Sunday, July 9, 2023

ஊர்வசியே வந்து உதட்டோடு உரசினாலும் மரத்தோடு தேய்க்கும் உணர்ச்சிதான்-பொன்.காந்தன்

 

கைநீட்டி கெஞ்சி காவடிகள் பல ஆடி
ஐயா ஐஎம்எப்
அளந்த படி வெடிகொழுத்தி
மெய்ச்சிலிர்த்தார் மேன்தங்கிய கடன்காரன்
இனி மினுமினுப்பாளாம்
இலங்காராணி
அடைவுக்கடையிலிருக்கும் அவள் காதுக்குண்டலம்
இரும்புக்கடையில் விற்ற ஒட்டியானம்
மானத்தை மறைப்பதும் மறந்துபோய்
இழுத்துக்கழற்றி
இரவோடிரவாய் இழந்த மார்புக்கச்சை
இதழில் எப்போதிருந்தும் மயக்கிய புன்னகை
அவன் மடியில் சரிந்தாலே
வருடும் சுகமெல்லாம் திரும்புமாமோ
ஏதேனும் அசரீரி கேட்கிறதா
எட்டத்திலாவது ஏதாவது
பச்சை விளக்கு தெரிகிறதா
இருக்கவே இருக்காதென்று நம்பி
இனியும் இருளிலேயே வாழத்தொடங்கலாம்
இதுவொன்றும்
நெக்கற்றிவ் தோட் கிடையாது
அடிக்கடி ஏமாந்தவருக்கு
ஒரு கட்டத்தில் ஊர்வசியே வந்து
உதட்டோடு வைத்து உரசினாலும்
மரத்தோடு தேய்க்கும் உணர்ச்சிதான்
காராம் பசு முன்னே தோன்றினால்
கறக்காமல் விடுவோமா என்ன
இழுத்து ஈய்க்க மாட்டோமா
இருந்தாலும் சந்தேகங்கள்தான்
சாக்கு மூட்டையில் நிரம்பிக்கிடக்கிறது
பிரசல்ஸ் கிள்ளியெறிந்த பில்லியன்
பெல்ஜியம் வீசிய ஆசுவாசம்
முல்லைத்தீவு விகாரை பெருப்பிக்க
கல்லறுக்க கரைந்திடுமா
வெடுக்குநாறி சூலம் பிடுங்கும்
விசரன்களுக்கு விலாசமிடப்படுமா
வெடியரசனுக்குப்பக்கத்தில்
அடிக்கல்லு நாட்டி ஆடுமா கண்டியம்
ஒரு இளவும் புரியவில்லை
ஒன்று மட்டும் தெளிவு
இனியும் இலங்கையர் ஒட்டாண்டிதான்
இல்லையென்று பட்டிமண்டபமா
எதிர்த்தரப்பார்
இனியொரு குறுணிக்கல்லும்
புத்தரின் பேரால் காவிக்கொண்டு
கச்சதீவுவரை வரோமென சத்தியம் செய்ய முடியுமா
சாப்பாட்டுக்கு வழியற்ற தட்டுக்கு
நாட்பட்டு வந்த சோத்தையும்
பெருச்சாளி தனக்கென்றால பிறகெப்படி
அன்புடன் ஐஎம்எப்புக்கு
கம்பு சுத்துறவர்களுக்கு காசு கொடுத்துள்ளீர்கள்
தள்ளி நின்று வேடிக்கை பார்த்தீர்
இலங்கையில் எலும்பும் தோலும் மட்டும்தான் மிஞ்சும்
சிறுநீர் கழிக்கப் போனதற்கும்
செக் எழுதும் கூட்டம் இங்கு உண்டு
மனைவிக்கு பவுசு காட்ட
அரச வாகனத்தை இழுத்தோடிகாட்டுவதும் இங்குதான்
கடைசியில்
காற்று வாங்கப்போன மாலைபொழுது
களப்பயணமாய் கணக்கு முடியும்
தவிசாளருக்கு தலையிடி என்றால்
பிரதேச சபை பிக்கப் பெனடோல் வாங்கப்போகும்
கண்ணுக்குள் எண்ணெய் விட்டு
இலங்கையிடம் எதற்கும் கணக்குச்சிட்டை கேள்மின்
ஐம்பது சதத்தை
ஆட்டையை போட்டதால்
கம்பத்தில் கட்டிய நிர்வாகம் புலிகளது
அதனால்தான்
நின்று பிடித்ததும் நினைத்ததை நடத்தியதும்
செம்பு நிறைய
ஏதோ இருப்பதுபோலவே
செழிப்பானதோர் உணர்ச்சியுமிருந்தது
இன்றுநாம் மேன் தங்கிய கடன்காரர்
எவனோ எருமைமாடு
மிக் இருபத்தேழு வாங்கிய கடனுக்கு
சுப்பர் கடையில்
வடையும் பிளேன்ரியும் குடிக்க வக்கற்றோம்

No comments:

Post a Comment

பிரசாதமே!!

  கொடிய போர் கண்ட நகரம் போலில்லை காலிழந்தவனுக்கு கால் முளைக்கும் உணர்ச்சியை கண்ணிழந்தவனுக்கு ஒளியூறும்  மனத்தை உண்டாக்கவில்லை யாரேனும் பறக்க...