Saturday, February 2, 2019

அம்பிலாந்துறை கிழவி-பொன்.காந்தன்,


அம்பிலாந்துறை கிழவி
உன்னிடம் யாரும் கதை இப்போது கேட்பதும் இல்லை
நீயும் சொல்வதுமில்லை
கொக்கட்டிச்சோலை தான்தோன்றி ஈசுவரனை
கும்பிட்டு கடந்து போகிற பலருக்கு
உனக்குள் உள்ள ஊருபட்ட கதை தெரியாது
எங்களின் கதையை சொல்லாமல்
பல கிழவிகள் போய்ச்சேர்ந்துவிட்டார்கள்
கிழவிகளிடம் கதை கேட்காவிட்டால்
எனக்கென்றெரு கதை இல்லை
என்னுடைய கதையை தொடங்கவேண்டிய இடத்தை
கிழவிதான் சொல்லும்
அம்பிலாந்துறை கிழவி நீயும் சொல்லிச்செல்
மட்டக்களப்பின் வர்ணனையை
வாவியில் இருந்துதான் தொடங்க பழகிவிட்டோம்
கிழவிகளிடம் இருந்து தொடங்கலாம்
கிழவிகள் எங்கிருந்தோ இருந்து
ஒரு ஊரின் கதையை தொடங்கும்
அது தான் உண்மையான மட்டக்களப்பு
அம்பிலாந்துறை கிழவி
நீ பலமுறை வாழ்நாளில்
உன் வீட்டில் இருந்தது கிடையாது
உன்னை உன் வீட்டில் இருக்க
சிங்களப்படை விட்டதும் இல்லை
வயல்களுக்குள் ஓடி ஒழித்து இருந்தாய்
பின்பலமுறை
அவங்கள் வாறாங்கள் என்றவுடன்
வயல்களை கடந்து காட்டுக்குள் போய் மறைந்திருந்தாய்
உனது வீடும் ஊரும் சுற்றிவளைக்கப்பட்டபோது
வயல்கள் காடுகள் குன்றுகள் ஆறுகள் வெளிகள் எல்லாம் கடந்து
நாதியற்று நடுநடுங்கி ஓடினாய்
அகப்பட்டால் கற்பழித்து விடுவார்கள்
சுட்டுவிடுவார்கள்
கைதுசெய்து கொண்டு சென்று சித்திரவதை செய்வார்கள்
நிர்வாணப்படுத்தி கொடுமை செய்வார்கள்
வெட்டுவார்கள்
ஒவ்வொருமுறை ஓடும்போதும்
இந்த எண்ணங்கள் உன்னை கொடுரமாக துரத்தின
நீ திரும்பி வந்த காலங்களில்
ஒரு முறை உன் வீடெரிந்திருந்தது
இன்னொரு முறை உன் அயல் வீட்டு நண்பி
கற்பழிக்கப்பட்டு கொல்லப்பட்டாள்
பிறிதொருமுறை உன் கணவன் சுட்டு எரிக்கட்டிருந்தார்
முடிவாக உனது ஊரே எரிக்கப்பட்டிருந்தது
ஊரில் பாதிப்பேர் கொல்லப்பட்டிருந்தனர்
ஆண்கள் இல்லாத ஊராக மாறியிருந்தது ஊர்
நீ எல்லாத்துயரும் சுமந்த கிழவியானாய்
இப்போது உனது ஊரின் கதையில்
நீ இல்லாது இருக்கிறாய்
நீ இல்லாத கதையில்
உனது ஊரும் இருக்காது
நீயில்லாத ஊரின் கதையில்
அழகான வாவியும்
இப்போது செல்போன் கோபுரங்கள் உயர்ந்திருக்கும்
அந்த வயல்களும்
வருவோரை வழியனுப்பி வைக்கும்
அரிவி வெட்டுக்காலத்தின் பின் தொடங்கும்
கூத்தாட்டப்பொழுதொன்றில்
ஊரிழந்த கதையை சலங்கைகளுக்கு சொல்
உனது கதை இன்றில்லையெனினும்
வாளேந்திய மன்னவனின் தாளத்துக்கு
தாளக்கட்டின் தாகமாக ஒருநாள் மாறும்

No comments:

Post a Comment

பிரசாதமே!!

  கொடிய போர் கண்ட நகரம் போலில்லை காலிழந்தவனுக்கு கால் முளைக்கும் உணர்ச்சியை கண்ணிழந்தவனுக்கு ஒளியூறும்  மனத்தை உண்டாக்கவில்லை யாரேனும் பறக்க...