Tuesday, March 8, 2022

மின் வெட்டும் கதைகளும்-பொன்.காந்தன்


இன்று நேற்றென்று மின்வெட்டில்
வீடும் தெருக்களும் மூழ்கின
எப்போதாவது இப்படி
மின்சாரம் நின்றவேளை
மின்சார சபை தொலை பேசி
தொடர்ந்து ஒலிக்கும்
அதற்கு பதிலும் கிடைக்கும்
இப்போது எல்லாம் மாறிவிட்டது
மின் வெட்டுக்கு ஏற்றபடி
ஒரு வாழ்க்கை தொடங்குகிறது
இருட்டுக்குள்ளும்
எல்லாம் செய்யும்
பழைய காலத்தின் சாயல்
நெடு நேரமாய் அரிக்கன் லாம்பு எரிகிறது
தெருவில் போகும்
வாகன வெளிச்சத்தில்
தென்படும் நபரின் நடையை வைத்து
ஓ கனகர்
அவர் சிவலிங்கம் என்று
சொல்ல வைக்க
அன்றைய காலம்
மின் வெட்டு நாளில் வாசலிலே
குப்பி விளக்கு ஒளியில்
சுவரில் விழும் நிழலின் ஜாலத்தை
முடிந்தால்
குழந்தைகளுக்கு வேடிக்கைஆக்கலாம்
ஆனால்
விரலில் காட்டும் மான்கள் மேய்வதை
அவர்கள் நம்புவார்களா அறியேன்
ஆனால்
திண்ணையில் கொளுத்தி வைத்த விளக்கு
அரைக்குந்தை கடந்து
முற்றத்தில் நின்ற தென்னையடியில்
செய்த பூச்சாண்டியால்
படுக்கையை நாம் நனைத்தோம்
மின் வெட்டு இரவுகள்
முழு நிலவு நாளில்
நடந்து திரிந்த
தெருவுக்கு இழுத்து செல்கிறது
மின் கம்பங்கள் இல்லாத
பூனை புடுக்கு கொடிகளும்
தெருவில் விழுந்து படுத்த
மாங்கிளைகளும்
நினைத்த பாட்டுக்கு
கிளை படர்ந்து பூத்த கொண்டல்களும்
அமாவாசை இரவு ம்
முன் நிலவின் அழகு ம்
சாமத்தில் ஒண்டுக்கு இருக்க
முற்றத்து ஓரத்துக்கு வரும் போது
தெளிந்து வானத்தில்
விரிந்த கவிதையாய் கிடக்கும்
பின்னிலவு வெண்ணிலவும்
மின்சாரத்தை நினைத்தே பார்க்காமல்
இரவை கொண்டாட வைத்தன
எங்கள் வீட்டுக்கு முன்
ஒரு மின் கம்பம் முளைத்த பொழுதைவிட
முன் வீட்டு வாசலில் நின்ற
கோணல் புளி மரம்
கம்பத்தை விட
ஒளி நிரம்பிய தேவதரு போலவே
இப்போது தோன்றுகிறது
எந்த விளம்பரமும் இல்லாமல்
கோணல் புளி
அந்த வழி போனவரை
திரும்பி பார்க்க வைத்தது
கோணல் புளியடிக்கு வரும்படி
அழைப்புக்கள் இருந்தன
கோணல் புளி உயரத்தில்
மின்சார கம்பிகள் அதில் குருவிகள்
வரும் காலத்தை
எதிர்பார்த்து ஏங்காத படிக்கு
இந்த இரவு
அன்று செய்த மாயம் எத்தனை
சட்டை பைக்குள்
மின்மினியை போட்டு வைத்து
வேடிக்கை காட்டியவன்
ஒரு இரவை மயக்கத்தின்
சாயலாக்கி தந்து விட்டான்
எங்கே இருக்கிறாய் நீ
இந்த மின் வெட்டு நாளில்
என்ன செய்ய போகிறாய்
முதலில்
ஆறேழு தெருக்கள் கடந்து
வீடுகளில் மின் குமிழ் வெளிச்சம்
எங்கள் வீடுகளுக்கு
சுட்டுப்போன குமிழில்
சிக்கன விளக்காய் வந்தது
மின்சாரத்தின் கதை
அப்போதும் கூட
ஒரு மோகத்தை தூண்டி
மயங்காத படிக்கு
கும்மிருட்டில் பூனையின் கண்களும்
மாசி குளிர் இராவில்
கிழவன் மூட்டிய
மண்டான் சுருட்டு தணலும்
இரவோடு சேர்த்து
ஒரு இளகிய இனிய நாரால்
கட்டி வைத்திருந்தது
எங்கள் வீட்டில்
உயர்ந்த தென்னைகள்
காய்த்து குலுங்கின
தேங்காய் பிடுங்க பெரிய நீண்ட
மூங்கில் தடி
அதில் சத்தகம்
அநேகமாய் அப்பாதான்
அதை தூக்கி புடுங்குவார்
நானும் அம்மாவும் சில வேளை
புட்டுக்கு தேங்காய் புடுங்க தூக்கி
கடைசியில்
மூங்கில் எங்களை தூக்கியும் இருந்தது
அப்போது
ஆறேழு தெரு தாண்டி நின்ற
மின்சார கம்பங்கள்
இரண்டு மூன்று தெரு தள்ளி ஓரமாய்
பறித்து அடுக்கி கிடந்தது
மின்சாரம் வரப்போகுதாம் என்று
ஒரு கதை ஊருக்குள் உலவ தொடங்கி
ஒரு வருடமாய் ஆகி இருந்தது
ஆனால் அதற்கு இடையில்
பகலில் கள்ள மாங்காய் பிடுங்கி
அதில் குத்தி
பள்ளி விட்டு வரும் போது தின்னவும்
இரவில் வாலிபர்கள்
நெடு நேரமாய் குந்தி கதை பேசவும்
அந்த மின் கம்பங்கள் கிடந்தன
மின்சார மரம் முளைக்கும் எனில்
அந்த ஒரு ஆண்டுக்குள்
மின் கம்பம் குருத்து வைத்து
அதை தெய்வானையின்
பொல்லாத ஆடு
இரண்டு கடியும் கடித்து
மின்கம்ப கிளை விரித்து
இன்றைய சினிமா பாட்டில் வந்த
மின்சார பூ அன்றே பூத்து
சாமினி தன் நீள கூந்தலில்
கனகாம்பரத்தோடு
சரத்துக்கு இடையில்
இப்பூ வையும் வைத்து கட்டி
இரவெல்லாம் அந்த காளைகளுக்கு
கனவு கன்னியாகி
இரவே சரணம் எனவும் ஆகியிருக்கும்
ஆனாலும்
மின் கம்பங்கள் அடுத்த ஆண்டு
அந்த தெருவெல்லாம் எழுந்து விட்டன
மின்சாரமும் வந்தது
மாலை ஆறு மணிக்கு
மம்மல் பொழுதில்
எல்லா வேலி ஓரங்களிலும்
முள் முருக்கை மறைவில்
ஒரு கொக்கதடி
இரண்டு வயர் கம்பிகளோடு
கொழுக்கியாய் நின்றது
அப்போதும் எங்கள் வீட்டின் முன்
மின் கம்பங்கள் வரவில்லை
வந்தால்
மூங்கில் கொக்கதடியும் உண்டென்று
கள்ள கரண்டு கதையோடு
இரவின் காதலை
பிரிக்க பார்த்தது மின்சாரம்
விடிய விடிய எரியும்
தூண்டா மணி விளக்கு
ஒரு நாள்
இந்த அமைதி தேடி
பிரிந்தாலும் வருவாய் என்று
இரவின் மொழியில் பேசியது

No comments:

Post a Comment

பிரசாதமே!!

  கொடிய போர் கண்ட நகரம் போலில்லை காலிழந்தவனுக்கு கால் முளைக்கும் உணர்ச்சியை கண்ணிழந்தவனுக்கு ஒளியூறும்  மனத்தை உண்டாக்கவில்லை யாரேனும் பறக்க...