எரிக்குகளின் காலமும்
இராச்சிய தலைநகர் கிளிநொச்சி வாசமும்
வலைகள் வசியங்களோடு வருகிறார் எரிக்மேயர்
வாசிங்டன் புறப்படுகிறார் யூலிசங்
அறகலயவுக்கு பின்னால் ஆட்டுவித்தது
இந்த சிவலை சிறுக்கிதானென்று ஊகித்தவரும்
எப்ப துலைவாளென
புத்தருக்கு முன்னொரு கூட்டம் பூவைத்ததுமுண்டு
வடக்கு கிழக்கும் வந்தார்
கவலைப்படுமாற்போல கண்ணை கசக்கினார்
அடுத்த கணமே அமெரிக்கா
பொறுப்புக்கூறலுக்கு புடுங்கி அடுக்குமென்று
புல்லரித்தும் போயிருந்தோம் நாம்
பிறகுதான் புரிகிறது எரிக்குகளின் புன்னகை
பூகோள அரசியலில்
சாவுகளை கூட சாதாரணமாய் கடக்கக்கூடியது
ஐந்நூறு கடந்து விட்டது செம்மணி
ஆயினும் எந்த
அசுமாத்தமும் தெரியவில்லை அடுத்து என்னவென
வேலியில் எட்டிப்பார்த்தபடி
வேதனையின் முனகல் நீதிக்காக ஏங்கும் முகங்கள்
வாருங்கள் எரிக்! வரவேற்பது பண்பாடு!!
எரிக்கென்றவுடன் இறந்தகாலம் நோக்கி
ஒரு முறை மனம் ஓடித்தான் திரும்பும்
அற்றை நாளில் என் முகவரி கிளிநொச்சி
அதிலொரு கர்வமிருந்தது
நெஞ்சு புடைத்தபடி முற்றவெளியடியில்
பெட்டிக்கடை உதயசூரியனோடு
மச்சான் போட்டபடி மாறுகிற காலமொன்றை
கண்ணெதிரே காணலுற்றேன்
அக்கம் பக்கத்தில் சோழன் இளந்தென்றல்
நடுவப்பணியகம் இப்படி சில பெயர்களை
அழகுடுத்தியிருந்தது நகரம்
நீலநிறமுடுத்திய காவல்துறை காத்திருந்தது
சில பஜிரோக்களும்
ஊழி முடிந்து எல்லாம் இனி நல்லபடியென்று
நம்பியது கிளிநொச்சி
புள்ளியாய் பார்த்துப்பழகிய உலங்கு வானூர்திகள்
நல்ல பிள்ளைகள் வேடமிட்டு
நாலுவட்டமடித்தது
எங்கேயோ நின்ற இளையதம்பி ஏரம்பு
சில்லுக்கழற ஓடி வந்து சேர்ந்தனர்
குமரன் புடவைக்கடவை முதலாளியின் முகத்தில்
அன்று குங்குமப்பூ மலரக் கண்டேன்
துர்க்கா கோட்டேல் ரீமேக்கர்
ஆத்திய பேணியோடு ஆகாயத்தை பார்த்தான்
காக்கா கடை சந்திப்பக்கம்
விடுப்புப்பார்க்கவென்று நீண்டது வரிசை
பரவிப்பாஞ்சானன்று பாதுகாப்பு வலயம்
அங்கே இராச்சிய தலைவன் பிரபாகரன்
காத்திருந்தார் கைகுலுக்க
நித்திரையிலிருந்து வெளவால்கள் முற்றவெளியில்
சுற்றிப் பறந்தன
செல்லத்துரையரின் தென்னையை சிலாவியபடி
வந்திறங்கியது உலுங்குவானூர்தி
ஈழநாதம் நிதர்சனம் புலிகளின் குரல்
புதினங்களை புகுந்து படமெடுத்தது
கவனத்தை சிதறவிடாமல் ஒரு காட்சி விரிந்தது
இந்த வரலாற்று தருணத்தை
வரைபடமாய் நெஞ்சு கீறிக்கொண்டிருந்தது
பல்லாயிரம் பேரின் குருதி
படைத்த வெற்றிகளின் பின்னர்தான்
உலகம் ஒரு முறை எங்கள் முற்றத்தில் சுற்றும்
காலம் கைவரப்பெற்றது
பலமாயிருந்தபோதுதான் நலமாவென விசாரிக்க
சொல்கெய்ம் இறங்கினார்
ஆகாயம் கடல்நிலம் யாவிலும் தமிழர்
அளவெடுத்துப்பார்த்த பிறகுதான்
நீளமாய் விட்டால் நிலவிலும் தங்ககம்
வெதுப்பகம் காப்பகம் வைப்பார்
அதற்குப் பிறகு தலையிடியாவர்
கணித்தனர் கதைத்தனர் வந்தனர்
சமதான தேவதையை இறக்கி
உரமான நெஞ்சுகளுக்குள்
ஊஞ்சலாடும்போது காய்ந்துபோகும் தாகம்
பிறகு காணாமலே போய்விடும்
பரவிப்பாஞ்சான் போனார் எரிக் பிறகு
பவனியாய் தாங்வீயூவில் தங்கி
கனகாம்பிகை குளக் காற்று வாங்கினார்
வரவேற்றது வழியனுப்பியது
என்றும் குறை வைத்ததில்லை நிலம்
நிகழ்கால எரிக்கின் வரவில்
இறந்த கால சொல்கெய்மின் சமாதானம் சந்திப்பு
தொலைந்துபோன கோட்டில் எழுத தவிக்கும்
ஏமாற்றம் துயர் வலி கதையாய்
சாம்பலில் இருந்து ஒரு நினைவு எட்டிப்பார்க்கிறது
இப்போது என் கண்ணில்
அண்ணாந்து கிடந்து காறியுமுழும் ஓரினமாய்
யார் யாரோ சாய்க்கத்
சரியென்று பின் செல்லும் மந்தைகளாய்
வேரில் வேறொரு மரம் முளைக்கும் உணர்ச்சி

No comments:
Post a Comment