எப்படி இந்த கண்ணீர் துளியை உதிர்வது
யாருக்காக அழுவது
ஒப்பாரி கிடந்து உள்ளே வதைக்கிறது
உக்ரேயினுக்காகவும்
மண்ணில் புரண்டழுதார்
மயிலிறகில் செய்த நம் மனம் கொண்டார்
எத்தனை டாங்கிகள் ஏறி நசிப்பினும்
எதிரிக்கும் கசியும் இதயம் படைத்தோய்
உனக்கா இன்னும் நீதி தரவில்லை
இந்த இரண்டகவுலக
இருந்தாலும் நீ அழு
மண்ணிடியும் பங்கருக்குள்
பதைத்த நின் உயிர்க்கூட்டில்
உக்ரேயின் குழந்தைக்கும்
ஓர் இடம் இருந்ததே
மெழுகின் ஜென்மமே மேனி சிலிர்த்திற்று
சுதந்திரபுரத்திலுன்னை
அறுத்தெறிந்து
ஆறிக் கிடந்த துண்டுகளில்
உக்ரேன் தான் முகவரி
அதையும் மறந்தழும் உன் மனத்தை
ஆண்டவனும் படைக்கவியலா
அற்புத புல் இதழே
ஏன் உன்னை அறியவில்லை
இளவு இந்த பூமி
ஒற்றைபனையடியில்
செத்துக்கிடந்தாய் செல்லில்
சிதறியும் உருவமற்று
பசியில் குழந்தை பாலூட்டுபவளை
செக்கோஸ்சிலாவியாவான் சாகடித்தது
திட்டித்தீர்க்கவும்
மண்ணள்ளி சபிக்கவும்
அப்போதுனக்கு அவகாசமில்லை
ஆட்லறிகள் உன்னை நோக்கி
ஆயிரம் முழங்கின
பிள்ளையை அணைத்தபடி
பிரசவ வயிறோடும்
என்ன செய்வதறியாது திகைத்தாய்
முடிந்தால் இப்போது
மூதேசிகள் என்றேனும் பேசித்தீர்
நேட்டோ மாஸ்கோ
இது ஒன்றும்
அப்பிராணிகளின் அட்ரஸ் கிடையாது
இயமர்களின் இன்னொரு பெயர்
எங்கள் கிணற்றடி கடையடியில்
கீவ் இப்போது ஏதோ
கட்டைப்பிராய் கண்டாவளை போல்
காலுக்குள் கைக்குள் மிதிபடுகின்றது
எப்படி இது சாத்தியம்
முள்ளிவாய்க்காலை மூடிவைத்திருந்திருந்த
இந்த முரணான உலகம்
உக்குரெனை மூச்சாக்கி சுவாசிக்கிறது
பேச்சாக்கி
ப்ரெஸ் மீற்றுகள் நூறு
பிபிசியும் ஏபிசியும்
ஒண்டுக்கு இருக்கப்போகாமல்
ஒரு பக்கமாய் மேளம் அடிக்கிறார்கள்
மாஸ்க்கோவின் குஞ்சங்கள்
சோவியத் கனவை
சொலிக்கனம் அடித்தெடுக்க
ஒரே அரத்தாள் உரஞ்சும் சத்தம்
சீக்காய் அடிக்கிறது பீஜிங்
ஓடுகின்றது அப்பாவிகளின் இரத்தம்
ஐயோ என்னால் முடியாதழ
மூன்றாம் உலகப்போரின்
முகவுரை கண்ணீர் சிந்த
பின்னால் ஏதோ பிடித்திழுக்கிறது
வன்மம்தான்
கைகால் சிதறி கண்முன்னே
எங்கள் குழந்தை மாண்டதெப்படி
பொம்மையையும் விடவில்லை பொஸ்பரஸ்
அம்மா என் செல்லம் அழாதே கண்ணேயென
முன்னால் உக்ரேன் பக்கம் ஓரடி வைக்க
பின்னால் பத்தடி இழுக்கிறது
பவள மல்லிகைகள் கருகிய வள்ளிபுனம்
பிளீஸ் வெயிற்
கண்ணீர் துளிகளை கற்றுக்கொள்ள
இன்னும் எனக்கு அவகாசம் வேண்டும்
நாசிகளை திட்டினார்கள்
நானும் சேர்ந்துகொண்டேன்
ஸ்ரலின் கிராட்டை பார் என்றார்கள்
நானும் பார்த்து மெய்சிலிர்த்தேன்
யூதர்கள் உதாரணம் என்றார்கள்
காஸாவுக்காக என் கண்ணீர் சிந்தியது
ஆங் சாங் சூகி
அமைதியின் புறாவென புல்லரித்தார்
இந்தா பிடியென
என் மசிறும் கூட எழும்பி நின்றது
மியன் மார் அவலம் என்றார்
அருவருப்பாய் போய் விட்டது எல்லாமே
என் செய்வேன் நான்
ஏடா கோடமான நிறுவை தெரிகின்றது
கள்ளத் தராசுக்காரர்கள் பலர்
ஐநா சபையில்
இரண்டாம் உலகப்போரில்
இழந்தவை கண்ணீருக்காக
குந்தியிருந்து எழுதினார்கள் சரத்து
அத்திபாரம் போட்டார்கள்
ஐநா என்றார்கள்
அனைவருக்கும் ஒரே சாசனம்
முள்ளிவாய்க்காலின்போது மட்டும்
ஏன் கள்ள மௌனம்
இப்போது உக்ரேன் போர்
இதில் கொஞ்சர் பேர் நடுவு நிலைமையாம்
வேடிக்கைதான்
முள்ளிவாய்க்காலுக்கு
கொள்ளி குடுத்தவனும்
கூட மாட ஊளையிடுகின்றான்
No comments:
Post a Comment