Tuesday, March 8, 2022

வல்லை வெளி கடப்பும் வல்லிபுரத்தாழ்வாரும் -பொன்.காந்தன்


வல்லைவெளி கடக்கும் போது
பனைகள் பால் நிலவில் குளிக்கின்றன
இன்னமும்
வல்லிபுரத்தாழ்வாரிடமிருந்து திரும்பும் சந்தணமும் நாமமும்
காற்றோட சேர கல்யாணியாகின்றது கூதல்
பொயிலை இலைகளில்
பூம்பனி குந்திக் குலவத் தொடங்குகிறது
மொட்டாக்குப் பெண்களின்
வெங்காய கிண்டலில்
வெளிக்கிட்டு நின்றன மண் வாச மோகம்
மூத்தவிநாயகரடியில்
மூன்று நான்கு பெடியள்
இரண்டு முடறுக்கு இங்கிதமான அழைப்பு
தண்ணீர் பந்தலடி
எங்கள் தண்டுகள்
தவறாக தழைக்கவில்லை என்கிறது
கர்த்தால் என்றாலும்
அரைக்கதவில் அசுமாத்தம் பார்க்கும்
நெல்லியடிக்கடைகள்
சக்கரதாழ்வார் தீர்த்ததுக்கு
அடித்து சாத்தி ஆள் இருக்காது
ஏதோ அங்கொரு மடுமாதா
அப்பாலொரு கொக்கட்டிச்சோலை
இடையில் வற்றாப்பளை
இப்பிடியே
ஊருக்கொரு கொடியேற்றத்தில்
இளைப்பாறி
இன்புற்றுத் திளைக்கின்றது சனங்கள்
கிஜாப்பை கழற்று
காவியை உடுத்தென்று
கலையாடாத வரைக்கும்
மதங்களும் மண்ணுக்கு இதம்தான்
ஒரு நாள்
வளையல் வாங்குவதிலும்
குழையல் கூடி இன்பதிலும் சொர்க்கம்
சரிகை உடுத்து திரிவதிலும்
ஒரு மாயக்கண் விழுங்குதிலும்
இந்த வாழ்க்கை வானவில்லாகுமல்லவா
தேர் வீதியில்
இன்னொரு திருவிழா கொடியேறும்போது
மனம்
மடப்பள்ளி பஞ்சாமிர்தமாகும்
பூங்காவனத்துக்குப் பிறகும்
தேங்கிக்கிடக்குமல்லவா சில இளமனசு
முதலில்
அர்ச்சுனன் இயற்றியது
பாசுவத அஸ்த்திரத்துக்கு
அடுத்தது நான் செய்தது
ஐஸ் பழ வான் பக்கம்
அவளை அழைப்பதற்கு
அனுபவம் பேசுகிறது என்கிறீர்களா
தெப்பக்குளத்தில் தீர்த்தமாடுவது
தெரியாதவர் உண்டாமோ
சக்கரத்தாழ்வாரின் சாட்டில்
தத்தித்து தழும்பும் மோகனமும் வழிகின்றது
எங்கள் வாலிபத்துக்கெல்லாம்
காலி முகத்திடல் தெரியாது
குடைக்குள் வைத்து
குழைப்பதும் அறியாது
கந்தசாமியார் கொடியேறினால்
காளி ஆத்தாளுக்கு மடையென்றால்
நாகதம்பிரானுக்கு பொங்கல் என்றால் புளுகுதான்
கிழடு கட்டையை காய் வெட்டி
ஒரு மிளகளவிலேனும்
அவள் கண் மின்னலடிக்க வேண்டி
புளுதி உழுதது ஒரு காலம்
அறுத்த வயல் வேர் குத்த
அவ்வடமெல்லாம் பாய் விரித்து
வறுத்த கச்சான்
கொறிக்க வரட்டும் திருவிழாக்கள்
திருவருள் மிகு தேரோடு
உரசி உரசி செல்பி எடுத்து
நைஸ் புறோ பியுட்டிபுள்லென
தடுத்தாட் கொள்ளமுடியாமல்
எல்லாவல்லவர் இடறுப்படும் காலமிது
இருந்தும்
கேபி சுந்தரம்பாளும் சீர்காழியும் இன்றி
இன்றும்
வேப்பிலையும் ஆடாது
வேல் குத்தும் ஆகாது
சித்த சிறி ராமாய் இழுத்தாலும்
கடைசியில்
சூல மங்களம் இல்லாமல்
பாறணை முடியாது
புட்டுக்கு மண் சுமந்தது மட்டும்
விட்டு கொடுக்காமல்
கொக்கட்டி சோலையில்
நிற்க
மாப்பிளை எப்பிடி மஜாவா என்கிறான்
இன்று திருவிழா போன இளசு
நான் நினைக்கிறேன்
அதாகத்தான் இருக்கும்

No comments:

Post a Comment

பிரசாதமே!!

  கொடிய போர் கண்ட நகரம் போலில்லை காலிழந்தவனுக்கு கால் முளைக்கும் உணர்ச்சியை கண்ணிழந்தவனுக்கு ஒளியூறும்  மனத்தை உண்டாக்கவில்லை யாரேனும் பறக்க...