Tuesday, October 20, 2026

 






மாலைப்பொழுது மழையும் மதாளிப்பு மயக்கமும்
விடுமுறையில் வரும் காதலனாய்
மாலைப்பொழுதில் ஒரு மழை
கன்னத்திலிருந்து கணுக்கால் வரை
மண்ணில் ஆயிரம் முத்தங்கள்
காத்திருந்த தாகத்தின் கலவித் தவிப்பில்
ஒத்தியிழுத்து உறிஞ்சுவதில் பச்சைவடிவில்
சுகம் பரவுகிறது எங்கும்
வெக்கை விழுந்தடித்து ஓடிக்கொண்டிருந்தது
இளஞ்சூடாயொரு தேனீரொடு
அரைக்குந்தில் தாவ பாதி தூவானம்
பரவாயில்லையென்றேன் மழையை பார்த்து
உண்மையில் அவிட்டெறிந்துவிட்டு
அம்மணமாய் நின்றாடவேண்டும் முற்றத்தில்
அதுதான் வரவேற்பு
என்ன செய்ய ஐம்பதாகிவிட்டது இனி ஆகாது
பக்கத்துவீட்டு மனுசி நேற்று
அலவாங்கை காணவில்லையென
அடிப்படலைவரை தேடியதும் நினைவு
பூனையும் குட்டிகளும் காலடிக்குள் வந்து
கதகதப்பு தேடின
தாழ்வாரப் பீலியில் ஆள்மாறியாளாய்
புண்ணிய தீர்த்தத்தில் புலினிகள் நனைந்து களித்தன
எமக்குதான் துவட்ட ஒரு துணி
உடுக்க இரண்டு ஆடை
உச்சி பிடறியில் ஊறினால் தடிமன் காய்ச்சல்
பெனடோல் விக்ஸ் அக்ஸ்சோயில்
புலினிகளுக்கேது மாற்று உடை
நெஞ்சுச்சளி
காணும் போதெல்லாம் அதே தவிட்டு நிறச்சிறகு
பிங் கலரில் வாலும்
மரூணில் அலகுமிருந்தால் அழகென்று
எண்ண முடியாதபடி எப்படியொரு இயற்கை டிசைன்
மனிதர்கள் மட்டும் தோன்றாதிருந்தால்
புலினிகளின் பூர்வீக நிலமாயிருந்திருக்கும் இது
ஆட்சியதிகாரத்தில் ஆட்காட்டிகளும் மைனாவும்
வல்லூறும் வலசைகளும்
சட்டமியற்றாத சமநிலை யாப்புக்களில்
வானவில்லை தோளில் சுமந்த இளவரசாயிருக்கும்
எப்போதோ நாட்களில் மழை
கப்பல் விட அழைத்தபடி வந்தது
குண்டு குழிகளில் எற்றி விளையாடும் கனவோடு
இறங்கியது பூமிக்கு
ஓட்டைக் கூரைக்குள் நுழைந்து கிண்ணத்தில்
பாட்டெழுதும் பரவசத்துடன்
கூப்பிட்டது முகில்களை
இன்று நாட்பட்ட குற்றப் பத்திரிகை கோப்பும் கையுமாய்
காவல் துறையாயும் காணமுடிகின்றது
மூன்று மணிநேரமாய் முகவுரையை எழுதி
அடுத்த பக்கத்தை இரவோ
நாளை பகலோ பார்ப்போம் என புறப்பட்டது இன்று
மழையே மழையே மெத்தப் பெய்!

No comments:

Post a Comment

பிரசாதமே!!

  கொடிய போர் கண்ட நகரம் போலில்லை காலிழந்தவனுக்கு கால் முளைக்கும் உணர்ச்சியை கண்ணிழந்தவனுக்கு ஒளியூறும்  மனத்தை உண்டாக்கவில்லை யாரேனும் பறக்க...