Sunday, July 9, 2023

மைனா-பொன்.காந்தன்

 


பின்னிரவில் தூக்கம் கலைந்து விட்டது.ஏன் தூக்கம் கலைந்தது. சில வேளை தூக்கமே தூக்கத்தை கலைத்து விடுமோ. தூக்கம் கலைந்தால் வழமை போல் சிலருக்கு இருக்கும் பழக்கம் ஒரு தேனீர் வைத்து குடிப்பது. இருபது முப்பது வருடங்களுக்கு முதல் முன்னிரவில் இரவு உணவுக்காக அம்மா மூட்டிய அடுப்பு தணல் சாமம் கடந்தும் அடுப்பின் ஓர் மூலையில் சிவந்து கொண்டிருக்கும்.பிறகு தேனீர் வைப்பது இலகு வாகி விடும். ஒரு பன்னாடையோடு அடுப்பு மிளாசும்.தேனீர் வைக்க போகும் போது பூனை ஒரு புறத்தாலும். எலி ஒரு பக்கத்தாலும் குசினிக்குள் இருந்து ஓடுவதும் உண்டு. இப்போது மின் ஆளியை அழுத்த கொ திக்கும் சத்தம் கேட்கிறது. தேனீர் வைக்கும் படலம் கணப்பொழுதில் முடிந்து விடுகிறது. பூனை ஓடுவதும் எலி அரிப்பதும் கூட குறைவு. எலி அரிப்பதற்கு புத்தகங்களும் கடதாசியும் குறைவு. எலி மௌஸ் ஆகி கணனிக்கு முன் சமைந்து போய் விட்டது.
பனை ஓலை அடுக்கு பெட்டிக்குள். செத்தல் மிளகாய் உமலுக்குள். மெய் கண்டான் கலண்டருக்கு பின்னால். சாமி தட்டில் பிள்ளையாருக்கு அடியில் கள வெடுக்கலாம். பத்து ரூபாய் தாளேனும் கிடைக்கும். கணக்கு பார்த்தால் மாதத்தில் பாதி நாள். ஐஸ் பழம் வாங்கி குடிக்கலாம்.அவரவர் ஆசையாய் பொறுத்து சிலருக்கு அதே பத்து ரூபாய் கிடைத்தால் தும்பு முட்டாஸ்.இன்னும் சிலருக்கு விசுக்கோத்து. உங்களில் சிலருக்கு என்னவாக இருக்கும்.கிட்ட தட்ட அந்த தேனீ ர் காலத்து மைனா நினைவுக்கு வருகிறாள்.
இந்த இரவும் கறுப்பு. அவளும் கறுப்பு. மைனாவை பஞ்ச வர்ண கிளியாக்கி பறக்க விட பார்க்கிறேன். முதலில் புழுதி தெருவில் கண்ட நினைவு. ஓடி வந்த சைக்கிளின் சீட் ஒட்ட பதிக்க பட்டு இருந்தது . ஆள் கட்டை. திரு நீறு பூசினால் திலகவதி. ஒரு குழந்தை ஏந்தி இருந்தால் மரியாள் போலிருப்பாள். ஆனால் அவள் பெயர் மைனா. பறவைக்கு ஏது மதம்.அதன் பாடல் மாங்கிளை தழுவி வனங்களில் பூசி வெளிகளில் ஒரு சுதந்திரத்தின் சாயலை எழுதும்.ஆக இன்று வரை மைனா என்ன மதம் எனக்கு தெரியாது.மைனாவின் இயற்பெயரும் தெரியாது.மைனாவால் இன்னொருவருவரின் நினைவுகளை எவ்வாறு வசீகரிக்க முடிந்தது. அதிகம் படிக்காமல் ஆறோ ஏளோ எட்டில் படிப்பை கை விட்டு பறக்க தொடங்கியது தான் காரணமா. இருபது ஆண்டுகள் கழித்து படிப்பு என்றால் என்ன என்ற வினாவுக்கு அவள் நினைவுகள் நியாயமான விடைகளை வைத்திருக்கின்றனவா. ஆம் என்று சொல்ல முடியும்.
ஊருக்குள் மைனா அழைக்கிறார் என்று பல பெண்கள் அடிக்கடி போய் வந்து கொண்டிருந்தார்கள் அவர்களில் பலர் மைனாவை விட அதிகம் படித்தவர்கள். பிறகு மைனாவில் சாயல் அவர்களில் போக போக தெரிந்தது .மைனா ஒரு மாற்றத்தின் பெயரும் தான்.மேடையில் மைனா நின்றால் அந்த ஒலி வாங்கியை இறக்கி அவளின் வாயளவில் வைப்பது பெரும் பாடு. அதற்கு பிறகு பேச தொடங்குவாள். என்ன பேச வேண்டும் என்பதில் அவளுக்கு தெளிவு இருந்தது. ஆனால் எப்படி பேச வேண்டும் என்பது தான் அவளுக்கு தெரியாது.இன்று எப்படி எல்லாம் பேசலாம் நாக்கை வளைக்கலாம் என்பது எல்லோருக்கும் தெரியும் ஆனால் என்ன பேச வேண்டும் என்பதில் தெளிவு
இல்லை. அதனால் கட்டை மைனா இன்று உயரமாக தோன்றுகிறாள். அது அவ்வளவு சாதாரண உயரமல்ல கூந்தலை பின்னி தலைக்கு மேல் முடிந்த சீருடையில் இடுப்பில் பட்டி அணிந்தபடி ஒரு புரட்சிகர போராளியாக.
கிளிநொச்சியில் உள் தெருக்களுக்கு இறங்கி கிழக்கே விசுவமடு வரையும் மேற் கே நாச்சுகுடா பூனகரி வரையும் போகும் போது ஆங்காங்கு பல குடியிருப்புகள் உண்டு. கிளிநொச்சியில் ஆதியான குடிகள் ஒரு புறத்தில் இருக்க இன்னொரு புறத்தில் அவ்வப்போது மக்களின் மேம் பாடு கருதி புதிய குடி இருப்புகள் தோன்றின. அவற்றில் பல விடுதலை பயணத்துக்கு உயிர் விட்ட வீரர்களின் பெயரில் இருந்தது.அப்படி எம் கண்ணில் படும் குடியிருப்புகளில் ஒன்று மைனா என்ற பெண் போராளியின் சிந்தனையில் உருவானது.இப்போதும் அந்த குடியிருப்பு உண்டு. கல் வெட்டில் பெயர் பொறிக்காத அத்தி பாரமாய் நிலத்தின் அடிவரையும் விஸ் ரூபமாயும் இருக்கிறாள். இன்னமும் அவள் எம் மண்ணில் உலவுகிறாள் நிறைவேற்ற முடியாத கனவுகளுடன்

No comments:

Post a Comment

பிரசாதமே!!

  கொடிய போர் கண்ட நகரம் போலில்லை காலிழந்தவனுக்கு கால் முளைக்கும் உணர்ச்சியை கண்ணிழந்தவனுக்கு ஒளியூறும்  மனத்தை உண்டாக்கவில்லை யாரேனும் பறக்க...