Wednesday, February 6, 2019

சொல்லக்கூடாத கதை-பொன்.காந்தன்




இப்போது சீனி உருளைக்கிழங்கு முட்டை வாழைப்பழம் சவர்க்காரம் சாம்பூ என்று கடைகளுக்கு ஒரு கிலோ அரைக்கிலோ காக்கிலோ ஒரு லீற்றர் என கணக்குகளை போட்டபடி ஒரு பக்கத்தில் வந்து நிற்கின்ற கவிதையை ஒதுக்கிவிட்டு மனசுக்குள் ஒரு பட்டியலை காவிக்கொண்டு கடைக்குள் சென்று நெரிசலுக்குள் சிட்டை போடுகின்றவரின் முகம் என்னை பார்த்து என்ன வேண்டுமென்று கேட்காதோ என்று எட்டி தலையை நுழைத்தபடி நிற்கின்றபோது தாய்மார்களோடு தந்தைமார்களோடு வருகின்ற சிறிய இன்னமும் பேச ஆரம்பிக்காத மழலைகள் என் மனசை இழுத்து சிறிது நேரம் தங்கள் கால்களுக்குள் கடவுளின் வாகனம் போல சிவனின் கழுத்தில் பாம்புபோல தலையில் பிறையைப்போல ஆக்கிவிடும்.எனக்கு பிறகு வந்தவர்கள் பொருட்கள் வாங்கி வீடுகளுக்கு போய்ச்சேர்ந்தாலும் என் பொருட்களை அப்பொழுதுதான் சரைகளில் கட்டிக்கொண்டிருக்கின்ற அனுபவம் எனக்கு மட்டுமல்ல உங்களில் பலருக்கும் நேர்கின்ற ஒன்றுதான்.
கடைகளுக்கு தாய்மார்களோடு வரும் மழைலைகளின் கைகள் காட்டுகின்ற திசைகளை பார்த்தால் அங்கு மனதை கவரும் நிறத்தில் ஏதோ தொங்கிக்கொண்டு இருக்கும் அது சிலவேளை மிளகாய்ப்பொடி பையாக கூட இருக்கலாம்.மழைலைகளின் கைகள் மனசு தேடுகின்றவை அழகிய வர்ணங்களும் அழகிய பொதிகளும்தான்.சில மழலைகள் கடைக்குப்போனால் எப்போதும் காட்டும் ஏதோ முட்டாயை கடைக்காரர் முந்திக்கொண்டு எடுத்துக்குடுத்து மழலைகளின் கனவு நாயகன் ஆகிவிடுவார்.கடைசிவரை மனதில் அழிந்துபோகாத நினைவுகளை தரக்கூடிய கடைக்காரர்களும் ஊருக்கு ஓரிண்டுபேர் இருக்கத்தான் செயவார்கள்.இல்லாவிட்டால் ஒருவராவது இருந்தால் நல்லதுதான்.அநேகம் கடைகளில் திருவிழாக்களில் பேரூந்து பயணங்களில் கண்களில்படும் மழலைகள் என்னையும் என் மழலைக்காலத்துக்கு அழைத்துச்செல்லும் சில கணப்பொழுதுகள் இனிமையானவை.நானும் இவ்வாறு சிறுவயதில் கைகாட்டியிருக்கின்றேன்.அநேகமாக இன்னமும் நினைவில் அழியாத நான் கைகாட்டியதில் ஒன்று நெக்டோ சோடா.
அநேகமாக அந்த மழலை வயதில் கடைக்கு அழைத்துச்செல்லப்படும்போது என் கண் குத்திட்டு நிற்பது நெக்டோவில்தான்.என்னவோ தெரியவில்லை.நான் நினைக்கின்றேன் அதன் நிறம்தான் என்னை கவர்ந்திழுத்துள்ளது.அதன் சுவை பற்றி அறிய நெடுநாட்கள் ஆயிற்று.பின்னாளில் கவர்கின்ற நிறங்களுக்கு பின்னால் உள்ள தத்துவார்த்தங்களையெல்லாம் அனுபவத்தில் கண்டவனாகிவிட்டேன்.கடையில் இருக்கின்ற நெக்டோ அத்தனையையும் குடித்தால் என்பதுபோல அந்த அவா அன்று இருந்தது.ஆனால் எனக்கு கிடைத்ததோ ஓரேஞ் பார்லிதான்.வீட்டில் அப்பருக்கு வாயில் பாடமான ஒரே சோடா ஓரேஞ்பார்லிதான்.அம்மா ஒரு மிடறு குடித்துவிட்டு குடி என்பார் என்னை நானும் ஒரு இரண்டு மிடறு குடித்துவிட்டுகொடுப்பேன்.மிகுதி அப்பரின் அண்ணாக்குக்குள் முடிந்துவிடும்.பேருந்தில் கிளிநொச்சியில் இருந்து புறப்பட்டு பருத்தித்துறையில் போய் இறங்குவதற்குள் அன்றைய சிரிபி பேரூந்தின் டீசல் புகைமணத்தில் எப்படியோவது கொடிகாமம் போவதற்குள் இரண்டு முறை அப்பாவின் வேட்டியில் சத்தி எடுத்துவிடுவேன்.கொடிகாமத்தில் அப்பா இறங்கி கையில் ஓரேஞ்பார்லியோடும் வடையோடும் வருவார்.பிறகு தட்டி வானில் பயணம் தொடரும்.
பேருந்துப்பயணத்தின்போதும் எப்போதாவது காய்ச்சல் வருகின்றபோதும் இடைவிடாத சத்தி எடுப்பது எனது தேசிய குணமாய் இருந்தது.அதனால் பேரூந்து பயணம் என்று வீட்டில் சிறுவயதில் புறப்பட்டாலே எம கண்டம் போவதுபோல இருக்கும் சிலவேளை ஒரு நெக்டோ சோடாவோடு ஏறியிருந்தால் சத்தி எடுத்திருக்கமாட்டேனே என்னவோ.காய்ச்சல் வருகின்றபோது என்னுடைய கசக்கும் வாயக்கு வழமைக்கு மாறாக நெக்டோவின்மீது அதிக வேட்கை தோன்றும்.ஆனாலும் நெக்டோ கிடைக்காது.பிளேன் சோடா வரும்.அதைவிட ஓரேஞ்பார்லி மேல்.ஆனால் காய்ச்சலின்போது அதுவும் கிடைக்காது.அது குடித்தால் சத்தி வருமாம் என்று எனக்கு பிளேன்சோடாவே சிபார்சு செய்யப்படும்.சரி நெக்டோ பைத்தியமே எப்போதுதான் நெக்டோவை குடித்தாய் என்று நீங்கள் என்னை கேட்டே ஆகவேண்டும்.
ஆம் என் கனவு பானமான நெக்டோவை என் பழலை பருவத்தின் முடிவை நோக்கிய நாட்களில் எங்கள் அயல்வீட்டு அக்காவின் சாமத்தியவீட்டில் பரிமாறியபோது அருந்தினேன்.அந்த முதல் அனுபவத்திற்கு வார்த்தை இல்லை.இன்று என் வார்த்தைகளில் அதை எழுதுவது ஆனால் வர்ணங்களால் அலங்கரிக்கப்பட்ட விழாவில் இந்திரலோக மங்கை ஒருத்தி அந்த தேவபானத்தை எடுத்து வந்து முன்னே நின்றாள் என்றே எழுதவேண்டும்.இப்போதும் நெக்டோ கடைகளில் பெரிய இறப்பர் போத்தல்களில் என்றெல்லாம் வந்துவிட்டன.நான் பார்த்த அந்த நெக்டோ யானைப்போத்தல்.இப்போது செத்தவீடுகளில் சுடலையில் பிரேதத்தை எரித்தவிட்டு திரும்புகின்றபோது உரித்துக்காரர்கள் வந்தவர்களுக்கு சோடா வழங்கும் பண்பாடு ஒன்று நிலவுகின்றது.சுடலைக்கு போகும் சந்தர்ப்பங்களில் இப்போதும் என் கண் சிறிய நெக்டோவை தேடி எடுக்கும்.இருந்தும் அந்த மழலை வயதின் நெக்டோ இது இல்லை என்பதுபோலவே இருக்கும்.
இந்த நெக்டோ கதையை எப்போதாவது கடைகளில் மழலைகள் கைநீட்டக்காணும் போது அறிமும் இல்லாவிட்டாலும் அதன் தாய்க்கோ தந்தைக்கோ ஒரு புன்னகையை உதிர்ந்துவிட்டு என் நெக்டோ ஆவல் கதையை சொல்லிச்சிரிப்பேன்.எனினும் ஒருநாள் நிறைய தாய்மார்கள் இருந்த சந்தர்ப்பத்தில் குளிர்பானங்கள் பரிமாறப்பட்டபோது அந்த சாமத்தியவீடுபோலவே நெக்டோ வந்தது எடுத்து அருந்திவிட்டு என் நெக்டோ கதையை என்னையறியாமலே சொல்லிச்சிரித்தபோது அருகில் இருந்த தலையில் நரை தழுவிய தாயின் கண்களில் கண்ணீர்.என்னுடைய கடைசிக்கும் இந்த சோடா எண்டால் பைத்தியம்.எங்க இருக்குதோ என்ர பிள்ளை என விம்மத்தொடங்கினாள் அந்த தாய்.அவளின் கடைசி மகனை காணவில்லை என உணர்ந்தேன்.போரின் பின் சொல்லக்கூடாது கதைகளில் என் நெக்டோ கதையையும் சேர்த்துக்கொள்கின்றேன்.

No comments:

Post a Comment

பிரசாதமே!!

  கொடிய போர் கண்ட நகரம் போலில்லை காலிழந்தவனுக்கு கால் முளைக்கும் உணர்ச்சியை கண்ணிழந்தவனுக்கு ஒளியூறும்  மனத்தை உண்டாக்கவில்லை யாரேனும் பறக்க...