ஆச்சியின் பெயர் இளைய பிள்ளை
முதலாம் உலக மகா யுத்தத்தின்
பின்னாக வந்த தசாப்தத்தில்
வடமராட்சி கரவெட்டியில் பிறந்தார்
இரண்டாம் உலக மாகா யுத்தம் நடந்தபோது
இளைய பிள்ளையின் குமரிப்பருவம்
வாழ்க்கையின் ஒரு பாதியை
இலங்கை
வெள்ளையர் ஆட்சியில் இருந்தபோது
கடந்து வந்திருக்கிறார்
முள்ளிவாய்க்கால் போரையும் அனுபவித்து
பதினொரு ஆண்டுகளின் பின்னர்
இந்த பூமியின் வாழ்வை முடித்துக்கொண்டார்
அப்போது இளையபிள்ளை ஆச்சிக்கு அகவு
கிட்டத்தட்ட ஒரு நூற்றாண்டுக்கு
சில ஆண்டுகள் குறைவாக இருந்தன
சில ஆண்டுகளுக்கு முன்னர்
புலம்பெயர் நாட்டில் வசிக்கும்
எனது நண்பன்
சிறீ இளங்கோவின் தாயார் இறந்தபின்
அவருடைய கல்வெட்டை எழுதுவதற்கு
என்னோடு அவன் உரையாடி இருந்தான்
இரண்டு நூற்றாண்டுகளில்
இரண்டு விதமான ஆட்சி முறைகளுக்குள் வாழ்ந்த
ஒரு மூத்த தலைமுறையின்
வாழ்க்கை குறிப்பை
வெறுமனே
புலம்பல்கள் இரங்கல்களோடு
கல்வெட்டாக்கி கரப்பான் அரிக்கவிடாமல்
அவர்களின் வாழ்க்கை காலத்தையும்
அக்காலத்தின் வண்ணங்களையும்
மண்வாசனையோடு பதிவு செய்யவேண்டுமென
அவன் விரும்பியிருந்தான்
எனக்கு அது பிடித்துப்போயிருந்தது
அவனுடைய தாயாருடைய முகத்தையும்
குணத்தையும் மட்டுமே
அறிந்திருந்த எனக்கு
அவன் சொன்ன விடயங்கள் ஆர்வத்தை ஊட்டின
எழுவைதீவில் அவனுடைய
தாயார் பிறந்து
சிறுமியாக உலவிய காலம்
இரண்டாம் உலக யுத்த காலம்
வெள்ளையரின் ஆட்சிக்காலம்
அக்காலத்தில் எழுவைதீவுக்கு அப்பால் கடற்பரப்பில்
போர்க்கப்பல்கள் நின்றதாகவும்
அவ்வப்போது அபாய சங்கொலி சத்தம் கேட்டு
காதுகளை அடைத்துக்கொண்டு
பதுங்கு குழிகளில்
பதுங்கியதாகவும் என்று
எனது நண்பனின் தாயாரின்
வாழ்க்கை பயணக்குறிப்பு தொடங்குகிறது
இளையபிள்ளை ஆச்சியின் காலமும் அவ்வாறுதான்
ஒரு நூற்றாண்டை அண்டியதாய்
வாழ்ந்து முடித்திருக்கிறார்
அந்த இரகசியத்தை தேடாமல் இருக்கமுடியாது
கடைசிவரை ஒல்லியான
நேர்த்தியான தோற்றத்துடன் இருந்தார்
இளைபிள்ளை ஆச்சியின் சிறிய வயதுக்காலத்தின்
உணவு பழக்கவழக்கம்
அடுத்த அடுத்த தலைமுறை அறியவேண்டியதும்
தேடவேண்டியதும் கடைப்பிடிக்கவேண்டியதுமே
அவர்களின் காலத்தில்
நல்ல தண்ணிக்கிணற்றுக்காக
சந்தைக்காக படமாளிகைக்காக திருவிழாவுக்காக
எல்லாம் கால் நடையின் மூலமே ஆகியது
அந்த தலைமுறையின் வாழ்க்கையில்
நடைதான் ஒரு வலிய வாகனம்
வல்லிபுர ஆழ்வாரின் திருவிழாவுக்கோ
செல்வச்சந்நிதியானிடமோ
குச்சொழுங்கைளுக்குள் இறங்கி
வயல் வரம்புகளில் நடந்து
மணல் வெளிகளில் கால் புதைய நடந்து திரும்பினார்கள்
அந்த நடையும் உணவும்தான்
ஒரு தலைமுறையை
நீண்ட ஆயுளுடன் நிறுத்தியது இந்த உலகில்
இளையபிள்ளை ஆச்சியின் தந்தை தாயார்
ஆயிரத்தி எண்ணூறுகளில் பிறந்தவர்கள்
வெள்ளையருக்கும் பண்டாரவன்னியனுக்கும்
போர் நடந்த காலத்தின் கதையை
தங்கள் பிள்ளைக்கு
சொல்லாமல் இருக்க வாய்ப்பிருந்திருக்குமா
உலகமயமாக்கல் பற்றிய
எந்த சிந்தனையுமற்ற காலத்தில்
நவீன யுகத்துக்குள்
உலகம் முழுவதும் இறங்காத தருணத்தில்
இளையபிள்ளையிள் ஒரு பாதி வாழ்வு இருந்திருக்கிறது
அக்காலத்தில்
ஊருக்குள் எந்த பத்திரிகைள் செய்தி காவி வந்தன
வன்னி குடியேற்றங்கள் அற்ற பெருங்காடாயிருந்தது
இரணைமடுக்குளம் இருந்தது
பட்டணங்கள் இருக்கவில்லை
ஆனையிறவு இருந்தது
ஆட்லறிகள் இருக்கவில்லை
கைத்தொலைபேசி என்பதும்
அதில்
முகநூல் வட்ஸப் ருவிற்றர் என்பதை
கற்பனையினும் கனவிலும் நம் மனிதர்கள் காணாத
ஒரு காலத்தில் வாழ்வை தொடங்கிய இளைய பிள்ளை
மரணம் எய்தியபோது
அவருடைய இறப்பு செய்தி முகநூல் ஊடே பகிரப்பட்டது
படலையில் வந்து தட்டி
ஊரில் நடந்த இளவுச்செய்தியை சொல்லிய காலத்தின் பிறந்து
இளையபிள்ளை ஆச்சி வாழ்ந்த காலங்களில் மாற்றத்தில்
துயர்பகிர்வு இணையங்களில் நடந்தன
இளையபிள்ளையிடம் சில நினைவுகளை கேட்பதற்கு
எனக்கு ஆர்வம் ஏற்பட்ட தருணத்தில்
அவருடைய நினைவுகளில் பல மங்கத்தொடங்கியிருந்தன
ஆயினும் அவருடைய நினைவில் நின்றவை
என்னை தொண்ணூறுகளுக்கு அழைத்துச்சென்றன
என்னுடன் இளையபிள்ளை ஆச்சி பேசும்போது
கிளிநொச்சியில் போரில் தரை மட்டமாகிப்போன
எங்களது வீட்டையும்
அந்த வீட்டை சுற்றியிருந்த தென்னந்தோப்பையும்
குளிர்மையையும் புளுதித்தெருவின் வாழ்வையும்
அப்படியே ஏதும் அழியாமல் கொண்டு நிறுத்தின
பின்னாளில் முள்ளிவாய்க்காலில் போரின்பின்
அகதி முகாமில் இறந்துபோன
எனது பெரிய தந்தையார் குணம்
உயிருடன் இருந்த
தொண்ணூறுகளின் கதைகதையை
திரும்ப திரும்ப
இளைய பிள்ளை எனக்கு சொன்னார்
அக்காலத்திலும் ஆனையிறவில் இருந்து
போர் கிளிநொச்சி நோக்கி வந்தது
அப்போது இளையபிள்ளை கிளிநொச்சியில்
அந்த எறிகணைகளையும் போரையும் அனுபவித்துக்கடந்தார்
ஆச்சியை போரி நாயகி என்றாலும் தப்பில்லை
இரணடாம் உலக மகா யுத்தம்
பிறகு வந்த கலவரங்கள் மரணங்கள் ஊரடங்கு சட்டங்கள்
பொருட்கள் தட்டுப்பாடுகள் என்று
இயல்பு குலைந்த காலத்தில் பயணத்திலும்
இளைய பிள்ளை
பாடுகளை சுமந்து சகித்து
மனவலிமையுடன் நீண்ட பயணம் செய்திருக்கிறார்
இளைய பிள்ளை இளமை காலத்தில்
வன்னிபெருங் காட்டு நிலத்தை
நினைத்துப்பார்த்திருக்க மாட்டார்
கரவெட்டிக்குள்ளேயே
வாழ்வு முழுதும் முடியுமென நினைத்திருக்ககூடும்
ஆனால் என்ன ஆயிற்று
இளையபிள்ளையின் காலத்திலேயே வன்னியில் சின்ன பட்டணங்கள்
கிராமங்கள் குடியேற்றங்கள் தோன்றிற்று
காடுகளுக்குள் சாலைகள் உருவாயிற்று
எத்தனை முறை இளையபிள்ளை
ஆனையிறவில் இறங்கி அடையாள அட்டைகாட்டி
மறுபடியும் பேருந்து ஏறியிருப்பார்
வன்னியிலும் மறுபாதி வாழ்க்கை
இளையபிள்ளை ஆச்சிக்கு கால நிர்ப்பந்தமானது
நெல்லியடியில்
ஒப்பரேசன் லிபரேசனுக்கு பிறகு
அநேகமாக ஒரு அகதியாக வன்னியின்
பல கிராமங்களில் வேருன்றிக்கொள்ள நேர்ந்தது
வன்னியில் புளுதித்தெருவில்
போர்க்காலத்தில் அத்தனை துன்பங்களை சுமந்து
எல்லா மனிதர்களையும் போலவே
வலி நிறைந்த வாழ்வுகளை கடந்தார்
மின்சாரமற்ற காலத்தில் பிறந்தார்
அவருடைய வாழ்க்கைக்காலத்தில்
அவருடைய தெருவில் மின்குமிழ்கள்
எப்போது ஒளிரத்தொடங்கின
வண்டில் மாடுகள் வழக்கொழிந்து
தட்டி வான்களுக்கு பிறகு
வாழ்க்கை மாற்றங்கள் எவ்வாறு இருந்தன
வன்னியில் குப்பி விளக்கிலும்
அவர் உணவருந்திக்கொண்டிருந்தார்
முள்ளிவாய்க்காலில் எங்கள் சனங்கள்
கஞ்சிக்கு வரிசையில் நின்றபோது
அந்த சனங்கள் இடையேயேயும்
அந்த கடற்கரை மணலில் குந்திக்கொண்டிருந்தார்
அகதி முகாம்களிலும் வாழ்வு கழிந்தது
பாட்டுக்கு கூத்தும் பனங்கட்டியும் கூழும்
காவடியும் திருவிழாவும் நிறைந்த
கரவெட்டியில் இருந்து காடுகள் மேடுகள்
குண்டுகள் வெடியோசைகள்
குருதிகள் மரணங்கள் பிணங்கள் இடையேயும்
தன் வாழ் நாளை கடந்த
இளைய பிள்ளை ஆச்சி
நினைத்துப்பார்க்கும் போது
இளைய பிள்ளை ஆச்சிபோல
இலங்கை
வெள்ளையர் ஆட்சிக்காலத்தில்
காலனித்துவத்தில் இருந்த காலத்தில் பிறந்து
இலங்கைக்கு சுதந்திரம் கொடுத்த காலத்தை கடந்து
தமிழருக்கு நினைவில் அழியா நெடுந்துயராயிருக்கும்
முள்ளிவாய்க்கால்வரையும் கூட பயணித்து
வலிய பிறவிகளாய் வாழ்ந்து
வானுலகம் சென்ற மூத்த தலைமுறையிடம்
இளைய தலைமுறைகள் கேட்க நிறைய உண்டு
பாட்டி வடை சுட்ட கதை
அவர்கள் சொல்லப்போவதில்லை
பழைமைக்கும் புதுமைக்கும் இடையில்
ஒரு பாலமாய் இருந்து
எப்படிக்கடக்கவேண்டும்
வரலாற்றை என்பதை அனுபவத்தில் சொல்வார்கள்
ஆச்சிகள் பற்றி ஒரு கோடு மட்டுமே இது
இதில் எழுத வேண்டியவை இன்னமும் நிறைய உண்டு

No comments:
Post a Comment