சாயலில்
அவள் போலவே இருந்தாள்
நெற்றி தழுவும் கூந்தல்
கவிதை எழுதும்
கோடாய் விரியும் புன்னகை
எங்கிருந்து பார்த்தாலும்
இழுத்து இடையில்
சொருகும் பின்னழகு
ஒற்றை பார்வையில்
ஒட்டு மொத்த புல் வெளியையும்
மேயும் மாய விழிகள்
அவளின் காதல்
இவளில்
வந்தது போலவும் இருந்தது
அவளே இவள் போலவுமாகி
காதலுரைக்க
இவளுக்கு
சிறகு முளைக்கவில்லை
பறக்க முடியவில்லை
மிதக்க முடியவில்லை
சிவக்க முடியவில்லை
பாதம் அவளின் சாயல்தான்
பயணம் என்னவோ வேறு
இன்னும் நூறும் இருக்கலாம்
அவள் சாயலில்
அவ்வாறே
சிலைகளும்
சில இடங்களில் இருந்தன
அரச மரங்களின் கீழ்
மலைகளில்
சாயல்
புத்தரை போலாயினும்
விழிகளால்
கருணை பொழிய முடியவில்லை
உண்மை பேச முடியவில்லை
அமைதி தர முடியவில்லை
இப்படி
இன்னும் ஆயிரம் தோன்றலாம்
No comments:
Post a Comment