முதலாம் குறுக்கு எப்படி மாறிவிட்டது
பேசியலுக்கு பிறகு
பிம்பிள்சும் இல்லை தழும்புகளும் மாயம்
வேறு யாரோ போல
மறந்து போச்சு பீயோன் நடராசாவையே
அந்த பெல் அடித்தால்
பிரம்ம முகூர்த்தங்கள் ஒன்றிரண்டா நினைவில்
என்னதான் இருந்தாலும்
கன்னக் குழிகளோடுதான் அழகு
சல்லிகள் போட்டு
சமாளித்து ஏதோ ஏறி உழக்கி
பம்மிங்கும் எடுத்தாப்பிறகு
பரமக்கா வளவுக்கு மட்டுமில்லை
பரலோகம் போறவருக்கும்
அதுதான் வழி
முதலாம் குறுக்கின்
முழுவியளமே சாணக்கும்பிதான்
நடுத்தெருவில் கிடக்கும் சைக்கிள்
நல்ல வெறியில்
சறத்துக்குள் படமோடும்
கண்டவர் சிரிக்க
பெண்டுகள் வாயை பொத்தி பறக்க
அது ஒரு நந்தவனத் தெருவும்தான்
காப்பற்றுக்கு பிறகு
கண்டு தலையாட்டிப் போகும்
உறவுச்சங்கமம் ஓடியே போயிற்று
நின்று கதைக்க நேரமில்லாதவருக்கு
வாழ்க்கைப் பட்டு
முண்டி விழுங்கிக்கிடக்கிறது தெரு
குண்டு குழி புளுதியில் கூட
புன்னகைக்கொரு பொன்வீதி இருந்ததுபோல
கந்தர்வப்பூக்களை சொரிந்து
இந்திர வீதியென
முகவரி மாற்றும் கொண்டல்
அந்தியொன்றை
அற்புத கனிகளாய்த் தரும் நாவலிரண்டு
குழப்படி செய்ய
கொந்தல் மாங்காய் வளவு
மன்னிப்புக்கள் அடிக்கடி கேட்க
மாதா சொருபமொன்று
வெள்ளிக்கிழமைகளில்
பஞ்சாமிர்தத்துக்கு
படாதபாடு படவைக்கும் பிள்ளையார்
அற்றைத் தெருவே அமுதுதானே
மாரியில்
மணியண்ணையின் றக்டர் புதையும்
உரலும் வைத்து
உலக்கையும் வைத்து தெண்டி
உன்னி தள்ளி உடம்பெல்லாம்
ஓவியம் சேற்று வர்ணம்
ஆண்டில் ஒருநாள்
கனகாம்பிகை அம்மன் வருவாள்
கறையெல்லாம் கழுவித் துடைத்து
நிறைகுடங்களோடு நிற்கும் தெரு
கனகசபையின் தோட்ட
கதலியும் கப்பலும் வெளியிலும் எட்டிப்பார்க்கும்
வெருளியுமொன்று
அரளி மரங்கள் அம்பலவாணர் வேலியில்
சீமைக்கிளுவைகளை பற்றி பற்றியிழுத்து
செம ருசியென்று சிலாகித்துபோகும் ஆடுகள்
இரண்டு கல்வீடு
அறுபது கொட்டில்கள்
இடிந்த மண் கிணறுகளின் உழண்டி சத்தம்
ஒவ்வொரு வேலியிலும்
குடியுரிமைபெற்ற குருவிகள்
சில்வண்டுகளுக்கும் ஒரு அந்தஸ்த்து
தூக்கணாங்குருவிக்கூட்டு மரம்
கூப்பிடு தூரத்தில் இருந்தன
கைபேசிக்கோபுரமொன்று
கவட்டை பிளந்தபடி
வண்ணத்துப் பூச்சி வளவுக்குள்
தண்ணி எற்றி விளையாட பள்ளமும் இல்லை இப்போது
நிரவப்பட்டு விட்டன எல்லாமே
புளுதி அடங்கிய மாலைப்பொழுதில்
புள்ளியாய் தெரிந்து பெருக்கும் உருவத்தில்
முதலாம் குறுகுப்படலையில் விரியும்
சரசுவும் புன்னகையும் கூட!

No comments:
Post a Comment