அகதி முகாமில் அவன்
ஐந்தாறு சிறுவர்களுக்கு
ஆங்கிலம் சொல்லி கொடுத்தான்
எல்லோரும் அழைத்தார்கள்
மாஸ்டர் முகாமில்
முதன் முதலாய்
என்னில் முடி வெட்டவும் பழகினார்
அடுத்து மாஸ்டர்
என்னவாக இருப்பீர்கள்
அக் கேள்வியை
கேட்டிருக்க வேண்டும்
எல்லாம் இழந்துவிட்ட
அகதியிடம்
அவ்வாறு ஒரு கேள்வி
கேட்டே ஆக வேண்டும்
முகாமில் இருந்து
பலர் யாழ்ப்பாணம்
சிலர் கிளிநொச்சி
இன்னும் வன்னி
மட்டக்களப்பு என்று
ஆளாளுக்கு தங்கள்
ஊர் திரும்பினார்கள்
மறுபடி சந்திக்க நேர்ந்த
மனிதர்களின் கதை
ஆச்சரியம் நம்பிக்கை தத்துவம்
இதில் ஏதோ ஒன்றை தரலாம்
ஒரு முறை
ஆட்டோ ஒன்றை
சவாரிக்கு அழைத்த போது
அச்சாரதியை
முதலில் எங்கோ பார்த்திருந்தேன்
அவர்
மூத்த கெரில்லா போராளியாய்
பொறுப்பாளராய் இருந்தவர்
அவருக்கு
ஒரு வாகனமும் சாரதியும்
முன்னம் இருந்தன
என்னையும் முதல்
அவருக்கு தெரிந்திருந்தது
இப்போது
என்ன செய்கிறீர்கள் என்றார்
சவாரி முடித்து திரும்பும் போது
சில ஆண்டுகள் பின்னர்
முக நூலில் அழைப்பொன்று
அறிமுகப் படத்தில்
மாஸ்டர் சிரித்தபடி இருந்தான்
அதிகம் முக நூலுக்கு
அவன் வருவதும் அரிதாக இருந்தது
அவ்வப்போது
சில கைக்கூ போன்ற பதிவுகள்
அப்போதே
அவனுக்கான கேள்விகள்
பெருக்கெடுக்க தொடங்கி விட்டன
குளிர் காலத்தில்
வெயில் காலத்தில் என்ன செய்வாய்
இப்படி அடுக்காக
திங்கள் தொட்டு வெள்ளி வரை
பேரூந்தில் பயணித்து
அலுவலகம் போய் வரும்
தோழி ஒருத்தியிடம்
சனி ஞாயிறு என்ன செய்வாய்
என்று கேட்டேன்
காலை பத்து மணிக்கு
எழுவேன் என்றாள்
மாஸ்டருக்கு பிறந்தநாள் என்று
முக நூல் நினைவூட்டியது
அவனுக்கு
ஒரு இதயத்தையும் மலர்களையும்
ஸ்ரிக்கராய் தட்டி விட்டேன்
அழைப்பு எடுத்து நன்றி சொன்னான்
இப்போது என்ன செய்கிறாய்
பதில் டெலிவரி பாய்
அவுஸ்திரேலியாவில்
டெலிவரி பாய்
தன் கதையின் சாரம்சம் சொன்னான்
வெள்ளைக்கார
முதிய தம்பதியர்களுக்கு
ஆடர் செய்யும்
உணவு பொட்டலங்களோடு
ஆடர் செய்யாத அன்பயும்
ஆறுதலையும் கூட கொடுக்கிறேன்
அகதி முகாமில் மாஸ்டர் போல
ஒவ்வொரு வாசலிலும்
ஒவ்வொரு இதயத்துக்கு ஏற்றால் போல்
சில வேளை
கடவுளாயும் அவன் இருக்கிறான்
அகிலன் என்ற மாஸ்டர் என்ற
டெலிவரி பாய்
No comments:
Post a Comment