பாரிசு போனாலும்
பாசிப்பயற்றாய் மறக்காய் நீ
சூரிச்சில் இருந்தாலும்
தேங்காய் சொட்டாய்
விட்டாயா நீ
ஆக்கினாய் நீ ஆடிக்கூழ்
ஏரிக்கரையிலொரு இடத்தில்
இருந்து மூட்டினாய் நெருப்பு
ஊரை நினைத்தபடி
உருசி பார்த்தாய்
செத்துப்போகாத பண்பாடு
செல்பிக்குள் தெரிகிறது
பானையும் கூழும் பயறும்
ஊத்தி குடித்த கடைவாயும்
ஆட்டிவைக்கிறது கொரானோ
பருத்தித்துறை முடக்கம்
ஆடிப்பிறப்பு விடுமுறைதான்
அத்தனை பேரும் வீட்டில்
நாளைக்கும் முடியாதுபோல்
ஆனாலுமென்ன
கடுப்பை ஒதுக்கிவைத்துவிட்டு
காய்ச்சினன் கூழ்
சோச்சி என்று சொல்லி
பேத்திக்கும் பருக்கினன்
இறக்காத நம் இன்பமல்லோ இது
இன்று முழுக்க வாய்க்குள்
ஏதோவது ஓரிடத்தில்
தேங்காய்ச் சொட்டிழுபடும்
ஈறுகளுக்குள் இருந்து பாசிப்பயறு
படுக்கையிலும் கடிபடும்
சோமசுந்தரத்தார் இருந்திருந்தால்
பனங்கட்டிக்கின்று
எட்டுத்தொகை பத்துப்பாட்டு
இழைத்திருப்பார் மறுபடியும்
இருந்தாலும்
பேரர் இருக்கிறமே
விடுவோமா
பவளத்தின் கைவண்ணம்
இருக்கட்டும் என்று சொல்லாமல்
இரண்டு மூன்று கிண்ணம்
எழும்பாமல் குடிக்கவைத்தது
எங்கே கற்றாள் இராட்சசி
இந்த இனிய இரகசியத்தை
கிழவி கொடுத்துச் சென்ற
குறையாத சீதனம் இதுதான்
பவளம் இவள்
பாரம்பரிய கூகுள்
இவளிடம் தேடினாள்
பனாட்டுபதம் ஒடியள் கூழிதம்
எல்லாம் கிடைக்கும்
ஒரு நடமாடும் யூரியூப் அவள்
அம்மியரைப்பிலிருந்து
கும்மிபாட்டுவரை குறிப்பு நிறைய
எண்ணிப்பார்த்தால்
எக்கச்சக்கம் கொடுத்தனர் முதுசமாய்
எம் மூதாதையன்
சாதாரணமா இன்றைய கூழ்
சகலருக்குமான பானமன்றோ
தவனமாயிருக்கும்
ஆனால் ஆடியொருமுறைதான் ஆண்டில்
கவனமாய் குடி
இதுவுமொரு
இன்பத் தமிழ் சோமபானம்
No comments:
Post a Comment