Tuesday, May 25, 2021

புன்னகை-பொன்.காந்தன்

போர் முடிந்தபின்

மூன்று சிறு பிள்ளைகளுடன்
அகதி முகாமில் அவளை கண்டேன்
ஊர் திரும்பிய பின்
பள்ளி வாசலில் தினமும்
அந்த ஒரே நிற சட்டையுடன்
பல முறை கண்டேன்
அநேகமாக
எல்லா நிவாரண வரிசைகளிலும்
தொண்டு நிறுவன வாசலிலும்
அவள் நின்று கொண்டிருந்தாள்
பிறகு ஏதோ ஒரு
ஊதுபத்தி செய்யும்
பயிற்சி வகுப்பில் கண்டேன்
பிறகொரு முறை
இரண்டு வாழைக்குட்டிகளை
பழைய சைக்கிளில்
கட்டியபடி போய்க்கொண்டிருந்தாள்
பிறகொரு நாள் ஆடுகளோடு
கூடச் சென்றுகொண்டிருந்தாள்
புத்தகக்கடைகளில்
அடிக்கடி காணக்கிடைத்தது
புத்தகமொன்றை வாங்க
கையிலுள்ள காசு போதாமல்
தடுமாறிக்கொண்டு சமாளித்தாள்
ஒரு முறை மட்டும்
வாக்குறுதி மழை பொழிந்த
தேர்தல் கூட்டத்தில்
பின் வரிசையில் நனையக்கண்டேன்
விதானையார் வாசலில்
மின்சார சபை வாசலில்
சமுர்த்தி வங்கி வாசலில்
எங்கும் வியாபித்திருந்தாள்
பத்து ஆண்டுகளில்
ஒரு விதவையின் எத்தனை அவதாரம்
சில மாதங்களுக்கு முன்
வன்னித்தெருவின்
ஒரு நிழற்குடையிலும் கண்டேன்
புன்னகைத்தாள்
இப்போது புன்னகைக்க
அவளிடம்
ஏதோ ஒரு நிம்மதியும்
ஏதோ ஒரு வெற்றியும் இருக்கிறது
மட்டக்களப்பு போகிறேன்
மகனுக்கு பல்கலைக்கழகம்
கிடைத்துவிட்டது என்றாள்
அடுத்துவரும் காலத்திற்கு
எனக்கு நினைவில் நிற்கப்போவது
கண்ணீரல்ல
அவளின் புன்னகை

No comments:

Post a Comment

பிரசாதமே!!

  கொடிய போர் கண்ட நகரம் போலில்லை காலிழந்தவனுக்கு கால் முளைக்கும் உணர்ச்சியை கண்ணிழந்தவனுக்கு ஒளியூறும்  மனத்தை உண்டாக்கவில்லை யாரேனும் பறக்க...