Sunday, March 6, 2022

குஞ்சர் கடை இறக்கமும் கொடியேற்றமும் பதிகமும்-பொன்.காந்தன்


வல்லை வெளி வெறிச்சோடிக்கிடக்கிறது
வெறுமனே திரிகிறது காற்று
ஏகாந்தமாய் சிலவேளை
இன்னொரு பொழுது நிறைந்து வழியும்
கூந்தல் கலைக்கும் குழப்படிக் காற்றுக்கு
வல்லைதான் தோது
கொத்தாக மாரி மகிழ்வதும் அங்குதான்
எழுநூற்றைம்பதில் ஏறினால்
வல்லைதான் ஏசி
கண்ணாடியை இழுத்து விட்டு
கரையில் இருந்தால்
காற்றெட்டித் தடவும்
குஞ்சர் கடை இறக்கம்
கொறட்டை விடும்
திடுக்கிட்டு
பிறகு நெல்லியடியில் குதிக்கும்
எல்லாம்
வல்லை செய்யும் வம்புதான்
மாரியிலொரு சோழன்பொத்தி
கோடையிலொரு கோண் ஐஸ்
போய்வந்த பயணத்தை
இறக்கும் தறுவாயிலும் ஏம்பலிக்கும்
ஏறோப்பிளேனிலும் இரைமீட்பாய்
பகலிரவொன்றை
கழித்துபார் வல்லையில்
முதலிரவு தோற்றுவிடும்
இன்றோ வெடிச்சோடிக்கிறது
காரணமோ இதற்கு வேறு
கொள்ளை நோய்
தொண்டமானாற்று நாளிலா
வரவேண்டுமிந்த சோதனை
இல்லையென்றால்
இன்றைக்கு எத்தனை காவடிகள்
சன்னதிக்கு போக சனம் திரளும்
அதை வல்லையில் காண்பதுதான் தவம்
இல்லை எவருமில்லை இன்று
பல்லக்கில் ஏற்றி
சுந்தராம்பாள் குரலோடு
சுற்றித் திரியும் காற்று
உருகும் ஊருக்குள் உள்ளம்
அறியாது உச்சரிக்கும் வாய்
அப்பனே!
செல்வச் சந்நிதியானின் செல்வாக்கை
வல்லையில் பார்த்தலே வியப்பு
ஆறுமுகத்தானுக்கு
ஆனையிறவு கடந்தும் ஆக்களுண்டு
வற்றாப்பளைவரைக்கும்
வயப்பட வைத்திருக்கிறார்
எல்லைகடந்து யூரோப்பிலும்
இலைபோட்டிருத்தி
தலைவாழையில்
தயிரோடு சாப்பிட வைத்தார்
வல்லையை கடந்தும் முருகன்
கொடியேறினால்
குளவிசுட்டகுளத்து வீட்டில்
சட்டி பானைகள் சில
சமையலறையிருந்து வெளியேற்றம்
இனி மச்சம் இல்லையென்று
மாங்குளத்திலும் குசினிக்குள் சத்தம்
ஒட்டுசுட்டான் கடை ஓணர்
சுக்குபக்கை தூக்கிப்போட்டு
சுப்பிர பாதத்தை போடுறார்
எப்பிடி
மயில்வாகனத்துக்கு இவ்வளவு ஆக்கள்
மடப்பள்ளி மைந்தும் சிறுசுக்கு
ஒரு பிடி அதிகம் பஞ்சாமிர்தம்
மறுபடியும் வரும்
கச்சான் கிழவிகளுக்கு கழிவிரக்கமும் கடாட்சமும்
வாயிரா வயிற்று மொழியை
வடிவேலன் அறிந்திடும் அன்னமும்
வல்லைவெளி கடந்தும்
காற்றாய் வீசுகிறது கருணை
இம்முறை
வல்லை எவருமின்றி விரிகிறது
தொண்டைமானாற்று பதிகத்தில்
கொள்ளை தீர்க்கனும் திருநீற்றை
எல்லை கடந்து எடுத்துச் செல்ல
வல்லை காற்றிடம் கொடுக்க வேண்டி
வரிக்கிறேன் தேவாரம்
எழுநூற்றைம்பதும் போகவில்லை
எவர் நேத்திக்கும் பயணமில்லை
தன்னந்தனியே கிடக்கும் வல்லையில்
வந்து போகட்டும் சந்நிதியான்
வாழ்வின் வெறிச்சோடலை
கண்டும் போகட்டும்
கருணை பொழியட்டும்

No comments:

Post a Comment

பிரசாதமே!!

  கொடிய போர் கண்ட நகரம் போலில்லை காலிழந்தவனுக்கு கால் முளைக்கும் உணர்ச்சியை கண்ணிழந்தவனுக்கு ஒளியூறும்  மனத்தை உண்டாக்கவில்லை யாரேனும் பறக்க...