Sunday, July 9, 2023

மூங்கிலாற்று மீதி பாடல் -பொன்.காந்தன்

 




கொற்றவையின் தோள் அழகை
செப்பிட வாய்த்த வேரல்
விழுந்து சிதறுண்ட நாளை பாடுகிறேன்
இத்திணை பிரிதலை சொல்லும்
இந்நிலமோ மருதம்
தொன்மை நாளில் முல்லை
காட்டை பாடி களித்த
என்னவர் மூங்கிற் பாட்டின் மீதியை
உடையார் கட்டின் காற்றிலிசைக்க
சப்த சுர துளைகள் போதா
இது பெருந்துயரின் முகாரி
ஆடிக் களித்த குரவையரின்
காலறுந்து சதங்கை
குரவயலாகி துவண்ட தாளம்
நறுந்தேன் சிந்திய மலரில்
குருதி தெறித்து
தேன் சுவை வற்றிய பூபாளம்
அடர்ந்த வயல் வெளி
குவளை முகிழ் உதிர்ந்து கிடந்த
பொலிவிழந்த நாள் சந்தம்
புலியிருந்த குகை
நில வலியின் நீள் விம்மலை
எழுதிட புலவனின் கையறு நிலை
கார்காலத்தில் மூங்கிலாற்றை கடந்தவர்
உடையார் கட்டில் மிதக்கும் வேளை
இந்திரராகி விடுவார்
வல்லினம் மெல்லினம் அறியாதானும்
சுதந்திர புர விருட்ச நிழலில் தங்கி
மூங்கிலாற்று மயக்கத்தில்
முணு முணுப்பாண்
சீர் தளை தொடை அடி நேரியதாயிருக்கும்
அவ்வயற் காடு
அவ்விடம் கடப்போரை மாந்திரீகமாக்கும்
தலைவனும் தலைவியும்
அவ்வழி செல்கையில்
மார்பு நுனி
நெல் மணியாய் கீறும் தோளில்
இரு மருங்கும் அடர்ந்த
மூங்கில் தோப்பு
பருவ மங்கை காதலை உணரும்
அவ் வேரல்
நிலங்கிளையும் விரலின் இரகசியம்
காமம் தழைக்க வருடும் இலைகள்
ஈரம் கசிய செய்யும்
ஒரு பொழுதில் மூங்கிலாறு
யோனி மடலிடையில்
பொங்கி பிரவகிக்கும்
ஈட்டியென நீளும் கிளைகள்
செம்புல பெயலின் முற்றா தாகத்தை
தலைவனின் முத்தமாயிடும்
அகம் நிறைந்த ஆர தழுவ கிடக்கும்
மறவர் குலத்தின் அந்நிலம்
பசியறியா வயிற்றை படைத்த
பரந்த வயல் வெளி
காட்டாறு அறுத்தோடிய
மேகம் கீறிய சித்திரங்கள்
பள்ளத்தில் நாற்றிட்ட
பள்ளனும் பள்ளியும்
அப்பள்ளும் எச்சமான எழில்
ஆட்காட்டி மைனா கொக்குகள் குரங்கு
இச்சை கொண்டுலவ
ஈழத்துக்கு அருளப்பட்ட மூங்கிலாறு
ஆற்றோரமாய் ஓலை கொட்டிலில்
குல சாமி கோயில்
அச் சிறு சந்நிதி கற்பூர ஒளி
மழை இருளில்
உடையார் கட்டுவரை துணை வரும்
ஒன்றி ரண்டு நேர்த்தி கண்ட
அக்குல சாமி
ஓர் பொழுது திக்கு முக்காடி போனார்
தன் காலடியில் ஆயிரம் ஆயிரம் பேர்
அழுது புலம்ப கண்டு
அவரும் அழுதே விட்டார்
அப்படி ஓர் அவலத்தை
கடவுளும் அதுவரை கண்டதில்லை
அன்று தான் கடவுளின்
படைத்தலும் காத்தலும்
அருளலும் தோற்றது
புத்தரின் தாமரை மலருக்காய்
கைமுனுவின் சேனை
அப்புலமெங்கும் தர்மத்தை கொன்று
தலைகளும் தசைகளும் முண்டமும் வேண்டி
சூழ்ந்து வந்தனர்
யாரை கொன்றால் போர் வெறி தீருமென
சகட்டு மேனிக்கு ஏவினர் கணைகள்
ஒவ்வொரு புல்லுக்கும்
ஒவ்வொரு சன்னம்
ஒவ்வொரு இலைகளுக்கும்
ஒவ்வொரு எறிகணை
போதனைகள் ஒரு நாள்
கட்டளைகளாய் மாறுமென்று
பரி நிர்வாண கோலம் ஒரு நாள்
பிணம் கேட்பதாய் பொருள் ஆகுமென்றோ
போதி மாதவனும் எண்ணியதில்லை
ராஜபக்ச இராச்சியம் தொடுத்த போர்
மூங்கிலாற்றை தின்றது
அதுவரை ஆயிரம் ஆயிரம் ஆண்டுகள்
எந்த மிருகமும்
மூங்கிலாற்று வயல்களை
அப்படி மேய்ந்ததில்லை
மேனிகள் தின்று
கைகளை தெருவில் எறிந்தது
வயிற்றை கடித்து
குழந்தையை சப்பி வயலோரம் போட்டது
தலையை குதறி மதவுக்குள் துப்பியது
மூங்கிலாறு ஒரு நாள்
உள்ளூர மகிழும் நிலப் பாடலை இழந்தது
வாருங்கள் எங்கள் குல சாமியும்
புத்தரும் சேர்ந்தழுவோம்

No comments:

Post a Comment

பிரசாதமே!!

  கொடிய போர் கண்ட நகரம் போலில்லை காலிழந்தவனுக்கு கால் முளைக்கும் உணர்ச்சியை கண்ணிழந்தவனுக்கு ஒளியூறும்  மனத்தை உண்டாக்கவில்லை யாரேனும் பறக்க...