தொகை பாட்டு தீரா
தாழை மலரை தழுவி
தண்டின் ஸ்பரிசத்தில்
இம்மோக பொய்
நாளை நண்டு கொடுக்கில் சிக்கி
அவஸ்தையுறும் உன்னை
கடலின் கரையாய் நின்று ரசிப்பேன்
நீர் காக்கை சொல்லில்
நின் தாகம் சொட்ட
நீளும் விரல் களுக்கு
நெத்தலிகள் படுவது போலிருக்கலாம்
வா மறுபடியும் வா
இரங்கலின் இன்னும் முடிவுறா
அகத்திணை மீதியை
உப்பு படரும் உதட்டில் பாடலாம்
எட்டு தொகை பாட்டுக்கு
இனியும் அந்தி செவ்வானமும்
அந்த மயக்கமும்
நெஞ்சில் கவியும் மார்பென அலையில்
உரசும் இன்பத்தை சூட்டலாம்
நீல எழுத்தில் நீச்சல் அடித்து பார்க்கலாம்
குறிகட்டுவான்
படகு துறையிருந்து குமுதினியும்
ஓசியன் கேட் டைட்டானும்
அத்திலாந்திக் கரை வரை கீறிய
அழியாத கோலங்கள்
"இரங்கல்" அறியும் என்றோ
அறிவிப்பாய் என் உரைத்தாய்
மர்மக்கன்னி
முதல் படகு பயணம்
மருத கொண்டல்கள்
செழித்த கோரை புற்கள் ஆட்காட்டிகள்
மைனா பிலா கொட்டை குருவி
மாலை பொழுதில்
கொக்காவில் மாங்குளம் பக்கமாய்
ஆனையிறவில் இருந்து
நிரையாய் பறக்கும் நீர் காக்கைகள்
கிளிநொச்சி குளத்தோர
மருத மரங்களுக்கு மேல் வட்டமடித்து
ஊர் மாந்தோப்புகளுக்கு
கொய்யா மரங்களுக்கு
இரவு விருந்துக்கு வரும் வெளவால்கள்
கொண்டை கிளாத்தி
மரங் கொத்தி
அவ்வப்போது வளவு மரங்களுக்கு வரும்
மாலை நான்கு மணிக்கு பின்னாய்
புலுனிகளை வேலிகளில்
நிச்சயம் எதிர் பார்க்கலாம்
கரி குருவி ஓலை வீட்டு கீற்றுகளை
எடுத்து போய்
தனக்கொரு வீடு கட்டுவதுண்டு
வாழை குலை சீப்புகளுக்கு இடையில்
அது முற்றி பழுக்கும் பருவம் கணித்து
கூடு கட்டி குஞ்சு பொரித்து
பறக்கும் அற்புதத்தை
வாழை தோட்டம் வைத்தவரெல்லாம்
கண்டு சிலிர்த்தார்
காணாங் கோழி பள்ளி விட்டு
வரும்போது சம்பு காட்டுக்குள் பாயும்
தோட்டம் உழும் நாட்களில்
சிறு மழைக்கு பின்னாக
உருண்டு பிரழும் மண்ணில்
என்னென்ன பறவைகள்
மைனா கொக்கு நரை கூழை கிடா
மாட புறா
அலகு நீளமான இன்னும் பல
எல்லா வேலிகளிலும்
அடையாள அட்டையாக
பூனை புடுக்கு கொடி மஞ்சள் பழம்
எல்லா வளவுகளிலும்
தொட்டால் சிணுங்கி நாயுண்ணி
சிறு வெள்ளை மஞ்சள் கபில வண்ணதில்
பூ பூத்த செடிகள்
முற்றத்தில் மல்லிகை செவிரத்தை
மணி வாழை நித்திய கல்யாணி
வேலியில் கள்ளி செடிகள் பாவட்டை
கிழுவை முள் முருக்கு
முள் முருக்கம் பூ மிக அழகானது
அந்த சிவப்பு
இரத்தத்தை நினைவு படுத்துவதில்லை
அது காதலர்க்கு
உதடுக்களையும் புன்னகையும்
மென்மையான மிதப்பது போன்ற
ஒரு இனிய நாளையும் நினைவு படுத்தும்
மற்றும்
கடு கடுப்பாக தோன்றும்
சில மனிதருக்குள் இருக்கும்
மெல்லியதை இதயத்தையும் நினைவூட்டும்
மாம்பூ சீமை கிழுவை
மருதோண்டி பூக்கள் ஆமணக்கு
இவை எல்லாம் கலந்து கொண்டு
காற்று வாசனை திரவியமாய்
நாசியில் உறைந்திருக்கும்
பட்டி எரு மணம்
கோழி கூட்டு பக்கம் ஆட்டு கட்டையடி
அடி ஒட்ட இறைத்த கிணற்று சேறு
சுரி என்றும் சொல்வார்கள்
நாய்கள் படுத்த வாசல் சாக்கு
கள்ளு சீவும் தென்னை மரத்தடி
அடுத்து தோய்க்கும் கிணற்றடி கல்
பாம்பு இரை எடுக்கும் போது எழும்
குரக்கன் பிட்டு மணம்
மரத்தில் பழுத்து பலா
துளசி கஞ்சாங் கோரை
வேம்படி நொச்சி மரப்பக்கம்
ரோஜா செடிகள்
அருகில் போனாலும் தொட்டாலும்
நெருங்கினாலும் ரசித்தாலும்
ருசித்தாலும் வேறு வேறு அனுபவங்கள்
ரோஜா வேண்டுமா
சற்று முள் கீரலுக்கும் ஆமாக வேண்டும்
தலையுரச கிளைகள்
கால் வருட புற்கள் செடிகள்
முகர மலர்கள் நூறு
ரசிக்க வண்ணங்கள் ஆயிரம்
இரணைமடுவுக்கு
கனகாம்பிகை கொடிஏறினால்
போக ஒரு நாள் காத்திருக்கும்
காந்தி அழகரத்தினம் சாம்பசிவம்
ராசு
உழவு இயந்திர பெட்டியில்
படங்கில் குந்தி இருந்து
காலை வெளியில் தொங்க விட்டும்
திருவையாறு தோட்டங்களை
ரசித்தபடி போவதுண்டு
மிளகாய் பழங்கள்
அதை கொந்தும் கிளிகள்
சிவப்பும் சிவப்பும்
பச்சையும் பச்சையும் செய்யும் விந்தை
மருந்து விசிறிய மணம்
வழி நெடுக கலந்திருக்கும்
தண்ணீரின் இதயம் எப்படி இருக்கும்
தண்ணீரின் சிரிப்பு
தண்ணீரின் கனவு
தண்ணீரின் மென்மை
தண்ணீரின் பாட்டு
இதை உணர ஆசை படுகிறவர்களுக்கு
திருவையாறு தெருவையும்
வாய்க்காலை தோட்டங்ளை நோக்கி
விரல் நீட்ட ஒரு காலமிருந்தது
ஒருவரை
மிளகாய் நாதன் என்றாலே
ஊருக்கு தெரியும் அளவில்
தோட்டமும் துரவும்
எல்லாவற்றுக்கும் காரணி பூரணி
இரணைமடு குளம்
சின்ன வயதில்
என் கடல் அதுதான்
ஆனால்
அதன் எல்லையில் அழகான காடுகள்
முல்லை நிலம்
ஒரு கரையில் கனகாம்பிகையும்
நாமும்
மறுகரையில் யானைகளும் மான்களும்
பறவைகளும் தீர்த்தமாடின
இம் மருதத்தை
இரவும் பகலும் மழையிலும் வெயிலும்
பனியிலும்
இள வேனிலிலும் முது வேனிலிலும்
ரசித்து கரைந்த
ஒரு சிறு பையன்
முன் பற்கள் விழுந்து அப்போதுதான்
முளைத்தும் கொண்டிருத்தன
சிரித்தால்
மருத நில மொழியிலேயே
என்ன கதியால் போடவேண்டுமா என
கிண்டலடிக்கும் நாட்களில்
மகிழ் நனின் சந்ததி
மள்ளர்களின் வழி தோன்றல்
ஊரனின் சிறு தளிர்
வயற் காட்டில் ஊடல் கொண்ட
அக்குமரியும்
அவள் தலைவனும் மீட்டிய யாழை
அவிசை மேவிய
தாமரை பொய்கை
களை பறித்த செவிகள்
சூடாத்த கால நெல் வாசம் விட்டு
நெய்தலை நோக்கிய முதல் பயணம்
குறிகாட்டுவான் துறை
நெடு நீல வயல் எது எல்லை
தாழை பூவின் கரை
அப்பெருங்கடல் இரங்கலின்
ஒரு யுக கதை சொல்ல அழைத்தது போல்
கரையில் காத்திருந்த
கோடி முகங்கள் காட்டி
முத்தம் இட்டது
கோடி முகங்கள் காட்டி
கண்ணீர் விட்டது அச்சம் தந்தது
முத்து சிப்பிகள் காட்டி சிரிக்க வைத்தது
ஆறுதல் தந்தது
ஓயாத ஓராயிரம் கதையோடு
உரசி கொண்டதோ அலை
வெண் மணல் கரை நீல கடல்
இடையில் ஒரு செம்பரத்தம் பூவாக
மருதமைந்தன்
கடல் என்ன நினைக்கிறது
மனிதர்களை பற்றி
கடலுக்கும் தெரியவில்லை
மனிதர்களின் ஆழம்
மனிதர்களுக்கும் தெரியவில்லை
கடலின் மர்மங்கள் இரகசியங்கள்
குறி கட்டுவான் லோஞ்சி
நயினா தீவு கரை தட்டி நின்றது
அக்கடற் கரை கிராமத்து வெண் மணலில்
நெய்தலுக்கான
அச் சிறு பையனின் முதற் சுவடு
லோகநாதன் வீடு வர வேற்றது
லோகநாதனுக்கு
கடல் பூந்தோட்டம் போல
தொட்டா சிணுங்கி வயல் போல
கலந்து போய் விட்டது
லோஞ்சியும் லோகநாதனும்
அண்ணன் தம்பி அப்பு ஆச்சி
அன்று கடலியே விருந்தாக
படைக்க போவது போல
அடுக்களையில் இருந்தார்
அவ்வளவு மரங்களில்
கடலில் வீசும் காற்று கவிதை எழுதியது
அது பழைய பாடல்
ஊதை ஈட்டிய உயர்மணல் அடைகரை
கோதை ஆயமொடு வண்டல் தைஇ
ஓரை ஆடினும் உயங் கும் நின் ஒளியென...
அக நானூறு என்றது
தென்னங்க கீற்று
ஊதையில் அசைந்தது
ஊதை -வாடை காற்று
வாடைக்காற்று வீசும் பொழுதில்
லோகநாதனின் வீடு
கூழ் காய்ச்சி உள்ளத்தை
தாழம் பூ அழகாக்கி இருந்தது
பிளாவில் கூழ்
பலா இலையில் அகப்பை
வெண் மணல் முற்ற இருக்கை
கூழின் அடியில்
நெய்தல் நினைவின் ஊற்று
அவ்வளவின் வெளியில்
ஒரு கொடி தன்னை அறிமுகம் செய்தது
நான் தான் பிரண்டை தண்டு
அத்தோடு நிற்கவில்லை
பிரண்டை கூடவே
லோஞ்சி ஏறி
கிளிநொச்சிக்கு படர தொடங்கியது
நெய்தலின் நினைவின்
முதல் வரிகளாய்
கடலில் கட்டி இறங்கும்
ஓர் கவிதை கொடியாய்.

No comments:
Post a Comment