தாராள மனது படைத்த பூமி
கேளாமல் திருடிய கள்ளக்கூட்டம்
இம்முறை மாரி மகா கும்பாபிசேகம்தான் போலும்
எல்நினோ ஏன்
இளம் கவர்ச்சி நங்கையாக மாறக்கூடாது
வெக்கை புளுக்கம் தலைகீழாகி
அக்கம் பக்கம் அலாதியும் உலாவ இதமுமாகும்
இனியொரு போதும் நடவாதோ
நப்பாசை கொள்ள நமக்கெல்லாம் என்ன தகுதி
எப்போதோ இந்த பூமி பேரழகாம்
சித்திரவதை செய்தால் சீறாமல் தடவுமா
அடிக்கடி குலுங்குவது ஆத்திரம்தான்
அப்புறம் என்ன
குப்புற மலைகள் சரிகிறது
கொண்டு போகிறது வீடுகளை வெள்ளம்
ஆற்றை மறித்து அடுக்குமாடி
குளத்துக்கு மண்நிரவி கொண்டாட்ட விடுதி
அலுத்துப் போய்விட்ட இயற்கை
ஏர்த் என்ன எங்கள் குடும்பச் சொத்தா
கண்டம் விட்டு கறுமங்களை ஏவுவார்
விழுகிற இடத்தில் என்ன
வெள்ளரிப்பழமா தோன்றும்
விதையொன்று வீழ விருட்சமொன்று வேரோட
நதிகளுக்கு பாய்விரித்து சுழலுவது
சொர்க்கமென எண்ணத்தவறிய
சின்னத்தனங்களுக்கு சிறைத் தண்டனையாய் பக்கமெல்லாம்
சுற்றி வளைக்கும் இயற்கைத் தாண்டவம்
யூரோப்பில் வெறிகீற்றாம்
கேரளாவில் வெள்ளம்
ஆலப்புளாவை அடித்த துவைக்கிறது
சிறீலங்காவில் சீரோவாகும் குளிர்ச்சி
ரூலெற் இனி ருத்ரதாண்டவம்தான்
தாராள மனது படைத்த பூமி
கேளாமல் திருடிய கள்ளக்கூட்டம் மனிதர்கள்
ஆனைகளுக்கு எழுத வாசிக்கத் தெரியுமா
தெரிந்திருந்தால்
சுப்பிரிண்ட் கோட்டில்
எத்தனை முறை ஏறியிறங்கியிருக்கும்
தன்வீட்டை அழித்தவரை விடுமா என்ன
கோலங்கள் மாறியதெப்படி
அடைக்கு காத்திருந்து அலுத்துவிட்டதாய்
யாரோ ஒருத்தர் குரல்
கடைத் தெருவில் காலத்திருடன் விழித்தான்
கோழியினி தேவையில்லை
குஞ்சு பொரிக்குமென்று வாசலில் நின்றான்
கோடிக்குள்ளிருந்த கூடையும் சாக்கும் உமியும்
பாடையிலேறியது
பல்லக்கிலமர்ந்தன இலகுவாக்குவனவாம்
ஆலம்விழுதும் வேம்பங்குச்சியும்
பல்லுக்குள் செருகிய பழையவர்களை
அடுத்த தலைமுறை ஒரு ஆடுபோல பார்த்தன
அடுத்து குங்கும நிறத்தில் அண்ணா பற்பொடி
அரங்கிலிருந்து வெளியேற்றப்பட்டது
எல்லாக்குளியலறையிலும்
இப்போது
பிதுக்க சொறிய தடவ வந்து குந்தின
இரவு மோகனத்தில் எழில் குறையாதவளிடம்
முதுகைத் தேய்த்துவிட அழைக்கும் குரல்
அருகிப்போக
அன்னியமாகியது இயற்கையும்
அதன் இன்பப் பெருக்கும்

No comments:
Post a Comment