Tuesday, March 8, 2022

இங்கிலாந்துக்கும் இலுப்பை கடவைக்கும் இன்று ஒரே தலையெழுத்துத்தான்-பொன்.காந்தன்


எண்ணிப்பார்த்தால்
இம்முறை ஏரோது ஒமிக்ரோன்தான்
மாஸ்க்கின் நடுவே மாதவன் பிறப்பு
இன்னும் சில நாளில்
இந்த ஆண்டை அனுப்ப வேண்டும்
பரிவு காட்டாமலே பறந்திருக்கிறது பன்னிரண்டு மாதம்
ஒரு வழியாக தப்பிவிட்டோமோ
எப்படி கும்பிடுபோடுவது
முதுசமா என்ன
முதுகிலே தொத்திவருகிறது கொரானோ
வருசம் முழுக்க வதைத்தது போதாதா
புருசனும் பெண்டாட்டியுமாய்
அறுந்து போனதுகள் கோவிட்டும் ஒமிக்ரோனும்
புளுக்குத்தலுக்கும் பூஞ்சணத்துக்குமென
கத்தரித்தோட்டம் போலாயிற்று தேகம்
விட்டுவிட்டு மருந்தடிப்பு
பூஸ்டரும் அடித்தால்தான் பூக்குமாம்
சீதனத்தை விட்டுவிட்டு
செம்மாங்கனி கொந்த முன்
ஊசிக்காட் கேட்கிறது ஊர்கிளி
இங்கிலாந்துக்கும் இலுப்பை கடவைக்கும்
ஒரே தலையெழுத்துத்தான்
மகா ஜனங்களே
மணியத்தாருக்கும்
மாண்புமிகு பைடனுக்கும்
மாஸ்க்கொடுத்து மட்டப்படுத்தியது ஆண்டு
இத்தால் அறிந்துகொள்வது
நோய் பிணியினால் மட்டும் சமநீதி
என்ன சொல்ல
நான்சன்ஸ்
காதுக்குடுமிக்கு பதிலாய்
சேதனம் வேதனமென்று வெளியே வருகின்றது
கொட்டி நிரப்பிக்கிடக்கிறது கோசங்கள்
ஆசுவாசமில்லாமலேயே
ஆயுளில் ஒரு வயது அட கடவுளே
நெட்டாண்டு தெரியும்
ஒட்டாண்டி ஆண்டு இப்போதுதான் அறிமுகம்
கர்மவினை காஸ்சிலிண்டர் வடிவிலுமா
என்னே திருவிளையாடல்
எம்பெருமானே நீர் எந்த மூலைக்கு
வையாபுரிகள் ஆளும் தேசங்களில்
கொய்யா பழத்தை கூட நம்பிக்கடிக்கமுடியாது
எல்லாம் எப்போது சுபம் என்று தெரியவில்லை
பழைய சாமான் விற்கும் கடையிலும்
பாதி இலங்கையை கண்டாலும் ஆச்சரியமில்லை
கேற்றில் மூடிபோல
கிலோ எவ்வளவென்று
கிளிநொச்சியை விலைபேசவும் கூடும்
கடன் கொடுத்தவரால்
கற்பழிக்கப்படுக்கின்றன நம் ஊர்கள்
ஐந்து லாம்படிச்சந்தியில்
ஆயுபோவனும் வணக்கமும் இன்றி
யாரோ எவனோ அறியா பாசைகளும் ஆளத்தொடங்கலாம்
அபசகுனங்கள் தெரிகின்றன
நல்லூர் முருகன் முழுசுகின்றார்
சிங்களம் கொஞ்சம் தெரியும்
சீசென் கொங்கை வேட்டியுடன் கண்டு
வெடவெடுத்துப்போனார்
பன்னிரண்டு கண்கொண்டு பாசாங்கு கண்டு
என்னேயிது சோதனையென இடிந்துபோனார்
இச்சா சக்தியும் கிரியா சக்தியும்
இந்தியா சீனாவாய் ஏறியதோ சமேதராய்
ஒரு பிடி மண் அருள
ஒப்பாது அவன் மனம் யாருக்கும்
பின் வீதியில்தான் ஒருவன்
பெருந்தவமியற்றினான் மண்காக்க
அன்னவனுக்கு இட்ட சத்தியம்
அதைமீறான் நல்லூரான்
புண்களை ஆற்றவேண்டும்
புளுக்கவிட்டால் எங்கிருந்தோ இலையான்கள் வரும்
இழுத்துக்கொண்டு போக நரிகள் பார்க்கும்
இடறுப்பட்டு நழுவும் இந்த ஆண்டு
இலங்கை மண் பற்றியும் எழுத வைக்கிறது
வளங்கள் உண்டு
வாழ ஆயிரம் வழிகளும் திசையெல்லாம்
தேவியின் திருமடியில்
இருந்தும் எங்கேயோ
எல்லோரும் வாய் பார்க்க வாழ்க்கை பட்டோம்
வருந்தவேண்டாமா இதற்காக
திருந்தவேண்டாமா இனியாவது

No comments:

Post a Comment

பிரசாதமே!!

  கொடிய போர் கண்ட நகரம் போலில்லை காலிழந்தவனுக்கு கால் முளைக்கும் உணர்ச்சியை கண்ணிழந்தவனுக்கு ஒளியூறும்  மனத்தை உண்டாக்கவில்லை யாரேனும் பறக்க...