Tuesday, March 8, 2022

எம்பாவாய்!-பொன்.காந்தன்

 

மார்கழி குளிரில் அதிகாலையில்
மண் கிணற்றில்
அம்மணமாய்
அரிக்கன் லாம்பை
கிணற்று தட்டியில் கொழுவிவிட்டு
குளித்து
கொட்டில் பிள்ளையாரடிக்கு
பால்ய பருவத்தில் ஓடியது
ஊர்க்கிழவனின் நச்சரிப்புக்காய்
முதலில் நிகழ்ந்ததுதான்
அர்த்தங்கள் புரியாமலே
ஒரு கையில் மணியும்
இன்னொருவர் கையில் சங்கும்
மற்றவர்கள் சிலர்
சொல்லியும் சொல்லாமலும்
ஊரில் தெருவில்
கருக்கலுக்குள் பஜனைபாடி
சுற்றிவந்தது
கும்மாளமும் குதூகலிப்புமாயும்
ஒரு பருவ சிலிர்ப்புத்தான்
இந்த ஒழுக்க சீலத்துக்காக
கொஞ்சம் அவலும் கடலையும் மோதகமும்
இரு மடங்காக கிடைத்தது
சில்லென்ற அதிகாலையில்
குச்சொழுங்கை
வேலி செடிகளில் சொட்டும் துளிகள்
புல்லரிக்க
புழுதி அப்பிய பாதங்களோடு
சுற்றிவந்ததில்
வேறென்ன சுகம் அனுபவித்திருக்கலாம்
அத்தெருவில்
காயத்திரி மீது ஒரு ஈர்ப்பு இருந்தது
ரீனேஜ்சுக்கு முன்பே
இதயத்தில் சொல்லமுடியாத
பனித்துளியாய்
அவளது பவ்வியமும் பார்வையும்
மெய்ஞானத்தின் பொருளாய்
பரவியும் விரவியும் கிடந்தது
உள்ளக் கிழத்தியென்றாலும்
அப்பொழுதில் அவள் பொருத்தம்தான்
இப்போது
பொங்கும் மடுவில் புகப்பாய்ந்துநம்
சங்கம் சிலம்ப சிலம்பு
கலந்தார்ப்ப
கொங்கைகள் பொங்க
குடையும் புனல் பொங்கவென
அந்த வரிகளை
போர்வைக்குள் மீட்டும்போது
அவள் காதில் தேனாய் ஊற்றவென்றே
பஜனைக்குள் இருந்திருக்கிறது
பால்யத்தில்
தவறவிட்ட பரமபதம் இதுதான்போலும்
அவள் படலைக்குள்
கொஞ்சம் அதிகம் மணியை ஒலித்து
சங்கும் ஊதி
பாடியிருக்கலாமே எனது பக்தியை
மரத்துப்போகாமல் இருந்த
பசிய குரலால்!
மடைப் பயலே!!

No comments:

Post a Comment

பிரசாதமே!!

  கொடிய போர் கண்ட நகரம் போலில்லை காலிழந்தவனுக்கு கால் முளைக்கும் உணர்ச்சியை கண்ணிழந்தவனுக்கு ஒளியூறும்  மனத்தை உண்டாக்கவில்லை யாரேனும் பறக்க...