Tuesday, May 25, 2021

பூக் கடை-பொன்.காந்தன்



அடிக்கடி
சாலைகள் வெறிச்சோடுகின்றன
ஒவ்வொன்றாய்
எல்லாவற்றிலும் இருந்து
எட்டி நிற்க தொடங்கினர் பயணிகள்
பூக்களில் வாசனையும்
மல்லிகையில் மயக்கமும் தவிர
வேறேதும் பரவிவிடக்கூடாதென
பிரார்த்திக்கிறாள் பூக்காரி
அச்சத்துக்குள்ளாகியிருக்கும்
பூமியின் நம்பிக்கையை
பூப்பந்தாக்கி தொங்கவிட்டிருக்கிறாள்
கூந்தலுக்கிடையில்
சுவாசத்தின் பேரின்பத்தை
ஒளித்து வைத்தாள் இன்னமும்
மோகன ராகத்தில்
பூமியை சுழல வைக்கும்
மன்மதர்களை அழைக்கிறாள்
முடிவிலாப் பாதையின் இருளில்
முட்டுச் சந்துக்குள் இழுத்து
முத்தமிட்ட மூச்சில்
கட்டி வைத்திருக்கும் சரங்களில்
ஆயிரம் கைகைள் அளையும் கனவு
எங்கும் தீர்ந்துவிட்ட மகிழ்ச்சி
இங்கேயுண்டு
எழுதி வைக்கிறாள் புது விளம்பரத்தை
கசப்பான அனுபவங்களை மூடிவிட
கனகாம்பரங்களை
தேடுகின்றது அவள் விழிகள்.

No comments:

Post a Comment

பிரசாதமே!!

  கொடிய போர் கண்ட நகரம் போலில்லை காலிழந்தவனுக்கு கால் முளைக்கும் உணர்ச்சியை கண்ணிழந்தவனுக்கு ஒளியூறும்  மனத்தை உண்டாக்கவில்லை யாரேனும் பறக்க...