மாவரிசி பருப்பு சீனி
மளிகை சாமான் சக்கட்டு
வேட்டி சேலையுடு புடவை
வேறு மண்ணெண்ணை
கூப்பன் முத்திரைக்குமாய்
கூடிப் போய் நிற்கையிலே
வா வரிசையிலென்று குரல்
வாய் கிழியத் திட்டியெழ
போ முன்னுக்கென்றும்
பூராதே இடையிலென்றும்
காயும் வெயிலில் வெந்து
கழுத்தாவடியில் வேர்வை
கமக்கட்டிலும் பிசுபிசுத்தும்
வாசனைத் திரவியமாகி
வரிசையெலாம் பரவிவிட
வாய் குமட்டித் தலைசுற்ற
வந்த வேலை ஆகாமலங்கு
சங்கக் கடை வாசல்தோறும்
சாப்பாட்டு நிவாரணத்திலும்
இங்கோடிவாவென இழுக்கும்
ஏகப்பட்ட கழிவு கவர்ச்சியில்
பங்கு பிரித்து பகிர்ந்துபெற
எங்கும் கியூவிலிராப் பகலாய்
ஒன்று இரண்டு சிணுங்கியும்
ஏதோ மாயச் சிரிப்புதிர்ந்தும்
முன்னுக்காய் இடம்பிடித்தும்
பின்னுக்குப் பலர் மூஞ்சை
பார்வையில் பொறி பறக்க
நின்றைம் பொறி அடக்கி
நெளிந்தும் நசிந்து கசிந்தும்
கொண்டுவரப் போனசனம்
இன்றும் நிற்கிறது நிரையாய்
பை ஒன்று மில்லை கையில்
ஐயத்தில் எங்கும் பார்வை
ஆயுளை காக்கும் அவசரம்
செத்துவிடாமல் இதயங்கள்
சீக்கிரம் நின்று விடாமலும்
செயற்கை காற்றொக்சிசன்
சிலிண்டரொன்று வீட்டில்
முன்னாயத்தமாய் வாங்க
முண்டியடிக்கிறது தெருவில்
மூச்சுக் காற்றின் பெறுமதி
முனிவர் தரும் வரும்போல
காற்றுக்கலையும் காலமிது
கடைசி இடு காடுகளிலும்
பிணங்களும் காத்துள்ளன
ஏகப்பட்டதாய் வரிசையில்
என்ன சொல்கிறதிந்த பூமி
இந்த மானுடக் கூட்டத்துக்கு

No comments:
Post a Comment