அவ்வழியில் நாவல் மரம்
அப்பியாசம் தெலைத்துவிட்டு கொப்புகளுக்கு தாவினோம்
அப்பாலொரு கடற்கரை
எப்போதும் கொக்குகளை சந்தித்தோம்
குக்குறூப்பானுக்கு தெரியும் குதூகலமெம் நினைவென்று
வெட்டைகள் ஆட்காட்டிகளுக்கு
வேலியோரச்செடிகள் பட்டாம்பூச்சிகளுக்கு
தொட்டாச்சிணுங்கி
பட்டம்விடும் பையனுக்கு
கார்காலம் சில்லென்ற இரவுக்கும் குடிசைக்கும்
குப்பிவிளக்குக்கும்
சக்கரைப்பாண்டியன் துரத்தும் ஊருக்கும்
இப்போதோ
மல்லிகைச்செண்டுகள் மக்கியெழும் புதைகுழிக்கு
கொக்குத் தொடுவாய் குழறிற்று
மண்ணைதோண்டினால் மரவள்ளிக்கிழங்கு
இன்னும் போனால் வேப்பமர வேரின் வியாபகம்
மக்கியில் மண்வெட்டி பட்டால்
கப்பியில் ஆறிவாச்சத்தம்
அப்பொழுதில்லையிது
குழியில் உக்கிக்கொண்டிருப்பது
எம் சின்ன மகளின் சிரிப்பா
கலைந்துபோய் எலும்பாய் கன்னக்குழியழகா
மண்ணை தோண்டினர்
பின்னால் வளவிலன்று
பெரிய பிள்ளையான பூப்புனிதம்
பன்னீர்கும்பாவின் பாதத்துண்டுகள்
குமரியெனின் கூறைச்சேலைகட்டி
மங்கலமாக்கியே மரித்தாலும் விடைகொடுப்போம்
எரித்தாலும் புதைத்தாலும்
குழிக்குள் தேகம் நோகாது தேவாரமிசைத்தோம்
செபித்தோம்
ஆகாரம் படைத்து தேவரோடிருப்பதாய் தேறினோம்
அடுத்தபொழுதொன்றில்
சிறுத்தையுடையில் சிவந்தகொடிபோர்த்தி
அவஸ்தை கலைத்த வீரியென
உடனிருந்த தோழியரேந்தினர் உடல்
உன்னதம் என்றனர்
ஊருக்குள் சன்னதத்துக்கு சாற்றினர் மலர்கள்
சவ ஊர்வலம் இல்லை சரித்திர பவனி
விதைத்தனர் விழுதெறியும் என்றனர்
வேட்டும் தீர்த்தனர்
விம்மிய நெஞ்சு விழிகளை துடைத்தது
இன்றென்ன செய்ய
எலும்புகளில் எப்படி குழந்தையில் விழுந்த
முற்றத்து முழங்கால் தழும்புகள் பார்க்க
எட்டாவிண் நிலவுகளை
டப்பாக்களில் பூட்டி இடித்துபொடியாக்கி
இனியும் அதையும் புதைக்கவா
மருதோண்டிவிரல்களை மண் தின்றது
மல்லாக்காய் கொட்டினரா மல்லிகைப்பூக்களை
மன்றாட்டம் ஏதும் வானமறிந்ததா
செம்மணியைப்போல்
மண்வெட்டியாலடித்து முடித்தனரா
இந்த மர்மம்தான் என்ன
புண்ணில் மறுபடியும் பெரிய ஈட்டி
போய்த் திரும்பமுடியாத் தெருவுடன்
இருந்ததா ஓர் நாள் கொக்குத் தொடுவாய்

No comments:
Post a Comment