நிலவுக்கு அடுத்து நிலமங்கை பேரெழில் இலங்கைதான்
இறுமாந்திருக்கலாம்
குமுழிகளிலும் ஏறிப்போய் குசலம் கேட்டிருக்கலாம் உலகை
பழஞ்சோற்றாலேயே
பத்து வல்லரசுகளில் ஒன்றாகியிருக்கலாம்
பாடையை கூட பவுணில் செய்து
ஆவென்று பிளக்க வைத்திருக்கலாம்
மானாவாரியை தூக்கி குடுத்து
சோமாலியாவின் பசிதீர்த்து
சீனாவுக்கும் கொடுத்திருக்கலாம் மிச்சம்
ஆசியாவின் மூனாவாக
முடியும் சூடியிருக்கலாம்
பத்து ஏக்கர் குத்தகைக்கெடுத்து
பங்கிங்காம் அருகே பால் மாட்டு பட்டியடைத்திருக்கலாம்
மாரியாயி தந்த மலை வியர்வையில்
ஏசியா வங்கியின்
இலாச்சித்திறப்பை இடுப்பில் செருக்கியிருக்கலாம்
ஏன் எலான் மஸ்க்கூட
ஈரப்பெரியகுளத்தில் தான் பிறந்திருப்பார்
சுந்தர்பிச்சைப்போல
அந்தர்கணக்கில் ஊதியம் வாங்கும் ஆயிரம்பேருக்கு
இந்த நாட்டின்
ஏதோ கிராமம் முகவரி ஆகியிருக்காதா
அவதார் சூட்டிங்கை ஆரிய குளத்தில் வைத்திருக்கலாம்
பவளம் அக்காவின் வடையை
பார்வைக்கு வைத்திருந்தாலே
சுற்றுலாத்துறை சூடுபிடித்திருக்கும்
மாங்காய் உப்பு தூளை சேர்த்து
இரண்டு குலுக்கி குலுக்கி
இந்திரலோகத்தையே ஏமாத்தி மயக்கியிருக்கலாம்
கொப்பி தாளில் ராக்கட் விட்டவனை கூப்பிட்டு
அப்பு ராசா என்று தடவியிருந்தால்
சுப்பர் சொனிக் செய்து சுத்தி நாட்டுக்கு வித்திருக்கலாம்
இஞ்சினியர் துரைராசாவிடம்
இன்னுமேதும் கேட்டிருந்தால்
சந்திரனுக்கு பாலம் கட்டி தந்திருப்பார்
சாபக்கேடு பேரினவாதம்
பனங்கட்டி பயங்கரவாதமாய் தெரிந்தது
பார்வையில் கோளாறு
ஓமந்தையில் வைத்து
சாமானை கிளறின சரியான வருத்தம்
ஆனையிறவில் இறக்கி
அடையாள அட்டை பார்க்கும் பரம்பரை வியாதி
சென்பீற்றருக்கு மேல்
சியாமா செட்டியை வெள்ளோட்டம் விடும்
விசர் முத்தின குணம்
அரச மரத்தை கண்டால்
பொசனை கொண்டாடுற பொல்லாத புற்றுநோய்
கடைசியில் குரங்கை விற்றேனும்
குற்றுயிரான இலங்கையை மீட்போமெனும் ஈனம்
இன்று நலிந்த இலங்கையில்
என்னவாகும் மேதினம்
கஞ்சா கெரொயின் காரனை கொண்டாடித்துதிக்கலமா
இலஞ்சம் வாங்கியவரை ஏற்றிப்போற்றலாமா
பிஞ்சுகளை கொன்றவரை
பெரும் சாதனையாய் பூரிக்கலாமா
குண்டுகள் வாங்கிய பணத்தை
மந்திரத்தால் இன்று மீட்கலாமா
இல்லை மந்திகள் முன்னின்று மன்றாடலாமா
நன்றெனவிருந்த நாடு
நலிந்திட ஒன்றே காரணம்
சிங்களப் பேரினவாதம்

No comments:
Post a Comment