சீர்காழியும் சௌந்தர்ராஜனும் கேபி சுந்தராம்பாளும்
செல்வராணி ரீச்சற்ற பஜனையுமே
கதியென்றிருந்த கிளிநொச்சி முருகனுக்கு
தொண்ணூற்றைந்தாம் ஆண்டளவில்
ஒரு கிளுகிளுப்பு அனுபவம்
அதுவரையும் கோயில் மேளம் மணியண்ணை குழுவின்ர
இரண்டு தவிலும் இரண்டு பீப்பியும்தான்.
மணியண்ணை தலையை சடையாய் வளத்தவர்
வெத்திலையை வாய்குள்ள வச்சுக்கொண்டு வெளுப்பார்
தர்மகத்தா மடப்பள்ளிக்கும் வசந்த மண்டபத்துக்கும்
ஒரு பத்து கிலோமீற்றர் நடப்பார்
காரணமில்லாமலும் போய் வருவார்
கணேசபுரத்தாருக்கு தாங்கள் தான் முருகனை
தூக்கி காவிறது எண்ட தடிப்பு
இதுக்குள்ள திருநகர் கனகபுரக் காரனும்
தெண்டிப்பிடிச்சு நுழைஞ்சு பந்தத்தை ஏந்திப்போடுவாங்கள்
முருகனின்ர ஒரு வேலி பரவிப்பாஞ்சான்
பரவிப்பாஞ்சான்காரர் கொஞ்சம் பணக்காரர்
முருகனும் அஞ்சு பத்தை வாங்கினார்
ஆனாலும் பணக்காரத் தெரு
கணேசபுரத்துக்குள்ளதான் இருந்தது
நாங்கள் இரத்தினபுரம் திருவையாறுப்பக்கம்
என்னதான் இருந்தாலும்
முருகன் குளிக்க எங்கட பக்க குளத்துக்குதான் வரவேணும்
முருகன் வள்ளி தெய்வானையை
இரட்டிப்பு அழகாக்கிறதும் அந்த குளத்தாமரைகள்தான்
திருவிழாக்காலத்தில் முருகன் இரவு வீதியுலாவில்
தெற்கு மூலையில் சிறிது நேரம் தரிப்பார்
அந்த மூலையில் சோபிகா குடும்பம்
நிறைகுடம் வைத்து முருகனை வரவேற்பது வழக்கம்
இரவு திருவிழாவுக்கு இளைஞர் கூட்டம்
நிரம்பி வழியும் காரணம் முருகனல்ல
சோபிகா
அப்போது அவள் பதினாறு வயது மங்கை
வர்ணமான ரியூப் லைற்
அந்த ஒளிபட்டுத் தெறிக்கும் ஒரு மாயத்தோற்றத்தில்
சோபிகா தேவலோக சுந்தரியாக தோன்றினாள்
அவள் திருவிழிக்காக காத்துக்கிடந்தன
பருவ வயது இளைய கூட்டம்
திருவிழா என்பது கும்பிடுவாறவரும்
சோபிகாக்களை தரிசிக்க வாறவரும் சேர்ந்ததுதான்
இதில் ஏதேனும் ஒன்றை பிரித்தெடுத்தால்
அந்தத் திருவிழாவின் அழகு குறைந்துவிடும்
முருகனுக்கு அந்த நாட்களில்
வெளிநாடுகளில் இருந்து பணம் அனுப்ப யாருமில்லை
திருவிழாவுக்கு உதவி தெண்டிக்கொண்டு
ஒரு பக்கம் கோணாவில் அக்கராயன்வரை
மறுப்பக்கம் இராமநாதபுரம் புதுக்காடுவரை
முருகனின் தொண்டர்கள் சைக்கிளில் போனார்கள்
பத்து ரூபா ஐம்பது ரூபா நூறு ரூபா
இவை பெரிய காசாய் இருந்த காலம்
சிலர் அரிசி சிலர் வாழைக்குலை தேங்காய் பழங்கள்
வாழை ஓலையென்று உள்ளதை கொடுத்தார்கள்
இரத்தினேஸ்வரக் குருக்கள் இருந்தார்
அவர் ஒரு சாட்டட் எக்கவுண்டன் என்று
என் தந்தையார் உரையாடக்கேட்டுள்ளேன்
ஐயர் என்ற மதிப்பை தாண்டி
ஆங்கில புலமை கொண்ட அறிவாளி என்பதால்
எனக்கும் அவர் இனம்புரியாத ஈர்ப்பு
பின்னாளில் அவர் போர் நிறுத்தக்கண்காணிப்புக்குழுவில்
அங்கம் வகித்தார் என்று நினைக்கிறேன்
அவருடைய அறிவாற்றலை
போராளிகளும் உணர்ந்திருந்தார்கள்
முருகனுக்கு கட்டுத் தேர்தான் இருந்தது
நகர்புறத்திலிருந்த முருகனே கட்டுத் தேர்தான் என்றால்
கிராமங்களை காத்துநின்ற தெய்வங்கள் அநேகமாய்
கொட்டிலில்தான் இருந்தார்கள்
சில அதுவுமற்ற மரத்தடியில் குந்தியிருந்தார்கள்
முருகன் தீர்த்தமாட புறப்பட்டு கரடிப்போக்கு
பரவிப்பாஞ்சான் மருதநகர் வழியாக குளத்தடி வைரவரை அடைவார்
போய் வர பத்து மைல் இருக்கலாம்
அந்த வழியில் வயல்கள் வாய்க்கால்கள் பறவைகள்
மருதமரங்கள் காணாங்கோழிகள் அல்லி தாமரை
கொக்குகள் குரங்குகள் சம்புக்காடுகள்
இப்படி இயற்கையின் திருவிழாவுக்கு இடையில்தான்
முருகன் தீர்த்தமாடச்செல்வார்
அந்த அனுபவத்தில் முருகனுக்கு
வள்ளியை காதலித்த காலங்கள் நிச்சயம் நினைவில்வரும்
வள்ளிக்கோ தான் பிறந்த வளர்ந்த
ஊரின் நினைவுகள் மீளும்
ஒரு முறை திருவிழாக்காலத்தில் முருகன்
புறப்பட்டு வாயிலுக்கு வருகிறார்
நேரெதிரே தெரியும் கணேசபுரத்தை ஊடறுத்துச்செல்லும்
ரயில் பாதையை பார்க்கின்றார்
முகம் சற்று மாறிவிட்டது
எங்கே தண்டவாளத்தை
காணவில்லை என்பதாய் குருக்களை நோக்குகிறார்
குருக்களோ தடுமாறிப்போய்
தங்கள் அடியார்களில் ஒருவன் மாட்டுக்கொட்டிலுக்கு
அதை அறுத்தெடுத்து
நாள் கப்பாக நாட்டி கொட்டகை போட்டுவிட்டான் என்றார்
எட சண்டாளா
இனி யாழ் தேவி வராதா என வினாவினார் முருகன்
இல்லை கடவுளே
வவுனியாவுடன் இனி அதன் பயணம் நின்றுவிடும் என்றார்
ஏனெனில் கிளிநொச்சி முருகனின் காதில் விழும்
தண்டவாளச் சங்கீதமாக நெடுநாள்
யாழ் தேவி இருந்ததால் அவ்வளவு ஆதங்கம் அவருக்கு
ஆனால் ஒரு புதிய அனுபவம் முருகனுக்கு வாய்த்தது
திருவிழா உபயகாரர் ஒருவர்
பூங்காவனத்துக்கு நாதஸ்வர குழுவொன்றை கூட்டிவந்தனர்
மணியண்ணை குழுவின் தவில் கேட்ட முருகன் செவியில்
''சின்ன ராசாவே கட்டெறும்பு என்னக் கடிக்குது' நுழைந்தது
சற்று ஆடிப்போனார் முருகன்
பிறகு சகஜமாயும் போனார்
என் வாழ் நாளில் எளிமையான முருகனை கண்டதில்
மகோற்சவமும் அந்த மஞ்சள் நோட்டீசும்
நினைவுகளின் பச்சையாக மகிழ்கிறேன்

No comments:
Post a Comment