Wednesday, February 6, 2019

நான் ஞானம் பெற்ற இரவு-பொன்.காந்தன்


இரவு முழுக்க மேசைக்காலோடு
விலங்கு பூட்டி என்னை கட்டிப்போட்டிருந்தார்கள்
திரும்பியோ புரண்டு படுக்கமுடியாதபடி
விலங்கு அவதிப்படுத்தியது
சிங்களவர்களை புரிந்து கொள்ளவும்
சிங்களவர்களை பற்றி சிந்திக்கவும்
சிங்களவர்களை பற்றி
வரலாறுகளில் படித்தவற்றை
சரியா தவறா என நிதானித்துக்கொள்ளவும்
அந்த இரவு எனக்கு வரமாகவும் இருந்தது
புத்தர் என்ற சித்தார்த்தனும்
அவ்வாறான ஒரு இரவில்தான்
எழுந்து நடக்கத் தொடங்கினார்
புத்தரை வணங்குபவர்கள்
எழுந்து நான் நடந்துவிடாதபடி
எனக்கு விலங்கு பூட்டியிருந்தார்கள்
காலையில் நான் காலைக்கடன் கழிக்கும்போது
ஒரு சிங்களவன் காவலிருந்தான்
பிறகு ஒரு மூலையில் குந்தியிருந்தேன்
ஆண் பெண்ணென என்னை பார்த்துக்கடந்தார்கள்
அவர்கள் பார்வையில்
ஒரு சகோதரனை பார்ப்பதுபோல இருக்கவில்லை
ஒரு மிருகம் இரையை பார்ப்பது போல இருந்தது
பிறகு இன்னொரு அறைக்கு நடக்கச்சொன்னார்கள்
அங்கு குந்தியிருந்தேன்
அங்கு என்னோடு சகோதரனாக பழகுவதற்கு அல்ல
என்னை பற்றி அறிவதற்காக
தமிழ் கற்ற ஒருவன் விசாரணையை தொடங்கினான்
அவன் என்னை தள்ளிவிழுத்தி
சப்பாத்துக்கால்களால்
என் நெஞ்சில் ஏறி மிதித்து தாக்கினான்
சுற்றி நின்று ஆண்களும் பெண்களும்
அவர்களது மொழியில் பேசி சிரித்தார்கள்
அதனால் சிங்களமும் கூட
எனக்கு ஒரு சகோதர மொழியாய் அல்ல
எதிரியின் மொழியாய் தெரிகின்றது இன்றுவரை
பிறகு சிறைக்கூண்டில் அடைக்கப்பட்டேன்
மறுநாள் எனக்கு ஆவணம் ஒன்று தந்தார்கள்
அதில்
புலிகளையும் பயங்கரவாதத்தையும்
நான் தூண்டுபவனாக சித்தரிக்கப்பட்டிருந்தேன்
1979ம் ஆண்டின் பயங்கரவாத சட்டத்தின் கீழ்
2009ன் பின் நான் சிறை வைக்கப்பட்டிருந்தேன்
சிறீலங்காவின் எழுபத்தோராவது சுதந்திர தினத்தில்
அறுபத்தைந்தாவது சுதந்திரதினத்தில்
சிறையில் இருந்ததை நினைக்கின்றேன்
அன்று கிரிபத் தந்தார்கள்
தமிழர்களை சிறையில் வைத்தபடி
அவர்கள் தங்கள் மகிழ்ச்சியை கொண்டாடினார்கள்
இன்றும் அப்படித்தான்
அநேகம் நான்
சிறையில் என்னை சப்பாத்துக்கால்களால்
மிதித்து தாக்கிய
அந்த சிங்களவன் ஊடாகவே
சிங்கள மக்களையும் பார்க்கிறேன்
என்னை அவ்வாறு படைத்திருப்பதும் அவர்களே!
இவ்வாறு நான் மட்டுமா!

No comments:

Post a Comment

பிரசாதமே!!

  கொடிய போர் கண்ட நகரம் போலில்லை காலிழந்தவனுக்கு கால் முளைக்கும் உணர்ச்சியை கண்ணிழந்தவனுக்கு ஒளியூறும்  மனத்தை உண்டாக்கவில்லை யாரேனும் பறக்க...