சென்று வரும் வழியில்
வெயில் சுடும்
சேலைப்புத்தான்குடை
ஒன்றிரண்டு துளி மழை
சொல்லாமல் தூறும்
உள்ளங்கையிருக்கும்
தலைக்குமேல்
உறியிலிருக்கும் பல
கள்ளத்தீனிகள்
களைத்துவரும் போதல்லாம்
கையை நீட்ட இனிக்கும்
காதாவடியில் சவர்க்காரம்
பிடரியில் ஈரம்
தேடித்துவட்டும் ஒரு துணி
தேய்த்துவிடும் ஓடிக்கொலோன்
கோடிக்குள்ளொரு அம்மியிருக்கும்
மஞ்சள் உள்ளி மிளகாய் சீரகம்
தேங்காய்ப்பூ குந்தியிருக்குமதில்
கோழிகளை
கலைக்கச்சொல்லி
கெஞ்சிவிட்டு குளவியரைக்கும்
குவிந்த உருண்டை திரணையாகி
குசினுக்குப் போகுமது
படலைதிறந்து பாற்சுறாவரும்
இடையிலொரு கஞ்சி
இரண்டொரு சோறும்
தேங்காய்ப்பூவும் மிதக்கும்
முடிந்து சிரட்டை எறிய
கடந்து அடுத்துவீடு போகும்
அரைத்த கறிவாசம்
ஆறட்டுமென சொல்லி
தேடிப்பெரிய முறியாயெடுத்து
தின்னத்தரும் பாசம்
மாலையானதும்
நாளை பாலப்பமென்று
பையபைய நடந்துபோய்
வையாபுரியிடம் கள்ளுவாங்கி
விட்டுப் புளிக்கவைத்து
விடிய சட்டிக்குள்
அடியில் குடுத்து எடுத்துதர
அந்த நாளே சுவைக்கும்
பெருவிரல்வரை போர்வையிழுத்து
நகங்களையும் நன்னி
சக்கரப்பாண்டியனுக்கும்
காவலிருந்து
எப்போது தூங்கியது அந்த விழிகள்
ஒரு நாள் மறுநாளும் எழாமல்
தூங்கியதந்த விழிகள்
தூங்கியபடியே இருந்தது
ஊதாங்குழலும்
ஓர் இதயத்தின் வாசமிழந்தது
மரத்துப்போய்க்கிடந்தது அம்மி
மறுபடியும்
எவராலும் பொழியமுடியவில்லை
இருக்கும்போதே
அந்த சேலைத்தலைப்புக்கு
ஏதேனும் திருப்பிக்கொடு
உள்ளங்கைக்கு ஒத்தடத்தையும்!
No comments:
Post a Comment