.அதுவரை படையினர் மிகத்தொலைவில் நிற்கிறார்கள்.எறிகணைகள் ஆனையிறவில் இருந்து வீசப்படுகின்றன என்ற நம்பிக்கை தகர்ந்து போய்விட்டது.பிறகான நாட்களில் கிளிநொச்சிக்கான முற்றுகை சமர் உக்கிரம் பெறத்தொடங்கியது.
முத்துக்குமார் எரிந்துகொண்டிருந்த 2009 ஜனவரியில் கிளிநொச்சியை விட்டு நடக்க விரும்பாத என் கால்களின் நடையின் கதையையும் கிளிநொச்சி எனும் நம்பிக்கையை இழக்கவிரும்பாத எனது மனத்தின் கையறு நிலையின் கதையையும் காவிக்கொண்டு எனது அகதிக் கதை தொடங்கியது.பரந்தனை கடந்துபோய் முரசுமோட்டை வயல் கரையில் குந்தி இருந்து கொண்டு கிளிநொச்சி பட்டணத்திசையில் பார்த்தேன். பட்டணத்தில் மேல் வட்டமிட்டு குண்டுகளை கொட்டும் விமானங்கள் பதிந்து எழுந்துகொண்டிருந்தன.விமானங்களை நோக்கி புலிகளின் விமான எதிர்ப்பு படையின் சன்னங்கள் பாய்ந்துகொண்டிருந்தன.கிளிநொச்சி பட்டிணத்தின் மேல் புகை மண்டலம் நிரம்பி இருந்தது.இரவு கிளிநொச்சி பட்டணத்தின் மேலான வானம் தீப்பிழம்புளால் நிரம்பி வழிந்தது.தமிழர் இழக்க விரும்பாத ஒரு பட்டணத்தின் சமரை பார்த்துக்கொண்டிருந்தேன்.தைபொங்கலில் எனது கிளிநொச்சி பட்டணத்தின் முற்றங்களில் குண்டுகள் வீழ்ந்துகொண்டிருந்தன.வயல்களில் எறிகணைகள் வகைதொகையின்றி வீழ்ந்து எரிந்துகொண்டிருந்தன.தெருக்களின் மாடுகள் கால் நடைகள் செத்துக்கிடந்தன.வளர்ப்பு நாய்கள் அலமந்து அங்கும் இங்கும் ஓடிக்கொண்டிருந்தன.எடுக்கக்கூடிய எல்லாவற்றையும் ஏற்றிச்சுமந்து காவிக்கொண்டு மீண்டும் திரும்பிவிடுவோம் என்ற நம்பிக்கையுடன் கிளிநொச்சி பட்டிணத்தை மக்கள் இழந்திருந்தனர்.கிளிநொச்சி படையினரிடம் வீழ்ந்துகொண்டிருந்தது.
முரசுமோட்டையை கடந்து கண்டாவளையில் பயணித்தபோது கண்டாவளைச்சந்தியின் விமானங்கள் தாழ்வாக பறந்து குண்டுகளை வீசிச்சென்றன.அந்த சந்தி சின்னாபின்னப்பட்டு விட்டது.அச்சந்தியில் வழமையில் இருக்கும் கிராமத்து வாசனைமீது கந்தகமணம் பரவியது.அந்தச்சந்தியும் வெறிச்சோடத் தொடங்கியது.
முள்ளிவாய்க்காலை நோக்கிய பயணம் தொடங்கியது.முத்துக்குமார் எரிந்து கொண்டிருந்தான்.முத்துக்குமார் தன்னுடலை தீயிற்கு இரையாக்க முன் எழுதிய அவனது இறுதிக்கடிதம் ஒரு தற்கொலையாளியினது அல்ல ஒரு மிக உன்னதமான தற்கொடையாளனது என்பதை உணர்த்துகின்றது.குற்றுயிராக வைத்தியசாலைக்கு கருகிய அவனைஎடுத்துசென்றபோது அவனிடம் நீ புத்திசாலியாக இருக்கிறாய் ஏன் இவ்வாறு எரிந்தாய் எனக்கேட்டபோது அந்த மகத்தான பிறவி அளித்த பதில் ஈழத்தில் தமிழினத்தின் புத்திசாலிகளும் பற்றாளர்களும் கொல்லப்பட்டுக்கொண்டிருக்கின்றார்கள் அவர்களை விடவா என உயிர் மேலாது என பதிலுரைத்தது.
இன்றைய நிலையின் முத்துக்குமார் நினைத்த புத்தி சாலிகளாக ஈழத்தமிழினம் நாம் இருக்கிறோமா
முள்ளிவாய்க்காலை நோக்கிய பயணம் தொடங்கியது.முத்துக்குமார் எரிந்து கொண்டிருந்தான்.முத்துக்குமார் தன்னுடலை தீயிற்கு இரையாக்க முன் எழுதிய அவனது இறுதிக்கடிதம் ஒரு தற்கொலையாளியினது அல்ல ஒரு மிக உன்னதமான தற்கொடையாளனது என்பதை உணர்த்துகின்றது.குற்றுயிராக வைத்தியசாலைக்கு கருகிய அவனைஎடுத்துசென்றபோது அவனிடம் நீ புத்திசாலியாக இருக்கிறாய் ஏன் இவ்வாறு எரிந்தாய் எனக்கேட்டபோது அந்த மகத்தான பிறவி அளித்த பதில் ஈழத்தில் தமிழினத்தின் புத்திசாலிகளும் பற்றாளர்களும் கொல்லப்பட்டுக்கொண்டிருக்கின்றார்கள் அவர்களை விடவா என உயிர் மேலாது என பதிலுரைத்தது.
இன்றைய நிலையின் முத்துக்குமார் நினைத்த புத்தி சாலிகளாக ஈழத்தமிழினம் நாம் இருக்கிறோமா
No comments:
Post a Comment