மாருதப்புரவீகவல்லி வாளொடு தோன்றாய்
வானில் முடியுரச
வேரடியின் முகம் வேறெதுவாய் மாறிடவா
வெங்காயப்பூவாசத்தில்
நஞ்சுபாறிட வீசுமாம் திஸ்ஸவின் காற்று
அழையா விருந்தாளிக்கெல்லாம்
எம்மிடம் ஆலாபனை இல்லை
கணையவிற் கேணியருகில்
கலையாடி தோன்றுவனா
கடும்கொதிப்பில் பாத்திகள் மேவி
சூத்திரக்கிணற்றிலிருந்து சுழலுமா பரிதி
இனி வீணரை சரிக்கும்
வில் விளையும் நிலம் தையிரிட்டி
வேலிகள் தளிர்க்கும் அம்பை
தேனுதிரா மலர்கள் காறி உமிழும்
மந்தைகளின் கொம்பு
எந்தை நிலத்தினில் நிதம் தினவெடுக்கும்
சொந்த நிலம் பறிக்கப்படும்போது
சொட்டுக்கண்ணீரல்லது
விட்டுத்துரத்தும் விதைக்கான மழை
இன்று புத்தர் இருக்கட்டும்
பொசனும் நடக்கட்டும்
வெசாக்கூடுகள் பறக்கட்டும்
அத்தனை குறிப்பும் ஆழ மண்ணில் பதியும்
ஆதிகுடிக்குத் தெரிந்த
மீள உயிர்க்கும் மூச்சை சீண்டும்
தையிட்டிகொரு விமோசனம் வரும்
இன்று கைவிட்டுப்போன நிலம்
கைக்குவரும்
அக்கனவை மாவிட்டபுரமெங்கும் விதைப்போம்
மதங்கொண்ட யானையென
வெங்காயம் பூக்கும்
விடியலை அதுதான் அறிவிக்கும்
மயிலிட்டிவரை கிடக்கும் இயலாமை
மாருதப்புரவீகவல்லியின் தேரில் எழுந்துவரும்
நாள்பட்டேனும் நடக்கும்
கள்ளா
இது உன் காலமாயிருக்கலாம்
குஞ்சா மணிக்கும் பூணும் காப்பும் போட்டழகுபார்

No comments:
Post a Comment