இரயிலொன்று
கடந்து போன நடுநிசிக்கு முன்
கிளாக்கர்
விடுமுறையில் வந்திறங்குவார்
அவரின் பயணப் பையில்
அபூர்வமாய்
கிராமத்து சிறுவர்கள் சுவாசிக்கும்
வாசமும் நிரம்பியிருக்கும்
இன்றெம் கடைத்தெருவில்
கிளாக்கரின் தேவகனிகளின்
விலை கேட்டேன்
இரண்டு நூறு என்றான்
இன்னொரு கோர்வை
இருநூறு என்றான்
வாங்கிச் சென்று கடித்து
ஆதாமாகி விட்டேன்
மிளகாய் கோப்பி
வறுக்கும் மணம்
கொத்தமல்லி வாசம்
கிணற்றடியில்
சன்லைற் றெக்சோனா
வளையில் அறைந்த
கண்ணாடியருகில்
அம்மாவின் குங்கும டப்பா
அப்பப்பாவின் சுருட்டு
கோடிக்குள் ஆட்டுப் புளுக்கை
முற்றத்தில் மாங்குருத்து
பின் வேலியில் முருங்கை
முன்வேலியில் கிளுவை
கொல்லைக்குள் பனம் பழம்
புளுதி தெருவில்
மருதோண்டிப் பூக்கள்
கலியாண வீட்டில்
சில்வரில் மிதக்கும் கசகசா
வாசத்தில் மிதந்தேன்
ஓர் ஆதிவாசியாய்
அப்பிளும் ஒரேஞ்சும்
மேசையில் பரவிக்கிடக்கிறது
எந்த எதிர்பார்ப்புமின்றி
எனினும் இரகசியத்தை சொன்னேன்
நீங்கள்
கிளாக்கரின் தேவகனிகள்
No comments:
Post a Comment