Sunday, March 6, 2022

பிறிஸ்டல் போட் -பொன்.காந்தன்

 

எப்பொழுது எங்கள் ஊரில் முதன்முதல் பிறிஸ்டல் போட்டை கண்டேன் என்பது சரியாக நினைவில்லை.இன்றைக்கு பேருந்து நிலையத்தில் இறங்கி நடந்து செல்கின்றபோது இந்த மட்டைக்கு ஒரு கதையிருக்கிறது எங்கள் ஊரில் என்பது தோன்றியது.பிறிஸ்டல் போட் கூட தனக்கு இப்படி வரலாறு உருவாகும் என்று கூட நினைத்திருக்க வாய்ப்பில்லை.அதற்கொரு உணர்ச்சி பூர்வீக கதையிருக்கிறது.ஒரு ஓவியனின் தூரிகை படும்போது அதற்கு ஏற்பட்டிருக்கும் சிலிர்ப்பு என் வார்த்தைக்குள் இல்லாது போகலாம்.ஒரு மழலையின் கிறுக்கல்களில் அது சிரித்துக்கொண்டதை என்னால் மொழி பெயர்க்க முடியாது இருக்கலாம்.ஒரு செய்வினைக்காரியின் இல்லை கைவினைக்காரியின் கத்தரிக்கோல் நறுக்கும்போது அதற்கு முதன் முதலில் சவரம் செய்யும் போது கன்னங்களில் எனக்கு ஏற்பட்ட கூச்சம் போல, ஆறுவயதில் றேனுகா சலூன் ஐயா கதிரையில் பலகை வைத்து அதில் ஏற்றி வைத்து பிடரிப்பக்கத்தில் ஊர்கின்றபோது ஏற்பட்ட என் சிலிர்ப்பாக இருக்கலாம். அதிலும் விடவும் ஏதுவும் என் ஐம்பொறிகளால் வெளிப்படுத்தமுடியாத பிறிஸ்டல் போட்டின் உணர்ச்சியாக இருக்கலாம்.
சின்ன வயதில் எங்கள் கைகளில் இருபது தாள் அப்பியாசப் புத்தகம் போதுமென்று இருந்தது.அதற்கிடையில் ஆச்சரியத்தையும் சந்தோசத்தையும் கிளுகிளுப்பையும் தருவதாக சித்திரக்கொப்பி இருந்தது.இதைவிட மனசை வருடுவது யாராவது வகுப்பறையில் உறைபோட்டிருக்கும் சைனா தாள் அதன் மீது தீராக்காதல் இருந்தது.ஏனெனில் அநேகமாக விடுமுறை முடிந்து பள்ளி தொடங்கும்போது வீட்டில் அப்பியாசப் புத்தகங்களுக்கு உறைபோடும் படலம் தொடங்கும் மாட்டுத்தாள் தான் உறை.சீமெந்துப்பையில் அது கிடைக்கும்.மாட்டுத்தாள் பையின் நிறம் இன்றுவரை மனதில் வெளிறாமல் இருக்கிறது அந்த அளவுக்கு ஏதோ தலைதலைமுறையாக தொடர்ந்தது.இது தவிர எங்கள் சின்ன வயதில் ஒரு பெரிய வெள்ளைமட்டைஅபூர்வமானது.
வகுப்பறைகளிலும் வெள்ளை மட்டையில் வர்ண பேனாக்களால் குறித்துக்காட்டும் காலம் மலராமல் இருந்தது.எல்லாவற்றையும் ஒரு வெண் கட்டியும் கரும்பலைகையும் முடித்துவைத்தது.இலையும் வெள்ளை மரமும் வெள்ளை மல்லிகையும் வெள்ளை ரோசாவும் வெள்ளை ஏதோவொரு பஞ்ச வர்ணக்காலத்துக்கு ஏங்கியதும் இல்லை.
இருபது தாள் நாற்பது தாள் ஒற்றை றூள் இரட்டை றூள் சதுர றூள் மொனிற்றர் கொப்பி சிஆர் கொப்பி என்றுதான் என்றுதான் எங்கள் பயணமிருந்தது.சில வேளை எட்டாம் ஒன்பதாம் வகுப்பு சித்தி இல்லையென்றால் மொனிற்றர் கொப்பியும் கனவுதான் பிறகு ஓஎல் சித்தி இல்லை என்றால் பிறகு சிஆர் கொப்பிகளுடனான வாழ்க்கைக்கு செல்லமுடியாது போய்விடும் என்றுதான் இருந்தது.இது பழைய எங்கள் காலத்து கதை.இன்றைய தலைமுறைக்கு இது சிரிப்பாக இருக்கலாம்.ஆனால் எங்களுக்கோ கொப்பி உறை இறேசர் கலர் பெட்டி இவையெல்லாம் சேர்ந்த ஒரு சிலிர்ப்புக் கதையுண்டு.
இப்போது முதலாம் வகுப்பிற்கே நூறு ஒற்றை அப்பியாசக்கொப்பி தேவைப்படுகின்றது.ஐந்தாம் வகுப்பிற்கு ஒற்றை கணக்கில் இல்லாமல் கிலோ கணக்கில் புத்தகமும் அப்பியாசக்கொப்பிகளும் தேவை.ஏதோ ஒருவகையில் எங்கள் காலம் கொடுத்தவைத்தது.சுமையற்ற சுருட்டி காற்சட்டைப்பைக்குள் செருகிவிட்டு வழியில் தாமரைக்குளத்தில் இறக்கி பூப்பிடுங்கிவிட்டு மீண்டும் அப்பியாசக்கொப்பியை விரிக்கும் போது கிடைத்த ஒரு வசந்த கால வாசத்தோட வந்ததால் ஒரு பிறிஸ்ரல் போட்டின் மேல் பட்டாம்பூச்சியை வரையும் கண்களை இரசிக்கமுடிகின்றது .
என் நினைவுக்கு எட்டிய வரையில் முதன் முதலில் பிறிஸ்ரல் போட்டை பள்ளி மேடையில் ஒரு மன்னனில் தலையில் கிரீடமாய் கண்டேன்.அவனின் அங்க வஸ்த்திரங்களாகவும் மினுங்கிய அணிகலன்களின் பின் அது மறைந்திருந்தது.பிறகு ஒருத்தியின் கைவித்தையில் அது பூவாய் இலையாய் காயாய் மாறியிருந்தது.எனக்கும் ஒரு பிறிஸ்ரல் போட் வாங்க வேண்டுமென்று அந்த பதின்ம வயதுகளில் ஆசையிருந்தது ஆனால் அதில் என்ன செய்ய வேண்டும் என்ன எழுதலாம் என்பது பற்றி எனக்கு ஏதும் எண்ணங்கள் தோன்றவில்லை.பெட்டைகளின் மீதிருந்து கவச்சிபோல அந்த மட்டையின் மீதும் ஒரு கவர்ச்சி.
ஆனால் ஒரு நாள்.எனக்கு பதினான்கு பதினைந்து வயதிருக்கலாம் என் கையில் ஒரு பிறிஸ்டல் போட்டை தந்தார்கள்.மகிழ்ச்சி என் கையிலும் ஒரு பிறிஸ்டல் போட் .அதை கண்களை அகலவிரித்து பார்த்தேன்.வேண்டும் வேண்டும் விடுதலை வேண்டு என்று எழுதப்பட்டிருந்தது.எனக்கு முன்பும் பின்பும் நின்றவர்களின் கைகளில் உயர்த்திப் பிடித்திருந்த மட்டையையும் பார்த்தேன் கொட்டை எழுத்தில் கல்வியும் எங்கள் மூலதனம் அதில் கத்திவைக்கிறது ஆளுமினம் என்று எழுதப்பட்டிருந்தது.இந்த தொடக்கத்திற்கு கால் நூற்றாண்டுக்கும் மேல் கடந்தும் பல ஆண்டுகள் வயது.நான் நினைத்தது போல என் தலையில் ஒரு மன்னனின் கிரீடமாய் அது ஆக வெகு காலம் உண்டுபோல எனக்குத் தோன்றியது.
பிறிஸ்டல் போட்டுடன் நடந்தேன் பயணம் தொடங்கியது.கச்சேரிவரை வெள்ளைக்காரரின் அலுவலக வாசல்வரை.இப்படி வாசல்களை நோக்கி கோரிக்கைகள் எழுதிய கோசங்கள் எழுதிய கோசங்களுடன் மக்களோடு மக்களாக நடந்தேன்.உரத்த கோசங்களுக்கு இடையில் பிறிஸ்ரல் போட் வசந்த மண்டபத்துள் சாமியைப்போல வந்து கொண்டிருந்தது.எப்போதாவது பிறிஸ்டல் போட் என்னை பார்த்து ஓராயிரம் கோரிக்கைகள் எழுதியிருந்தது என் மேல் ஏதாவது தீர்வு கிடைத்தா பதில் கிடைத்ததா என்று கேட்டால் என்னுடைய பதில் பல கேள்விகளுக்கு இல்லை என்றுதான் இருந்திருக்கும்.
ஒரு பிறிஸ்ரல் போட்டில் தாஜ்மகாலும் ரோஜாப்பூக்களும் ஒரு அழகிய வாழ்த்து மடலும் செய்ய வேண்டிய தருணங்களில் கோசங்கள் பொறித்த பிறிஸ்டல் காவியவனாகவே காலம் என்னையும் என் சக சனத்தையும் படைத்திருந்தது.இன்றெம் தலைமுறைக்கு இளையவர்களுக்கு ஏழுவர்ணத்திலும் பிறிஸ்டல் போட் அதை தாங்கள் நினைத்தபடி வயப்படுத்தி எங்கும் ஒட்டியும் அணிந்தும் பார்த்தும் வாசித்தும் இரசித்தும் என வாழ்க்கை இருந்தாலும் அதற்கிடையில் துருத்திக்கொண்டு உயர்ந்து நிற்கும் பிறிஸ்டல் போட்டுக்கள் இக்காலத்தின் முகவரியாய் நிற்கின்றது.ஒரு பிறிஸ்டல் போட்டில் காணாமல் ஆக்கப்பட்டவர் எங்கே என்ற கேள்வி இன்னொன்றில் நீதி வேண்டும் என்ற கோசம் இன்னொன்றில் விடுதலை செய் விடுதலை செய் என்றிருக்கிறது.மற்றொன்றில் போதை பொருள் ஒழிக சாபமிடப்பட்டிருக்கின்றது.வேறொன்றில் காடுகளை அழிக்காதே கள்ள மண் ஏற்றாதே
இன்று பேருந்தில் இறங்கி நடக்கும்போது கிசாலினி என்ற மலைக சிறுமியின் மரணத்துக்கு நீதி வேண்டும் என எழுதப்பட்ட பிறிஸ்டல் போட்டை ஏந்தியிருந்தார்கள் போராட்டக்காரர்கள்.நான் ஒரு காலத்தில் ஒரு பிறிஸ்டல் போட் வாங்கி சுருட்டி கூம்பாக்கி தலையில் கவிழ்த்து அதில் பஞ்சவர்ணத்தில் குஞ்சங்கள் கட்டி மகிழ்ந்தாட நினைத்திருக்கலாம் வாய்க்கவில்லை.இப்போது கிசாலினி ஒரு மலைப்பச்சை நிற பிறிஸ்டல் போட்டில் வெள்ளை நதிகளை வரைந்து ஒரு ரீச்சருக்கு காட்ட நினைத்திருக்கலாம் அவளாலும் முடியவில்லை.
பிறிஸ்டல் போட் இறுதியாய் நாளை
ஒரு மானுடனின் சுதந்திரம் உரிமை பற்றி
பெண் கல்வி பற்றி
இயற்கை பற்றி
என்ன வாசகத்தை பொறிக்கப்போகின்றது

No comments:

Post a Comment

பிரசாதமே!!

  கொடிய போர் கண்ட நகரம் போலில்லை காலிழந்தவனுக்கு கால் முளைக்கும் உணர்ச்சியை கண்ணிழந்தவனுக்கு ஒளியூறும்  மனத்தை உண்டாக்கவில்லை யாரேனும் பறக்க...