Tuesday, October 20, 2026

 





நீர்வேலி வாழைகள்

நிறைமாதக் கர்ப்பிணியாய்

காணத் தவம் செய்க!
கப்பல் மொந்தன் கதலி இரதையென ஈணுவாள் பார்
இடப்பழத்துடன் இறங்கும் போது
அந்தக் காணி வளவுக்காரனின் கண்ணில்
மின்னுமொரு யாழ்ப்பாணம்
வீடு வந்த பின் மார்ப்புச் சட்டையிலொரு
ஊசி கழற்றி மடியில் வைத்து
ஒன்றிரண்டு தொட்டாச்சிணுங்கி தட்டிவிடுவாள்
ஒரு கவலையும் கண்ணீருமற்ற ஊர்
காரைநகரான் ஒடித்திரிவான்
ஓரிடத்தில் ஓயான்
வெள்ளவத்தையில் பாதியை விலைக்கு வாங்கும் கனவு
அடிவளவுவரை தேடிப்பார்த்தால்
நிலத்தை வரமாய் பெற்ற புல்லரிப்பு
பொயிலை நட்டுப்பார் பொய்க்காது
பூசணி விதைத்தால் பூக்கள் மயக்கும்
வெற்றிடங்களையெல்லாம் வெங்காய் நிரப்பும்
மண்டானில் பாத்தி கட்டி திரும்புவார் அப்பு
பாதிச்சுருட்டை செருகிவிட்டு
இரவு சாறி உழுதார் ஆச்சிக்கு
ஏறு வரிசையில் எட்டு ஒன்பது பத்து
சொர்க்கத்தில் ஒரு கவளம் பிடித்தான்
இந்திரன் சுகங்கள் தடவி எறிந்தான்
அந்நிலத்தாளை யாழ்ப்பாணமென அழைத்தோம்
பார்த்தவனெல்லாம் அடையத்துடித்தான்
பறங்கியனுக்கு கனவுக்கு கன்னி
ஒல்லாந்தனும்
ஓரக்கண் பார்வைக்கு ஊறினான் வாய்
கோட்டை கட்டி மஞ்சத்தை கவர மாய்ந்தனர்
இல்லையென்று
இறுதிவரை இன்றுவரையும்தான்
இன்பத்தமிழருக்கன்றி
எவனுக்கும் நெஞ்சத்தில் இடமில்லை என்பவள்
நேற்றவள் பேரழகை
அச்சுவேலி ஆவரங்கால் புத்தூரான் பொலிகண்டியான்
வானவில்லால் வரைவான்
வல்லை வெளியை கொள்ளையடி
வடமராட்சி உன்னை இன்பச்சிறையிடும்
பண்ணையில்
செல்லமாய் ஒரு கிள்ளு கிள்ளுவிட்டு
நித்தமும் சூரியன் படுக்கைக்கு போகிறான்
நிலவால் பனை நெஞ்சை அள்ளும்
அதனால் கண்ணூறு பட்டதோ என்னவோ
காலம் ஏன் பகைத்தது
மண்ணை கிழற நெஞ்சு பதறும் நாட்களை
இந்நிலம் நினைத்ததில்லை
ஆயுள் முடிகையில்
அந்த ஒப்பாரியும் பறையும்
பாடையிலது போகையில் ஓர் பரம திருப்தியும்
ஆடியமாவாசை ஆண்டுத் திதிகள்
கிள்ளி எறியும் சோற்றை
காகம் கொத்தினால்
அமரர் தரிசனமெனும் இயல்பும்
குழற குழற கொலை பாதகர் இழுத்துப்போக
தெலைந்தது துயர நிலமானது
புதைகுழியும் புதைகுழியும் சார்ந்த மண்
எத்தனையாம் திணை
எரித்தால் கீரிமலைக்குப் போவோம்
சாம்பல் கரைப்போம்
மரித்தால் மீண்டுமொருநாள்
கல்லறைப்பெருநாளுக்கு வருவோம்
வாசமலர் வைத்து வருடி கண்ணீர் விடுவோம்
ஆண்டவன் அடியில்
கர்த்தருக்குள் இளைப்பாறினார்
அமரத்துவம் இயற்கை எய்தினார்
எத்தனை வார்த்தைகளால்
இறுதி விடையனுப்பினோம்
வரங்கள் தரும் வல்லமை இருக்குமென்றால்
செம்மணியை தொட்டிலாக்குவோம்
தூளியாக மாற்றுவோம்
முகிலை முலையாக்கி
அந்த பாலகருக்கு பாலூட்டுவோம்
பிஞ்சுகளின் எலும்புக்கூடுகள்
அந்த தாயாலும் எழ முடியவில்லை
அவளும் எலும்புக்கூடு
சண்டிலிப்பாயா சாவகச்சேரியா தனக்கிளப்பா
பருத்தித்துறை வன்னியா
எந்த முகவரியில் இருந்து இழுத்து வரப்பட்டார்கள்
இச்சாக்குழியில் மூடப்பட்டார்கள்
யார் என்று யார் சொல்வீர்

No comments:

Post a Comment

பிரசாதமே!!

  கொடிய போர் கண்ட நகரம் போலில்லை காலிழந்தவனுக்கு கால் முளைக்கும் உணர்ச்சியை கண்ணிழந்தவனுக்கு ஒளியூறும்  மனத்தை உண்டாக்கவில்லை யாரேனும் பறக்க...