Sunday, March 6, 2022

பவுடர் வாசம்-பொன்.காந்தன்


சந்தியில் முந்திச்
சலூனுக்குப்போய்
குந்தியிருந்தவரின்
குட்டிகிறா பவுடர் வாசம்
சிந்தி வந்து நாசியில் பரவ
பந்தாவின்றி
இரண்டு மரக்கதிரை
மாடர்ன் படங்களில்லா சுவர்
டிக்டிக்கென்று சீப்பிலும் தட்டி
வெட்டுவிழுத்துகின்ற
நரை சுருள்
நட்டுகொண்டு நிற்பவை
வெட்டாமல் விட்ட
வேரோடு பற்றைகள்
சொட்டையிலிருக்கும்
நான்கில் பாதியென்று
மட்டக்கம்பின்றி
மடக்கி தண்ணியடித்து
கிடத்தி வெட்டும் பழக்கம்
இன்னுவர்
இழுத்தவர் கத்தி தீட்டும்
இலாவகத்தையும் பார்த்து
கன்னத்தில் கத்தி வைத்து
பொன்னையரின் பெடியனே நீ
புவனம் அக்கா பக்கத்துவீடோ
நல்லெண்ணையோ வைக்கிறனி
நாலோ ஐந்தோ வகுப்பு
பள்ளி குளத்தடியோ
இல்லை தள்ளியிருக்கின்ற
தமிழ் மகா வித்தியாலயமோ
புட்டோ இடியப்பமோ விடியச் சாப்பாடு
வெட்டிவெட்டி கேட்கும்
தொட்டியடிவரையான
புதினங்களை அவருக்குரைக்கும்
ஈழநாடு முரசொலி வீரகேசரி
மொத்தப்பத்திரிகையும்
கட்டையாய் வெட்டென்று
கழுத்தை மூடிக்கட்டிக் குந்திய
வெட்டவந்தவர்தான் அங்கு
எப்படியேனும் இருந்து
இடுப்பு நாரி நெளிவெடுத்து
எட்டி எழும்பிப் போய்
இரண்டு பக்கமும் வீதிபார்க்க
இந்தா முடிந்தது இருங்கோவென
சந்தணத்தை பூசியிருத்தி
அன்றிம் முடியை வெட்டி
அடுத்துப் பள்ளிபோக
பனங்கொட்டை சூப்பியென்று
பட்டங்கள்தான் கிடைக்கும்
அந்நாள் நினைவுகளுடன்
அமர்ந்தேனின்றும் முடிவெட்ட
எப்படியென்று காட்ட
ஏகப்பட்ட ஸ்ரைல்களில்
ஒட்டப்பட்டிருக்கும் ஓரிருபது படங்கள்
அதிலொன்றந்த
பட்டங்களுக்கு உரித்தான
பனங்கொட்டை சூப்பியும்
குந்த நல்ல குசன் கதிரைகள்
குட்டிக்குறாவை காணோம்
பிஞ்சிலே பழுத்த வெம்பலாக்க
மஞ்சளாயும் பல திரவியம்
கஞ்சல்போல கூட்டி அள்ளி
பிறகு கிளறிவிடவும் மிசின்கள்
இஞ்சிவரை குறைக்கவும்
இயந்திரமொன்று கையில்
கொஞ்சும் போதவளுக்கு
குத்துவது பிடிக்குமென்பதால்
குஞ்சந்தாடிகளை
குறுக்கி வேரோடறுக்காமல்
விட்டுக்கொஞ்சம்
கட்டையோடு பிடிக்கவுமொன்று
ஒற்றை இரட்டைறூள்
எக்கவுண்டிங் செக்சன் போலவும்
பிடரிப் பக்கங்களில்
கணக்குகள் எழுதவும் முடியும்
ஈபிள் கோபுரங்களாய்
முடியை எழுப்பவும்
இறக்கவும் சரிக்கவும் கிறெய்ன்கள்
முடிக்கறாச்சிலிருப்பது போல
முன்னேயொரு மனப் பிரமை
அடுத்து நானழைக்கப்பட்டேன்
அளந்து பார்த்தார்
வளர்ந்து கிடக்கும் தாடியை
வழிக்காமல் முழுதும்
அன்ரன் பாலசிங்கம் போல்
அழகான பொண்டிங் கேட்டேன்
அதற்குமொரு மிசினெடுத்தார்
கொடுப்புக்குள் நிரம்பி முட்டி
ஆங்கோடும் ரிவியில்
வடிவேலின் காமடிக்கு
வாயைத்திறந்து சிரிக்கமுடியாமல்
வயிற்றுக்குள் விழுங்கினேன்
மீறியும் சிரித்திருந்தால்
மிசின் கிழித்துவிடும்
மீசை தாடிக்கு முகமும் இருக்காது
இரண்டு கத்தரிக்கோல்
ஒரு சீப்புடன்
சந்திக்கடையில் நாள்முழுதும்
வந்து போனவரை
வடிவாக்கின கடையின் காலம்
எப்படியாயிற்று.
சூட்டியிப்போ முடியை
அயன்
பண்ணுகிறாளாமென்றும் கேள்வி
பாட்டியிருந்திருந்தால்
பாவாடையை பிடித்திழுத்திருத்தி
வாட்டிய எண்ணெயை
வழியவழிய வைத்து
நீட்டியிருப்பாள் கூந்தலை
நினைவே இன்பம்தான்
நிலாவின் நீண்ட சடையும்
வந்து போகிறது மனதில்

No comments:

Post a Comment

பிரசாதமே!!

  கொடிய போர் கண்ட நகரம் போலில்லை காலிழந்தவனுக்கு கால் முளைக்கும் உணர்ச்சியை கண்ணிழந்தவனுக்கு ஒளியூறும்  மனத்தை உண்டாக்கவில்லை யாரேனும் பறக்க...