Tuesday, October 20, 2026

 








நகரத்திலொரு மரம்-கிளிநொச்சி

பழைய சந்தைக்கு முன்னால் பரம்பரை விலாசம்
என் இளைய பருவத்திலும் அது பெரிய மரம்
நட்டதில்லை
பறவை எச்சத்தில் இட்டதாயிருக்கலாம்
பட்டுவிடும் விதி பரம்பரைக்கேயில்லையென
கெட்டு விட்டு கிளர்ந்தது ஆல்
சொட்டு நீர் பாசனம் சோவெனும் மழைதான்
சொறி தேய்த்துப் போன மாடுகள்
அதையொரு சொர்க்கமென்றன
சந்தை வானத்தை சொந்தமாக்கிய காகங்கள்
ஒட்டி ஓராவின் துண்டோடு
ஆழிவளை கடலுக்கு
அன்பை சூடியதும் ஆலமரக்கிளையில்தான்
வளர வளர அது வரலாற்று புத்தகமாயிற்று
சின்ன காலுக்கு செருப்பு வாங்க
முத்துபான்சி போனதற்கு சாட்சியமந்த மரம்தான்
அந்தக் கடையே இன்றில்லை
என் காலளவும் ஏழெட்டாச்சு
தண்டவாள தெருவிலே இன்றுவரை வாழ்கிறது
பக்கத்தில் காவல்துறை
கசிப்பு வழக்கு கள்ளத் தொடர்பு முறைப்பாடு
இடுப்பொடிய ஏறிமிதித்த கதை
வெட்டுக்கொத்து பத்துப்பவுண் களவு
கிழவியோடு சேட்டை கேசுகள் கிளைகளுக்கும் தெரியும்
இனிய காற்றொன்றை தந்து
பட்டணம் வருவோருக்கு சற்று மனம் குளிரும் வரவேற்பு
சற்று பின்னே போனால் கொட்டியாவை குறிவைத்த
துப்பாக்கிகளோடு
கொப்பே கடுவாவும் குழுவினரும்
மரத்தை அண்டி முகாமிலிருந்தனர்
இடைக்கிடை மஞ்சுளா பேக்கரித் தெருவில்
அஞ்சும்படியாக டிரக் உறுமல்
என்னவோ நடக்கப்போகிறது
இறுகிய மனதுடன்
இலைகள் எதுவும் மரத்திலன்று ஆடவில்லை
சன்னங்கள் அடிக்கடி சிராய்த்தன
சருகாகமுன் இலைகள் வீழ்ந்தன
சந்தை இடம்மாறியது
பருத்த மார்புடன் உரத்த குரலில் மீன்விற்ற
சின்னம்மாவின் குரலின்றி
செத்ததுபோல கடந்தது மரத்தின் மனம்
வந்த காற்றிடம் விசாரித்தது
ஆனந்ததபுரத்திற்கும்
இரத்தினபுரத்திற்கும் இடையில்
சிங்களப் பள்ளி அருகிலுள்ள வளவில்
சந்தை கூடுகின்றது என்று திரும்புமினி ஏங்கியது
இருண்டு கிடந்த நகரத்தை
மின்மினிகளை அழைத்து கொஞ்சத்தூரத்தை பார்த்தது
சிவசக்தி மில் வீதி
சொல்ல வார்த்தை இன்றி ரணத்திலே கிடந்தது
திரும்ப முடியாமல் போன ரயில் பெட்டிகளில்
கொடிகள் படர்ந்து
கூட்டியது மேலும் சோகத்தை
ஒர நாள் இரவு நகரில் ஏதோ அசுமாத்தம்
எட்டிப்பார்த்தன கிளைகள்
யாரோ தெரியவில்லை
வண்டியொன்றை கொண்டு
முகாம் வந்து
வாசலுக்குள் தள்ளினர் வெடித்தெரிந்தது
பிறகு வெடிசத்தங்கள் விடியும் வரை
நகரை மீட்க எடுத்த முயற்சி
வேலிகளை எரித்து வெருட்டியதோடு முடிந்தது
காகங்களை அழைத்தொரு நாள்
மரம் கலந்துரையாடல் நடத்தியது
நகரம் மறுபடி திரும்புகிறது
குடுமி வைத்த ஒரு கூட்டம் கூடாரம் அடிக்கிறது
வந்திருப்பது இந்தியப்படை
காகங்கள் காதோடு சொல்லின மரத்துக்கு
சந்தை கூடத் தொடங்கியது
சிவசக்தி மில்லின் தூளரைக்கும் வாசத்தை
காற்றள்ளி வந்து இலைகளில் தடவியது
சந்தைக்குள் வேல்முருகா முதலாளி
சரவணபவன்
பல சரக்கு அங்காடிமுன் பரபரப்பாயிருந்தார்
திருவாயாறு மரக்கறிகள்
திரும்பவும் சந்தைக்கு வரத்தொடங்கின
சாய்பாபா பக்தரிடம்
சரசக்கா விரதத்துக்கு வெண்டிக்காய் பாவக்காய்
புடலங்காய் வாங்கி
தலைக்கு முந்தானையை இழுத்து விட்டபடி
கண்டி வீதியோரமாய் நடந்து போகிறார்
இராமநாதபுரம் வட்டக்கச்சி பேருந்தை
செல்லுத்துரையர் ஸ்ராட் செய்கிறார்
முத்துக்குமார்தான் கொண்டக்ரர்
காக்கா கடைச்சந்தி பக்கமாக அது நகர்கிறது
முத்துபான்சிக்கு எதிரே
சந்தையில் வாசல் ஓரமாய் மரத்தின் பார்வையில்
புதிதாய் ஒரு தூபி தெரிகின்றது
அதன் வாசலில் சிலர் ஏறிச்சென்று திரும்புகின்றனர்
வாசலில் ஏறும் போது
ஒருவரின் குரல் ஒலிக்கின்றது
''நான் அமிர்தலிங்கம் பேசுகிறேன்'' என்று அது தொடங்கும்
காகங்களை அழைத்து
மீண்டும் மரம் ஒரு கலந்துரையாடலை நடத்துகின்றது
தூபியை பற்றி விசாரிக்கின்றது
நகரில் இந்தியப்படைகளுடன் ஈஎன்டிஎல்எப்
ரெலோ ஈபிஆர்எல்எப் இயக்கங்களும்
அதில் ஏதோ ஒன்றுதான் இதைக்கட்டின
காகங்கள் காதோடு மரத்துக்குரைத்தன
நகரத்தின் அமைதி நிலைக்காது என்பதுபோல
மரத்துக்கு புரிந்தது
முகாமுக்குள் இருந்து எழுந்து காற்றில் கலக்கும்
உரையாடல்கள் கோபங்கள் வஞ்சகங்கள்
மறுபடி இரத்தம் பலி ஊடரங்கு வெறிச்சோடல்களுக்கு
கட்டியம் கூறிக்காதிலறைந்தன
அதுவே நடக்கவும் தொடங்கியது
மரம் தான் காட்டில் பிறந்திருக்கலாம் என்று
பலவேளைகளில் நினைத்தது
மணலாற்றுக் காட்டில் நானும் ஒரு மரமாக
நின்றிருக்கவேண்டிய காலத்தில்
கிளிநொச்சி நகரத்தில் சிக்கிவிட்டதாக அலுத்துக்கொண்டது
ஆயினும் காட்டின் வாசத்தோடு
டிப்போ சந்திக்கும் கரடிப்போக்குக்கும்
சேவியர் கடையடியிலும் மஞ்சுளா பேக்கரி பக்கமும்
சிலர் வந்து திரும்பியதாகவும்
காத்திருந்ததாகவும் காகங்கள் கூறியதற்கு
வெடிச்சத்தங்களும் கைக்குண்டுகளும்
முகாமுக்குள் நடந்த பதட்டமான
சீக்கிய கிந்தி உரையாடல்களும்
மரத்துக்கு
இன்னொரு காலத்தின் வரவை உணர்த்தின
அதுவே விரைவிலும் நடந்தது
அக்காலத்தின் இறுதிக்காலத்தில்
ஒரு நாள் காலை
மரம் ஒரு காட்சியை கண்டு வியந்தது
மணலாற்று மரங்கள்
காற்றில் எழுதி வாசித்த கவிதையை
இந்த நகரத்து மரமும் படித்திருந்தது
அந்த வரிகளில் வரும் புலிப்படை தலைவன்
காவல்துறை அணிவகுப்பு மரியாதையை
ஏற்றபடி நடந்து கொண்டிருந்தார்
மரத்துக்கு மிக நெருக்கமாக மனசுக்கும்

No comments:

Post a Comment

பிரசாதமே!!

  கொடிய போர் கண்ட நகரம் போலில்லை காலிழந்தவனுக்கு கால் முளைக்கும் உணர்ச்சியை கண்ணிழந்தவனுக்கு ஒளியூறும்  மனத்தை உண்டாக்கவில்லை யாரேனும் பறக்க...