நெஞ்சுரசித் ததும்புமோர் நெருப்பு நதி
நெல்லியடி பரணிக்கு நினைவெல்லையேது
வாசலிலே காற்று வந்து கைபிடிக்கும்
வசந்தனுக்கு தோள் உயரம்
பயிருழுத தமிழருக்கு
உயிருழுது விதைத்த வெய்யில் மழை
உயர எறிந்தால் அவனுண்ட கோப்பை வெள்ளி நிலவு
உடையெல்லாம் முகிலும் பனியும்
புயலீன்ற தாய் அயல் வீட்டில்தான் இருந்தாள்
மயிலிறகுப் புன்னகையில் மகனும் மகளும்
உயிர்தூவி போகையிலே எரிமலையும் தணலும்
கந்தகத் தேவரீர் காலத்தேரின்று
ஊரைச்சுற்றி உம்மை தொழும்
உடைத்தெறிந்த தடைகளை
ஒவ்வொன்றாய் பூசை செய்யும்
படைத்துவிட்டுப் போன பஸ்பத்தையெடுத்துப்பூசும்
அஸ்த்திரமற்ற அந்தகார இரவில்
வந்திறங்கிய மில்லர்களின்
உள்ளக்கோயில் பிரகாரத்திலின்று
கோடி சங்கொலிக்கும்
துரும்பெடுத்து வீசமுடியா துரதிஸ்டத்தில் நிலம்
எல்லாவல எகிறுகிறது
எருமைமாடு குஞ்சமுடுத்து குருந்தூர் ஏறுகிறது
கச்சன்சமணங்குளமும்
மிச்சமாயிருந்த கோவணத்தை இழந்தது நேற்று
தையிட்டிக்கு தரித்திரம் பிடித்து பல நாள்
இரும்புச்சட்டியை கவிழ்த்துவிட்டு
இரண்டாயிரம் ஆண்டுப் பழமையாம்
கல்கமுவே இப்போது கட்டிட ஒப்பந்தக்காரர்
காவியுடுத்த கண்ராக்ட் கொம்பனி
கக்கூசுப்பக்கமும் ஒரு கறுவாயன் கடைக்கண்
என் தொடைக்கு நடுவில் என்ன தொல்பொருள்
அம்மணிக்கு
நானன்றி வேறுயார் உரியோன்
விடிந்து கொண்டிந்த வியப்புதேசம்
அலைவசப்பட்டு அலாரித்துக்கிடந்த கரை
மலைவிரலுக்குள்
மயிர்கள் கூட நதியோரப்புல்லாயசைந்தன
விதியை புரட்டிப்போட்டு
புயல்கள் எழுதிக்கொண்டிருந்தன புதுவாழ்வு
அடடா
வானமும் ஒரு நாள் காலடியில்
அருந்ததி நட்சத்திரத்தில் விருந்து நடந்தது
பால்வெளியெம் வேலிக்கு அருகில் வெள்ளிகள் பூத்தது
அப்பனின் புட்பகத்தை
மகன் மறுபடியும் பறக்கவிட்டான்
மல்லாந்தே படுக்கலாம் போலிருந்தது
வல்லூறு இனிவராதென்றது சுகம்
உயிராயுதத்துக்கு
குயில்பாடிச்சிலிர்த்தது
வழியற்ற நின்றோர்க்கு
வானம் வரை தெரு
ஆன மட்டும் ஆகுதி
அந்த ஆன்ம தகுதி யாருக்கு வாய்க்கும்
போன திசையெல்லாம்
பொழுது வைகறை
புயலா மழையா பனியா தணலா
எதுவாய் எழுத
அப்பிறவி யுகத்தை

No comments:
Post a Comment