கருக்கலுக்கை செல்லையர்
செருமலோட எழும்புவார்
கடவாயுக்கை சுருட்டை செருகுவார்
சிமினி புகையடிச்ச இலாம்பை தீண்டி
ஒருக்களிச்சு படுத்திருந்த மாமி
ஓலை பாயை சுருட்டுவார்
படுத்திருந்த மாடெழும்பி
சலமடிச்சு சத்தம் கேட்கும்
சாரல் கோடியுக்கை பறக்கும்
கடைப்பை திறக்கும் போது
கடுவனும் உலுப்பி உதறிக்கொண்டு
முன்னும் பின்னுமாய்
செல்லையரின் பந்தோபஸ்து பார்க்கும்
மூன்று வளவு தள்ளி
நாலு சடயன் நின்று
சண்டித்தனம் காட்டும்
காத்தி ஓழியென்று கம்பொன்றிழுக்கு
வீட்டுக்கை போய்
வெட்டுறன் புடுங்கிறன் என்று
நாலும் சேர்ந்து ஊரை எழுப்பும்
இதுதான் செல்லையரின் பள்ளியெழுச்சி
எப்பன் செல்ல அவர்
எழுந்தருளுவார் பனந்தோப்புள்
சுருட்டு புகையும்
சூப்பென்றழைக்கும்
பனம் பழமும் சேர்ந்து
இனம் புரியா வாசம் மொய்க்கும்
இருந்தாலும் இதுதான் ஒரு நாள்
இளங்காலை சாம்பிராணி
அட்றாச் பாத்ரூமும்
அடுக்களையில் வந்து மிதக்கும்
அசுத்தமும் அற்ற
ஏகாந்தமான பனை வளவு
நாளாந்தம் நல்ல பசளை பனைக்கு
நாலு பக்கத்தால் வண்டுகளும் உருட்டி
சேதனம் செல்லையரால்
முதல் நாள் நண்டு கறி
முருக்கம் பட்டையும் போட்டு
மாமி ஏதோ மாயம் செய்து
மணக்க மணக்க கொடுக்க
உடைச்சு உறிஞ்சு இழுத்து
உறைப்புக்கு வாயை நெளிச்சு நெவிட்டி
முடித்து வைத்தவர் சட்டியை இரவு
காத்தால பிறகு
வேட்டியை தூக்க முதல்
கூகுள் வரை படம் குனிந்து பார்க்க
சீறி அடிச்சு
செக்கோசிலாவாக்கியா பனையடியில்
பரம சுகம் அவருக்கு
அதனாலோ அப்பரம்பரை நொங்கும்
இப்போது வரை
இனிப்பில் ஏதும் குறைவில்லை
No comments:
Post a Comment